இயக்குனர் ஏ சி திருலோகச்சந்தர்….
புரட்சித் தலைவர் எம் ஜிஆரை அன்பே வா படத்தில் மிக அழகிய கதாபாத்திரத்தில் வளைய வர வைத்த நவீன சிந்தனையாளர் …
தெய்வமகன் , இரு மலர்கள் , என் தம்பி, எங்கிருந்தோ வந்தாள், பாரத விலாஸ் , பாபு , எங்க மாமா , டாக்டர் சிவா, அன்பே ஆருயிரே உட்பட, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் கால் செஞ்சுரி படங்களை இயக்கிய மேதை …
நடிகர் சிவகுமாரை ஏ வி எம்மின் காக்கும் கரங்கள் படம் மூலம் திரையுலகுக்கு கொண்டு வந்த பிரம்மா……
மேற்சொன்ன படங்களில் பல படங்களில் ஏ வி எம் நிறுவனத்தின் படங்கள் என்பதோடு , அதே ஏ வி எம் நிறுவனத்தின் தயாரிப்பில் வீரத் திருமகன் , நானும் ஒரு பெண், ராமு , அதே கண்கள் போன்ற மறக்க முடியாத படங்களை கொடுத்த கலைச் சிற்பி …
எம்ஜிஆரின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்றான ஜெனோவா படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அனுபவ சாலி ..
அந்தக் காலத்திலேயே எம் ஏ படித்து விட்டு சினிமா உலகுக்கு வந்த முதுகலைப் பட்டதாரி ….
ஏ வி எம் சரவணின் நீண்ட கால நெருங்கிய நண்பர் …
ரஜினியைக் கட்டமைத்த இயக்குனர் எஸ் பி முத்துராமனின் குருநாதர் ….
வெற்றி விழாப் படங்களை விரல் நுனியில் இருந்து உதிர்த்துக் கொண்டே இருந்த திறமைசாலி…
–இப்படி பல சிறப்புகளுக்கு சொந்தக்காரர்தான் இயக்குனர் ஏ.சி.திருலோகச் சந்தர்.
தமிழ் திரையுலகின் மரியாதைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான ஏ.சி.திருலோகச்சந்தர், தனது திரையுலக அனுபவங்களை நெஞ்சம் நிறைந்த நினைவுகள் என்ற பெயரில் எழுத , வசந்தா பிரசுரம் அதனை வெளியிட்டுள்ளது .
சென்னை மைலாப்பூரில் உள்ள மேனா திருமண மண்டபத்தில் மிக எளிமையாக நடந்த அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவில், நூலை நல்லி குப்புசாமி வெளியிட நடிகர் சிவகுமார் பெற்றுக் கொண்டார். ஏ வி எம் சரவணன் , வசந்தா பிரசுரம் சுவாமி நாதன் , எஸ்.குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .