பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் பிரபு தேவா மற்றும் டாக்டர் ஐசரி கே. கணேஷ் இருவரும் தயாரிக்க, பிரபுதேவா , தமன்னா , சோனு சூட், ஆர் ஜே பாலாஜி, ஆகியோர் நடிப்பில்
இயக்குனர் விஜய் தமிழ் தெலுங்கு இந்தியில் இயக்கும் மும்மொழிப் படத்தின் தமிழ் வடிவம் தேவி . இது ஸ்ரீதேவியா? இல்லை மூதேவியா ? பார்க்கலாம்
கோவை மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து மும்பையில் பணியாற்றும் நாயகனுக்கு (பிரபுதேவா ) ஒரு அல்ட்ரா மாடர்ன் பெண்ணை கல்யாணம் செய்ய வேண்டும் என்பதுதான் லட்சியம் .
அதற்கான முயற்சிகள் பலன் தராத நிலையில் ஊரில் பாட்டி சீரியஸ் என்று தகவல் வர, ஊருக்கு வருகிறான்.
சாகும் நிலையில் இருக்கும் பாட்டி கண் மூடுவதற்குள்ளாக அவர் கண் முன்பாகவே பிரபுதேவாவுக்கு திருமணம் செய்து வைக்க, ஆதிகால இந்திய சினிமா வழக்கப்படி முடிவாகிறது
தேவி என்ற ஏழைப் பெண் ஒருத்தியை (தமன்னா) திருமணம் செய்து கொண்டு , மனைவியோடு மும்பை வருகிறார்
புதிதாக வாடகைக்கு வரும் வீட்டில் முன்பு குடியிருந்த ரூபி என்னும் நடிகை, தனது முதல் படம் ரிலீஸாகாத சோகத்தில் தற்கொலை செய்து இறந்து போயிருக்கிறாள்
நடிப்பாசையுடன் வீட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்த ரூபி, தேவியைப் பிடித்துக் கொள்கிறாள். அவளை ஸ்டார் ஹோட்டலில் நடனமாடவும் வைக்கிறாள்.
அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ராஜ் கண்ணா தேவியை தனது படத்தில் ஹீரோயினாக புக் செய்ய ஆள் அனுப்புகிறார்.
மனைவியை பிடித்த ரூபி “இந்த ஒரு படத்தில் மட்டும் சூப்பர் ஸ்டார் ராஜ் கண்ணாவுடன் சேர்ந்து நடித்துவிடுகிறேன். அதன் பின்பு உன் தேவியை விட்டுவிடுகிறேன்…” என்று சொல்கிறாள்
நடிப்பு வெறி பிடித்த பேயான ரூபி சொன்னபடி நடந்து கொண்டாளா..? தேவியின் கதி என்ன ஆனது..? என்பதே இந்தப் படம்
அப்பாவி தேவியாகவும், ஆசை கொண்ட ஆவி ரூபியாகவும் மாறி, மாறி வரும் காட்சிகளில் தமன்னாவின் நடிப்பும், உடல் மொழியும் அருமை . நடனமும் அபாரம்.
ஆர்.ஜே.பாலாஜி பிரபுதேவாவின் நண்பராக வந்து சில இடங்களை சமாளித்திருக்கிறார். மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு சிறப்பு
கிராமத்துப் பெண் என்பது ஒரு குணாதிசயம் .தொளதொள ஜாக்கெட், டல் மேக்கப் , கணவன் பின்னால் குதித்து குதித்து ஓடுவதால் தமன்னா கிராமத்துப்பெண்ணாகி விடுவாரா ?
தலைவிரி கோலம் . வெள்ளை சேலை, கோரமான முகங்கள், ரத்தம், வீல் என அலறல், மல்லிகைப்பூ, பின்னணியில் புகை எல்லாம் இல்லை என்பது வித்தியாசம் என்ற வகையில்தான் ஓகேதான்.
ஆனால் ஆப்பரேஷன் சக்சஸ் ஆவதா முக்கியம் . பேஷன்ட் பிழைக்கணுமே
இது போதாது என்று கதை மும்பையில் நடக்கிறது என்ற வசதியில் செலவைக் குறைக்க பல காட்சிகளில் இந்தியில் எடுத்த காட்சிகளை மொழி மாற்றிப் போட்டு இருப்பது போங்கு.
தேவி …. சாவி