
பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் பிரபு தேவா மற்றும் டாக்டர் ஐசரி கே. கணேஷ் இருவரும் தயாரிக்க, பிரபுதேவா , தமன்னா , சோனு சூட், நாசர், ஆர் ஜே பாலாஜி, சதீஷ் ஆகியோர் நடிப்பில்
இயக்குனர் விஜய் தமிழ் தெலுங்கு இந்தியில் இயக்கும் மும்மொழிப் படத்தின் தமிழ் வடிவம் தேவி .
மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டை ஒட்டி நடந்த பத்திர்கையாளர் சந்திப்பில்
படத்தின் இரண்டு பாடல்களும் முன்னோட்டமும் திரையிடப்பட்டது
கிராமத்துப் பெண் தமன்னாவை பட்டணத்து பந்தா உள்ள மாப்பிள்ளை பிரபுதேவா மணந்து கொண்டு கிராமத்துப் பெண் தானே என்று அலட்சியப்படுத்த ,
அந்த கிராமத்துப் பெண்ணின் உடம்புக்குள் ஒரு நடிகையின் ஆவி புகுந்து கொள்கிறது . விளைவாக தமன்னா மிகப் பெரிய நடிகை ஆகி,, பிரபல ஹீரோக்களுடன் நடிக்க ,
பிரபு தேவா தனது மனைவி நம்மை விட்டுப் போய் விடுவாளோ என்ற பயத்தில் ,
தன் மனைவியின் உடம்பை விட்டுப் போய் விடுமாறு டீல் பேச , அந்தப் பெண் தமன்னா உடம்பை விட்டுப் போக மறுக்க …
கதை இப்படிப் போகிறது என்பது முன்னோட்டத்தில் தெரிகிறது .
ஒன்றரை நிமிட முன்னோட்டத்தில் ஏராளமான விசயங்களை நெருக்கித் தொகுத்து டைட்டாக அட்டகாசமாக கொடுத்துள்ளார் இயக்குனர் விஜய் .(படத்தொகுப்பு ஆண்டனி )
சல்மான் என்று துவங்கும் தனது ஒப்பனிங் பாடலில் வழக்கம் போல சுறுசுறுப்பாக ஆடி இருக்கிறார் பிரபுதேவா .
அஞ்சு குதிரை தேருக்குப் பதில் அஞ்சு பைக் இழுக்கும் தேரை ஒட்டி வருவது செம ஐடியா .
எனினும் ‘ஒக்கா மக்கா..’ என்று துவங்கும் பாடலில் தமன்னா ஆடும் தெறிப்பான ஆட்டம் ஆசம் அட்டகாசம் .
நிகழ்ச்சியில் பேசிய ஆர் ஜே பாலாஜி ” இந்தப் படத்தில் எல்லாருமே சிறந்த கலைஞர்கள் . அவர்களோடு நான் என்பதுதான் எனக்கு சந்தோஷமான விஷயம் .
என்னால் முடிந்தவரை சிறப்பாகவே நடித்துள்ளேன் .
உங்களில் யார் பிரபுதேவா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவன் நான் . அவரோடு நடிப்பது சந்தோசம் . தமன்னா கூட நடித்தும் அப்படியே .
எனக்கு இப்படி ஒரு வாய்ப்பைக் கொடுத்து இப்போது நெருங்கிய நண்பனாகவும் ஆகி விட்ட இயக்குனர் விஜய்க்கு நன்றி ” என்றார் .
சோனு சூட் பேசும்போது ” கள்ளழகர் படைத்தில் வில்லனாக நடிக்கத்தான் முதன் முதலில் சென்னை வந்தேன். அந்தப் படத்தில் தமிழ் வசனங்களை மனப்பாடம் செய்து பேசினேன் .
அது இன்னும் ஞாபகம் உள்ளது . சென்னை எப்போதுமே எனக்கு ரொம்ப பிடித்த ஊர் . இந்தப் படத்தில் நடித்தது ரொம்ப சந்தோசம் .
தேவியின் இந்தி வடிவமான தூத்துக்கு தூத் படத்தை நானே தயாரிக்கிறேன் ” என்றார் .
ஐசரி கணேஷ் தன பேச்சில் ” இயக்குனர் ஏ எல் விஜய் என் மாணவர் . எங்கள் கல்வி நிறுவனத்தில் பயின்றவர். அவர் திரை உலகுக்கு வந்த போதே அவரோடு சேர்ந்து பணியாற்ற விரும்பினேன் .
அப்படியே செய்து வருகிறேன் . இந்தப் படத்தின் மூலம் பிரபு தேவாவை மீண்டும் கொண்டு வர விரும்பினேன் .
அப்படியே நடந்தது . படம் மிக சிறப்பாக வந்துள்ளது . தொடர்ந்து பிரபுதேவா ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து படங்கள் செய்வேன் ” என்றார்.
தமன்னா பேசும்போது ” படத்தின் கதையை இயக்குனர் விஜய் என்னிடம் சொல்ல ஆரம்பித்த பதினைந்தாவது நிமிடத்தில் ‘போதும் சார் . இந்த கேரக்டர் பிரம்மாதமா இருக்கு . நான் பண்றேன்’னு சொல்லிட்டேன் .
பிரபுதேவா மாஸ்டரோட தீவிரமான ரசிகை நான். அவரை ஒரு முறை பார்த்து பேசணும்னு எல்லாம் ஆசைப்பட்டு இருக்கேன் . அவரோட நடிக்கவே வாய்ப்புக் கிடைச்சது பெரிய விஷயம் .
தமிழ்ல ஆர் ஜே பாலாஜி நடிக்கிற கேரக்டர்ல தெலுங்குல் வேற ஒருத்தரும் இந்தில வேற ஒருத்தரும் நடிக்கிறாங்க . ஆனா மூணு பேருல ஆர் ஜே பாலாஜிதான் பெஸ்ட் ” என்றார் .
பிரபுதேவா தனது பேச்சில் ” பல வருடம் கழித்து மீண்டும் நான் தமிழில் நடிப்பது குறித்து பலரும் சந்தோஷப் படுகிறார்கள் . அவர்களுக்கு என் நன்றி
.ஆறு படங்களை தமிழிலும் அதே நேரம் மற்ற மொழிகளிலும் தயாரித்து வருகிறேன் .
இந்த தேவி படத்தை இயக்குனர் விஜய் மூன்று மொழிகளிலும் பிரம்மாதமாக இயக்கி இருக்கிறார் . இனி அவருக்கு நிறைய இந்திப் படங்கள் வரும் .
தமன்னா மிக சிறப்பாக நடித்துள்ளார் . தவிர அவர் எவ்வளவு சிறப்பாக ஆடியுள்ளார் பாருங்கள் .
இரண்டு நாளில் எடுக்கப்பட்ட பாடல் அது . ஆனால் இருபது நாள் ரிகர்சல் எடுத்துக் கொண்டார் .
முதல் நாள் ரிகர்சலில் ஆடிய அவர் அடுத்த வரவில்லை . கேட்டால் வலி பொறுக்க முடியவில்லை என்றார் .
அடுத்த நாள் வந்தார் பிரம்மாதமாக ஆடினார் .
தவிர ஒரே கதை ஒரே கேரக்டர் மூன்று மொழிகள் அடுத்தடுத்த ஷாட்கள் .
டென்ஷன் தாள முடியாத தமன்னா ஒரு நாள் கேரவானில் உட்கார்ந்து குமுறிக் குமுறி அழுது விட்டு வந்தார் .
ஆனால் கடைசியில் நடிப்பில் அசத்தி விட்டார் ” என்றார்
சிறப்புரை ஆற்றிய இயக்குனர் விஜய் ” இந்த நேரத்தில் என் படத்தின் பாடல்களுக்கு உயிர் கொடுத்த மறைந்த நா. முத்துக்குமாரை நினைத்துப் பார்க்கிறேன் .
அந்த இழப்பை எப்படி ஈடு கட்டுவேன் என்று தெரியவில்லை . இப்போது நம்மிடையே இங்கே அவரும் இருப்பார் என்று நம்புகிறேன்
தயாரிப்பாளர் கணேஷ் சார் இல்லை என்றால் இந்தப் படம் சாத்தியம் இல்லை . அவரால்தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்தது .
தமன்னாவின் நடிப்பும் நடனமும் இந்தப் படத்தில் மிக சிறப்பாக வந்துள்ளது.
ஆரம்பத்தில் இதை நான் ஹீரோயின் சப்ஜெக்ட் ஆகத்தான் உருவாக்கினேன் . ஆனால் பிரபு தேவா சார் உள்ளே வந்த பிறகு , அது அப்படியே அவருடைய படமாக மாறி விட்டது .
அப்படியானால் இந்தப் படத்தில் அவரது உள்ளீடு எவ்வளவு இருக்கும் என்று புரிந்து கொள்ளலாம் .
பொதுவாக பிரபு தேவாவை எல்லோரும் டான்சர் ஆகத்தான் பார்க்கிறோம் . ஆனால் அது மட்டுமல்ல .. அவர் மிக சிறந்த நடிகர் கூட .
இனி நம் இயக்குனர்கள் அவரை நடிகராக நன்கு பயன்படுத்த வேண்டும் . அவரும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும்.
இந்தப் படத்துக்கு நான் பிகவும் கஷ்டப்பட்டு விட்டேன் . இந்த அளவுக்கு இன்னொரு படத்துக்கு கஷ்டப்பட முடியுமா என்று தெரியவிலை
முடியும் என்று பிரபுதேவா சொன்னார் . பார்ப்போம் . இந்தப் படம் எல்லோரையம் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை ” என்றார் .
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லாருக்கும் நா. முத்துகுமார் எழுதிய பட்டாம்பூச்சி விற்பவன் கவிதை நூல் வழங்கப்பட்டது .
அவ்ரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிடும் தேவி அக்டோபர் 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது .