குருவி குந்தியதால் பனம் பழம் விழுந்ததோ .. இல்லை பனம் பழம் விழப் போகும் நேரம் பார்த்து குருவி குத்த வச்சு குந்துச்சோ …. யாருக்கு தெரியும் ?
ஆனா, குருவியதான் எல்லாரும் குறி வச்சு குதர்றாங்க…
ஜிகிர்தண்டா படத்தின் ரிலீசை இயக்குனர், ஹீரோ இருவருக்கும் சொல்லாமலேயே தயாரிப்பாளர் தள்ளிப் போட்ட விவகாரம்தான். !
பீட்சா வந்து.. வந்ததை தின்னு … தின்னதும் செரிச்சு … (இதுக்கு மேல வேணாம்) இப்படி ரொம்ப நாள் ஆன பிறகே சித்தார்த் லட்சுமிமேனன் இருவரையும் கலந்துகட்டி அடிச்சு , ஜில்லென்று ஜிகிர்தண்டாவை யாக ஆரம்பித்தார் கார்த்திக் சுப்புராஜ் . பார்ட்டி வெஸ்டர்ன் ஐட்டத்தில் இருந்து நாட்டு குடிக்கு வந்ததில் நமக்கெல்லாம் சந்தோஷம்தான்.
ஆனால் படம் முடியும் சமயத்தில் பல வகையில் இயக்குனருக்கும் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசனுக்கு முட்டிக் கொண்டது. ‘படம் மூணு மணி நேர அளவுக்கு மூச்சு முட்ட ஓடுதே . குறைக்கலாமே கொஞ்சம்’ என்று தயாரிப்பாளர் சொன்னபோது, கார்த்திக் சுப்புராஜ் “குறைச்சா படத்தோட வெயிட் போயிடும்’ என்று மறுத்ததாக ஒரு தகவல் . (வெயிட் பத்தி பேச அவருக்கு இல்லாத தகுதியா ?)
படத்தில் இருக்கும் கச்சா முச்சா வார்த்தைகளை கொஞ்சம் நீக்கினால் இப்போது கிடைத்திருக்கும் ஏ சர்டிபிகேட்டை யூ சர்டிபிகேட்டாக பெறலாம் என்று தயாரிப்பாளர் கூறியபோதும் “முடியாது .அதையெல்லாம் குறைச்சா படத்தோட யதார்த்தம் போயிடும்” என்று கார்த்திக் சுப்புராஜ் மறுத்ததாக இன்னொரு தகவல். பதார்த்தத்தின் ருசி அவருக்குதானே தெரியும்
என்றாலும் போதாதா ? இயக்குனரும் தயாரிப்பாளரும் முட்டிக் கொள்ள இது போதாதா?
ஒரு வழியாக படம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) வெளியாகும் என்று விளம்பரம் எல்லாம் விறுவிறுப்பாக வந்த நிலையில் திடீரென்று பட வெளியீட்டை தள்ளி வைத்து விட்டார் கதிரேசன் .
கொந்தளித்துப் போயிருக்கிறது கார்த்திக் சுப்புராஜ் , ஹீரோ சித்தார்த் கூட்டணி. ” படம் வெளியாகும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில் எங்களிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் படத்தை தள்ளி வைத்து விட்டார்கள். உள்ளே சிலர் புகுந்து குழப்பி விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்துகிறார்கள். இதனால் எல்லாம் நல்ல சினிமாவை வீழ்த்த முடியாது” என்று அறிக்கை விட்டு ஆடியிருக்கிறார் நாயகன் சித்தார்த்.
”பொதுவாக, படத்தை சரியான சமயத்தில் வெளியிட ஹீரோ , இயக்குனர் , இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், விநியோகஸ்தர், தியேட்டர்காரர்கள் (இவர்களில் யாராவதோ அல்லது சிலரோ ) ஒத்துழைக்கவில்லை” என தயாரிப்பாளர்கள் புலம்புவதுதான் கோடம்பாக்கத்துக் குல வழக்கம். ஆனால் ‘இங்கே என்னடா இது… தலை கீழாக இருக்கிறதே?’ என்று பார்த்தால்…
கைகள் நீள்வது தனுஷை நோக்கிதான்!
அதாவது … ஒரு இடைவேளைக்கு பிறகு தனுஷ் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் ஜெயித்து இருக்கும் படம் வேலை இல்லாப் பட்டதாரி, வசூலில் நன்றாக கல்லா கட்டி வரும் சமயத்தில் அடுத்து ஒரு வாரத்துக்கும் போட்டி இல்லாமல் இருந்தால் நமக்கு வசதியாக இருக்குமே என்று யோசித்தாராம் தனுஷ் . .
வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருந்த படங்கள் ஜிகிர்தண்டாவும் திருமணம் எனும் நிக்காஹ் படமும்தான் . ஜிகிர்தண்டாவுக்கு இருக்கும் எதிர்பார்ப்பில் படம் நன்றாக இருந்துவிட்டால் அது வேலை இல்லா பட்டதாரியை பாதிக்கலாம் என்று தோன்ற ….
தனது நெடுநாள் நண்பரான ஜிகிர்தண்டா தயாரிப்பாளர் கதிரேசனின் காதில் கருத்தைப் போட்டாராம் தனுஷ்.
‘நண்பனுக்கு நல்ல விதமாக உதவிய மாதிரியும் ஆச்சு . சொன்னதைக் கேட்காத இயக்குனருக்கு எதிராக சுக்கு மாந்தடியை சுழற்றிய மாதிரியும் ஆச்சு’ என்று, ஒரு டம்பளருக்கான காசில் ரெண்டு ஜிகிர்தண்டா குடிப்பது மாதிரி ,
டைரக்டருக்கும் ஹீரோவுக்குமே சொல்லாமல் தனது ஜிகிர்தண்டா படத்தின் ரிலீசை தள்ளிப் பொட்டு விட்டாராம் கதிரேசன் .
தேவையிலாமல் தள்ளிப் போனால் படத்துக்கு கெட்ட பேர் வராதா, வரதா?
என்ன பண்ண……?
உள்ளுக்குள்ள அம்புட்டு கோபம் கொதிச்சுக் கொப்பளிச்சுக் கொந்தளிச்சுக் கெடந்துருக்கு !