லைக்கா புரடக்ஷன்ஸ், ஸ்ரீ ஷிர்டி சாய் மூவீஸ், நியூ மார்ச் ஃபர்ஸ்ட் பிக்சர்ஸ், அஸ்பென் ஃபிலிம் புரடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சார்பில் சுபாஷ்கரன், எம்.ராஜசேகர், எஸ்.ஸ்வாதி, சூர்ய வம்சி பிரசாத், கோதா, ஜீவன் கோதா ஆகியோர் தயாரிக்க,
அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ், ஜேசன் ஷா நடிப்பில்
ஏ.மகாதேவின் கதைக்கு , திரைக்கதை வசனம் எழுதி முதன் முதலாக பாடல்களும் எழுதி விஜய் இயக்கி இருக்கும் ஆக்சன் திரில்லர் செண்டிமெண்ட் படம் Mission Chapter 1 – அச்சம் என்பது இல்லையே. தமிழ் , தெலுங்கு, மலையாளம் , கன்னடம் , இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டும் இந்தப் படம் வருகிறது
கதை எழுதிய மகாதேவ் , இயக்குனர் விஜய்யுடன் தலைவி படத்தில் பணி புரிந்தவர். விஜயேந்திர பிரசாத்துடன் பாகுபலி படத்தில் பணியாற்றிய இவர் ஜாகுவார் என்ற கன்னடப் படத்தையும் இயக்கி இருக்கிறார்.
படத்துக்கு இசை ஜி வி பிரகாஷ், விஜய் இயக்கத்தில் இவர் இசை அமைக்கும் பத்தாவது படம் இது.
விஜய்யின் மதராசப் பட்டினம் படத்தில் அறிமுகமான ஏமி ஜாக்சன் , குழந்தை பிறப்பு வளர்ப்பு காரணமாக சினிமாவுக்கு இடைவெளி விட்டு இருந்த நிலையில் மீண்டும் விஜய் படத்தின் மூலமே தமிழுக்கு வருகிறார் . விஜய் இயக்கத்தில் இவர் நடிக்கும் மூன்றாவது படம் இது. (இரண்டாவது படம் தாண்டவம்)
மலையாள நடிகை நிமிஷா சஜயன் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது
படத்தின் சண்டைக் காட்சியில் நடித்த போது காலில் அடிபட்ட நிலையில் , ஒவ்வொரு ஷாட்டிலும் வீங்கிய காலுக்கு ஒத்தடம் கொடுத்துக் கொண்டு மிக மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் அருண் விஜய் நடித்துக் கொடுத்த படம் இது .
படத்தின் முன்னோட்டத்தை திரையிட்டுக்காட்டி விஜய்யும் , அருண் விஜய்யும் பத்திரிக்கையாளர்களுடன் உரையாடினார்கள்.
தமிழில் ஒரு அச்சு அசல் ஹாலிவுட் படத்தைப் பார்ப்பது போல பிரம்மிக்க வைக்கிறது டிரைலர் . அதோடு நெகிழ வைக்கும் அப்பா மகள் காட்சிகளும் இருப்பது முன்னோட்டத்தின் வசனங்களிலேயே தெரிகிறது .
லண்டனில் ஒரு தமிழர் அவரது மகளுக்கான அறுவை சிகிச்சை சமயத்தில் சிறையில் சிக்கிக் கொள்கிறார் . ஒரு செவிலியின் பராமரிப்பில் குழந்தை இருக்க, மகளைப் பார்க்கத் துடிக்கும் அப்பா ஜெயிலில் இருந்து தப்பிக்க முயல்கிறார். சிறையில் நடக்கும் ஒரு கலவர சமயத்தில் அவர் தப்பிக்க, பெண் ஜெயிலர் அவரைத் துரத்த நடந்தது என்ன என்ற ரீதியில் இந்தப் படத்தின் கதை இருக்கும்என்பது தெரிகிறது.
படம் பற்றிப் பேசிய இயக்குனர் விஜய், ” இதுவரை நான் இயக்கிய எல்லா படங்களின் கதையிலும் என் பங்களிப்பே முக்கியமாக இருக்கும் . ஆனால் இந்தப் படத்தில் மகாதேவ் சொன்ன கதையை வாங்கி செய்கிறேன் . கதை அவ்வளவு பிரமாதமாக இருந்தது ஒரு காரணம் .
படத்தின் பெரும்பாலான காட்சிகளை லண்டனிலும் கொஞ்சம் சென்னையிலும் எடுத்தோம்.
லண்டன் ஜெயிலை சென்னை பின்னி மில்லில் பார்ப்பவர்கள் வியக்கும் அளவுக்கு செட் போட்டு எடுத்தோம் .லண்டனில் நடக்கும் கதை என்பதால் லண்டன் காட்சிகளின் தொடர்ச்சியாக நிறைய வெளிநாட்டினரைக் கொண்டு வந்து சென்னையில் பல காட்சிகள் எடுத்தோம். படத்தில் லைவ ஆக்ஷன் காட்சிகள் அதிகம் உண்டு .
நிச்சயமாக அருண் விஜய் தவிர இன்னொருவர் இந்த கதாபாத்திரத்துக்கு இவ்வளவு நியாயம் செய்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. தசை நார் கிழிந்து பெரும் வலியில் துடிக்கும்போதும் சிகிச்சை பற்றிக் கவலைப்படாமல் படத்தை முடிக்க ஒத்துழைப்புக் கொடுத்தார். அதோடு அற்புதமாகவும் நடித்துள்ளார் .
அருண் விஜய்யை துரத்திப் பிடிக்கும் பெண் ஜெயிலராக ஏமி ஜாக்சன் ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார் .
மலையாள நர்சாக வரும் நிமிஷா சஜயன் படத்தின் பல காட்சிகளில் மலையாளமே பேசுவார் .
குழந்தைகளை வைத்து படம் எடுப்பது உண்மையில் என்னைப் பொறுத்தவரை மிக சுலபம். எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் கூட . இந்தப் படத்தில் சிறுமி இயல் அற்புதமாக நடித்துள்ளார் . நாசரின் மகன் அபி ஹாசன், மற்றும் பரத் போபண்ணா, , விராஜ், ஜேசன் ஷா ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
ஜி வி பிரகாஷின் இசை, சந்தீப் கே விஜய்யின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் படத் தொகுப்பு சில்வாவின் ஸ்டன்ட் ஆகியவை எல்லாம் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பது உங்களுக்கு டிரைலர் மூலமே புரிந்து இருக்கும் .
ஒரு பாடலுக்கு டம்மி லிரிக்ஸ் எழுதி ஒரு புரிதலுக்காக ஜி வி பிரகாஷுக்கு அனுப்பி வைத்தேன். அவர் வரிகள் பிரமாதமாக இருக்கிறது. இதுதான் பாட்டு என்றார் . அதனால் பாடலாசிரியராகவும் ஆகி விட்டேன்
படம் விரைவில் திரைக்கு வரும்” என்றார்.
நாயகன் அருண் விஜய் , ” விஜய் சாரின் மதராசப்பட்டினம் எனக்கு மிகவும் பிடித்த படம் . அப்போது முதலே அவரோடு படம் பண்ண ஆசை . இந்தப் படத்தின் கதை அவ்வளவு சிறப்பாக இருந்தது. மதராசப் பட்டினம் படத்தின் ஹீரோயினான ஏமி ஜாக்சனே இந்தப் படத்திலும் இருப்பது சிறப்பு.
எனது விபத்து மட்டுமல்ல.. போட்டிருந்த ஜெயில் செட் புயலில் சிக்கி சிதைந்தது. அதன் வீடியோவை விஜய் சார் அனுப்பியதைப் பார்க்கும் போது பகீர் என்று இருந்தது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள செட் அது . மீண்டும் போட்டு எடுத்தோம் . தயாரிப்பாளர்கள் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் சிறப்பாக படமாக்கலுக்கு உதவினார்கள்.
லண்டன் காட்சிகள் மிக சிறப்பாக இருக்கும் . அதுவும் லண்டனில் ஒரு பொதுப் பேருந்தில் அட்டகாசமான சண்டைகாட்சி எடுத்து அசத்தினார்கள் இயக்குனர் விஜய்யும் ஸ்டான்ட் மாஸ்டர் சில்வாவும் .
தசை நார் கிழிந்து ரொம்ப கஷ்டப்பட்டது உண்மைதான் . ஆனால் அதற்காக நாம் ஒரு படத்துக்கு கொடுக்கும் பங்களிப்பை குறைத்து விட முடியாது . தசை நார் கிழிந்த காலுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் இன்னொரு காலில் உடம்பின் வெயிட்டை போட்டு நடக்கும் பயிற்சி எடுத்து நடித்தேன். ஒரு ஷாட் நடித்த உடன் கால் பெரிதாக வீங்கிக் கொள்ளும்.
ஷாட் முடிந்த உடன் இருபது நிமிடம் ஐஸ்கட்டி வைத்துதான் அடுத்த ஷாட்டுக்கு ரெடியாக முடியும் .
குடும்பத்தினர் எல்லாம் ரொம்ப பயந்தார்கள். எனினும் படத்தில் ஆக்ஷன் நாம் உழைப்பைக் கொடுத்துதான் ஆக வேண்டும். படம் அற்புதமாக வந்திருக்கிறது. அதில் வலி எல்லாம் பறந்து விட்டது ” என்றார் .
அதாவது அச்சம் என்பது இல்லையே என்கிறார்கள் இயக்குனர் விஜய்யும் நாயகன் அருண் விஜய்யும் .