எல்லா திரையரங்குகளுக்கும் ஒரு காலத்தில் படங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. அடுத்து வந்த ஒரு மாற்றத்தில்… இருக்கிற திரையரங்குகளுக்கு போதுமான படங்கள் கிடைக்கவில்லை. விளைவு? பல திரையரங்குகள் இடிக்கப்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்பாக வணிக வளாகங்களாக மாறின. டூரிங் டாக்கீஸ் என்னும் ‘மண்வாசனை’ மிக்க கலாச்சாரம் அழிந்தே போனது.
இதை எப்படி சரி செய்வது என்று யோசித்தபோதுதான் , சினிமா பார்ப்பதற்கு மட்டுமே வந்து போகும் கஷ்டத்தை மக்களுக்கு தருவதால் பலன் இல்லை என்று முடிவாகியது. சாப்பிட வரும்போது சினிமா.. ஷாப்பிங் வரும்போது சினிமா . அல்லது சினிமா பார்க்க வந்துவிட்டு அப்படியே இவற்றையும் செய்து கொள்வது…. என்ற பல்வினைப் பயன்பாட்டில் மல்டிபிளக்ஸ் மால் தியேட்டர்கள் வந்தன.
அதுவரை தியேட்டர் உரிமையாளர்களாக இருந்த நம்மவர்கள் பலர் அங்கே இல்லாமல் வெளிமாநில பெருந் தொழிலதிபர்கள் கையில் திரையரங்கு உரிமை போய்க் கொண்டிருப்பது ஒரு வருத்தமான விஷயம் என்றாலும் திரையரங்குகள் சற்றே தங்களை மீட்டெடுக்க இந்த மாற்றம் உதவியது.
அதற்கேற்ப நிறைய பேர் புதிதாக படம் எடுக்கவும் வந்தார்கள். சரியானதோ சரியில்லாததோ… நல்லதோ கெட்டதோ… வெந்ததோ வேகாததோ … நிறைய படங்கள் வந்தன. அதனால் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது இல்லை என்ற தலைகீழ் நிலைமை வந்தது .
அப்படியே படம் கிடைத்தாலும் முதல் மூன்று நாட்களுக்குள் மக்கள் வந்து குவிந்தால்தான் அந்த படம் அடுத்த நாள் தியேட்டரில் இருக்கும் . இல்லை என்றால் காட்சிகளையே கேன்சல் செய்து விடுவார்கள். அடுத்த வெள்ளிக் கிழமை வேறு படம் வந்து விடும்.
ஆனால் மக்களுக்கு இப்போது சினிமா தவிர வேறு பொழுதுபோக்குகள் ஏராளம் . ரசிகக் குஞ்சுகளை தவிர , வேறு யாரும் எந்த படத்துக்கும் தவம் கிடைப்பது எல்லாம் கிடையாது. நல்ல படம் என்று தெரிந்தால் நின்று நிதானித்து… அந்த பொழுது போக்குகளை எல்லாம் விட இந்த சினிமா முக்கியம் என்று தெரிந்தால்-அவன் நினைத்தால்- தான் உள்ளே வருவான்.
ஆனால் அதற்குதான் வாய்ப்பில்லை என்பதை முந்தைய பத்தியில்தான் பார்த்தோமே …
பதினாறு வயதினிலே படம், வெளியான முதல் சில நாட்கள் யாரையும் ஈர்க்கவில்லை. சில நாட்கள் சென்று, படம் பார்த்த சிலர் பாராட்ட, அது பரவ… எல்லோரும் பார்க்க வரும்வரை திரையரங்கில் படம் இருந்தது . ஒரு இயக்குனர் இமயம் பாரதிராஜா நமக்கு கிடைத்தார்.
ஒரு தலை ராகம் படம் வந்தபோது எல்லோரும் புதுமுகம் என்பதால் யாரும் உள்ளே போகவில்லை . பழக்கதோஷம் காரணமாக சிலர் திரையரங்குக்கு போய் அந்த படத்தை பார்க்க.. பார்த்தவர்கள் வியந்து போய் வெளியே சொல்ல … மக்கள் வரும்வரை திரையரங்கில் படம் இருந்தது . அடுத்தவாரம் திரையரங்குகளில் எல்லாம் தீ பிடித்தது — காதல் தீ ! ஒரு சகலகலா வல்லவன் டி.ராஜேந்தர் நமக்கு கிடைத்தார்.
ஷூட்டிங் நடக்கும்போதே ஒரு வார இதழில் தொடர் கதையாக எழுதப்பட்டும், மவுன கீதங்கள் படம் வெளிவந்து ஒரு வாரம் வெற்றி பெறவில்லை . பார்த்தவர்கள் பாராட்ட, அதன் மூலம் மற்றவர்கள் திரையரங்குக்கு வர, பத்து நாள் ஆனது. அதுவரை திரையரங்கில் படம் இருந்தது . விளைவாக ஒரு கோடிக்கு விற்பனையான முதல் தமிழ் திரைப்படத்தை உருவாக்கிய கே.பாக்யராஜ் கிடைத்தார் .
ஆனால் இன்று எத்தனை பாரதிராஜா , டி.ராஜேந்தர் , பாக்யராஜ்கள் மூன்று நாளுக்குள் தங்களது திறமை மூச்சை நிறுத்திக் கொள்கிறார்கள்..!
இது ஒரு பக்கம் இருக்க… எடுக்கப்பட்டு, ஒரு காட்சி ஓடக் கூட தியேட்டர் கிடைக்காமல் முடங்கிக் கிடக்கும் தமிழ்ப் படங்கள்… அதனால் மக்கிக் கொண்டிருக்கும் பணங்கள்.. பல நூறு கோடி .
இவர்களுக்கெல்லாம் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் சேரன் துவக்கி இருக்கும் நிறுவனம்தான் C2H. அதாவது CINEMA 2 HOME. புரியும்படி சொன்னால் CINEMA TO HOME . சினிமா.. வீட்டுக்கு !
இது பற்றி சேரன் சொல்லும் விளக்க உரையை அவரது வார்த்தைகளிலேயே படிக்க கீழ் வரும் இணைப்பை சொடுக்கவும் .
படித்து விட்டீர்களா?
இதற்காக சேரன் சென்னை காமராஜர் அரங்கில் ஒரு நிகழ்ச்சி நடத்தி பாரதிராஜா, பெப்சி தலைவர் அமீர் , சீமான், கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கே ஆர் , இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் உட்பட திரையுலகின் பல பெரிய– சிறிய, இளைய– முதிய , பழைய — புதிய , சம்பாதித்த– நஷ்டப்பட்ட பிரமுகர்கள் கலந்து கொள்ள, தனது C2H திட்டத்தை விலாவாரியாக விளக்கினார் . சேரனை வாழ்த்தி கமல் பேசியது திரையிடப்பட்டது
விழாவில் பேசிய அமீர் “தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி –FEFSI –Film Employees Federation of South India) என்பது தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்டா – FEFTA – Film Employees Federation of TAmilnadu ) என விரைவில் மாறும் ” என்ற தேனினும் இனிய செய்தியை சொல்லிவிட்டு “சேரனின் இந்த முயற்சிகளுக்கு ஆதரவு கொடுப்பேன் ” என்றார் .
சீமான் பேசும்போது “பாரதிராஜா போன்ற பெரிய கலைஞர்களை அரசு தத்தெடுக்க வேண்டும் . மாதம் பத்து லட்ச ரூபாய் அரசு சம்பளம் . தமிழகத்தின் கலை கலாச்சார பெருமையை சொல்லும்படியான படங்களை தயாரிக்கும் வேலையை அவர்களுக்கு தரவேண்டும் ” என்று கூறி ”சேரனுக்கு ஒத்துழைப்பு தருவோம் என்றார் .
கே ஆர் தனது பேச்சில் ” ஹாலிவுட் படங்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு திரையரங்கம் மூலம் கிடைக்கும் வருமானம் 20 சதவீதம்தான்.80 சதவீதம் சேட்டிலைட், ஆன்லைன் நுகர்வு மூலம்தான் கிடைக்குது . ஆனால் நம்ம ஊரில் 80சதவீதத்துக்கு நாம் தியேட்டரை நம்பறோம். ஆனா அது மாறணும். அதுக்கு சேரனின் C2H உதவும்.எனது ஆதரவு உண்டு ” என்றார் .
பாரதிராஜா பேசும்போது “நல்ல செய்தி சொன்னான் அமீர். சீக்கிரம் தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் வரணும் . நடிகர் சங்கத்தையே தமிழ்நாடு நடிகர் சங்கம்னு மாத்தணும்னு எவ்வளவு நாளா சொல்றோம் . யாரும் கேட்க மாட்டேங்கறான். எவனும் உப்பு போட்டு சோறு திங்கல. அவன்தான் எல்லாரும் பிரிச்சுட்ட்டு தனித்தனியாக போய்ட்டானே. அப்புறம் என்ன தென்னிந்தியா ?”” என்று கேட்டுவிட்டு , ஒரு படம் எடுத்து தான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொல்லி, “சேரனுக்கு எனது ஆதரவு உண்டு” என்றார்
நல்ல விஷயம். தான் சொல்வதை சேரனால் C2H மூலம் சாதிக்க முடியுமா ?
முடியும் என்பதில் உள்ள வாய்ப்புகளை பார்ப்போம்
சென்ற 2013 – 2014 ஆண்டில் தயாரிக்கப்பட்ட படங்கள் 298. இதில் லாபம் கொடுத்த படங்கள் 12. ஆனால் ரிலீஸ் ஆன படங்கள் 145தான் . ரிலீசே ஆகாத படங்கள் 153. இந்த 153 படங்களுக்கும் சேரனின் திட்டம் உயிர் நீர் ஊற்றும் என்பதில் ஐயம் இல்லை .
இந்தப் படங்கள் திருட்டு விசிடியாக அல்லாமல் C2H மூலம் ஒரு சிடி 50 ரூபாய் என்ற ரீதியில் மக்களுக்கு நேரடியாக செல்லும் பட்சத்தில் படத்தின் தரத்துக்கு ஏற்ப விற்பனையாகும். அதற்கேற்ப வருமானம் வரும் .முப்பது ரூபாய்க்கு கேமரா பிரின்ட் எடுக்கப்பட்ட மங்கலான படத்தை கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்ப்பதை விட , எக்ஸ்ட்ரா இருபது ரூபாயில் கிடைக்கும் நல்ல சிடி ரசிகனுக்கு சந்தோஷம்தான் கொடுக்கும். தவிர திருட்டு விசிடி பார்க்கும் குற்ற உணர்ச்சியும் இல்லை .
சேரனின் C2H திட்டத்தின் பெரிய பிளஸ் பாயின்ட் இதுதான்.
தியேட்டருக்கு கொடுக்கும் படங்களையும் ரிலீஸ் ஆகும் சமயத்திலோ அல்லது ஒரு வாரத்துக்கு பிறகோ எங்களுக்கு கொடுங்கள் என்கிறார் சேரன். உடனே கொடுக்க தியேட்டர்காரர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு வாரம் கழித்து கொடுக்கலாம் என்றால் படம் நன்றாக இருக்கும் பட்சத்தில்தான் மக்கள் டிவிடி வாங்குவார்கள் . இல்லை எனில் அந்த படத்தை வாங்குவோர் எண்ணிக்கை குறையும்.
எனினும் வாராவாரம் ஏதாவது புதுப்படங்களை பார்க்க விரும்புவோர் ஐம்பது ரூபாய் தர யோசிக்க மாட்டார்கள். எனவே இதுவும் ஒகே தான் . ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் இதற்கு எந்த அளவு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்பது சொல்ல முடியாது . படம் நன்றாக ஓடினால் அவர்கள் C2Hக்கு தர ஒத்துக் கொள்ளும் நாள் தள்ளிப் போகும் . எனவே மக்கள் விரும்பும் நேரத்தில் படங்களை அறிவித்த நேரத்தில் கொடுப்பது சிரமம் ஆகும். இதற்கு சரியான தீர்வு முக்கியம் சேரன்.
கேபிள் மற்றும் செட் டாப் பாக்ஸ் மூலம் படம் போட்டால் டிவிடி விற்பனை குறையும் . ஒரு குறிப்பிட்ட படத்துக்கான டிவிடி விற்பனை நடந்து முடிந்த பிறகுதான் கேபிள் மற்றும் செட் டாப் பாக்ஸ் படம் போடப்படும் என்று சேரன் புத்திசாலித்தனமாக யோசிக்கலாம். ஆனால் கேபிள் மற்றும் செட் டாப் பாக்ஸில் கிடைக்கும் படத்தை ஏன் டிவிடி யில் வாங்க வேண்டும் என்றோ … டிவிடி கிடைக்கும் படத்தை ஏன் கேபிள் மற்றும் செட் டாப் பாக்ஸில் பார்க்க வேண்டும் என்றோ மக்கள் யோசிப்பார்கள் . கவனமாக திட்டமிட வேண்டிய ஏரியா இது .
இந்த C2H திட்டத்தால் விளம்பர செலவு குறையும் என்பது உண்மைதான். தவிர தரப்படும் ஒவ்வொரு டிவிடியிலும் அடுத்த வாரம் கிடைக்க இருக்கும் படங்களின் டிரைலர்கள் மற்றும் பேட்டிகள் இருக்கும் என்பது அருமையான விளம்பர உத்தி. சபாஷ் சேரன் .
தவிர மற்ற இப்போது நிகழ்வில் உள்ள பல ஒப்பந்தங்களை போல அல்லாமல், படத்தின் உரிமையை தயாரிப்பாளருக்கே என்றென்றும் விட்டு வைக்கும் படி சேரன் இதை செயல்படுத்துவது நல்ல விசயம். நாளை ஏதாவது ஒரு புது வித ஊடகம் வந்தாலும் அதற்கு பட உரிமையை கொடுக்கும்போது, கடைசி காலத்தில் அந்த தயாரிப்பாளருக்கோ அவரது வாரிசுகளுக்கோ பணம் கிடைக்கும். புண்ணியம் உண்டாகட்டும் சேரன் !
இது தவிர, தங்களிடம் C2H உரிமை தராத மற்ற படங்களுக்கு திருட்டு விசிடி வராமல் தடுக்கும் பறக்கும்படை வேலையையும் இந்த C2H திட்டத்துக்காக தான் நியமிக்கும் நூற்றுக்கணக்கான டிஸ்ட்ரிபியூட்டர்கள் மட்டும் முகவர்கள் மூலம் செய்வோம் என்கிறார் சேரன் . எக்ஸ்ட்ரா வருமானத்துக்கான புத்திசாலித்தனம் !
தமிழ்நாட்டில் நாம் தயாரிக்கும் படங்களை ஆன்லைன் நெட் ஒர்க் மூலமாக உலகின் எங்கோ ஒருவர் யாரோ ஒருவருக்கு விற்று நமக்கே தெரியாமல் லாபம் சம்பாதிப்பதை தடுப்பது அதன் மூலம் தயாரிப்பாளருக்கு முறையாக வருமானம் பெற்றுத் தரும் திட்டத்தை இதற்கும் முன்பே, பாக்கெட் பாப்கார்ன் என்ற பெயரில் சிவகிரி என்பவரும் கனெக்ட் பிளஸ் என்ற பெயரில் சிவாஜி புரடக்ஷன்ஸ் ராம் குமாரும் முயன்று… தோற்று விட்டார்கள் .
சேரனின் நெட் வொர்க் மற்றும் பலம் பெரிது என்றாலும் கவனமாக இருக்க வேண்டிய இன்னொரு ஏரியா இது . செட்டிலைட் நெட் வொர்க் என்பதும் அப்படியே.
இப்போது விருப்பு வெறுப்பின்றி ஒரு சிந்தனை….
சினிமா என்பது என்ன?
சுற்றுப்புறத்தை இருட்டாக்கிவிட்டு அகன்ற திரையில் வேறு வேலை எதையும் செய்யாமல் படம் பார்ப்பது. ஒரு நல்ல கதைப் படத்தை வீட்டில் சின்னத் திரையில் பார்த்தாலும் அது டிவி பார்ப்பது போல்தான்.
சினிமாவுக்கு என்று வைக்கப்படும் லாங் ஷாட்களை டிவிக்கான படங்களில் வைக்க முடியாது. வைத்து எடுத்து இருந்தாலும் டிவி சைஸ் திரையில் பார்க்கும்போது அதனால் பலன் இல்லை. எனவே ஒரு படத்தை புதிதாக ஒருவர் C2H ஐயும் மனதில் வைத்து எடுக்கும்போது சிறிய படங்களின் படமாக்கல் முறையிலும் மாற்றம் ஏற்படும்.டிவி சீரியல் பாணியிலேயே எடுக்கப்படும் அது சினிமாவின் கம்பீரத்தை மட்டுப் படுத்தலாம்.
ஹோம் தியேட்டரில் பெரிதாக பார்க்கலாமே என்று கூறலாம் . ஹோம் தியேட்டர் வைத்திருக்கும் வசதி உள்ளவர்களில் பலர் தியேட்டருக்கு செலவு செய்ய முடியாதவர்கள் அல்ல.
இந்த கோணத்தில் இன்னும் சில விசயங்களை பேசலாம் என்றாலும் .. வேண்டாம் .
தியேட்டரே கிடைக்காத படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் மூன்று நாட்களில் ஒரு வாரத்தில் வலுக்கட்டயமாக அநியாயமாக வெளியே தள்ளப்படும் படங்களுக்கும் சேரனின் C2H ஒரு பெரிய வரப்பிரசாதம் என்பதால் அதை கை நீட்டி வரவேற்கலாம். மற்றதை அப்புறம் பார்த்துக் கொள்வோம்