ரஜினியைக் களங்கப்படுத்துகிறாரா லதா ரஜினிகாந்த் ?

Rajinikanth-wife

சென்னை திருநீர்மலையை அடுத்த திருமுடிவாக்கம் என்ற ஊரில் சிட்கோ தொழிற் பேட்டைக்குள் லதா ரஜினிகாந்துக்கு சொந்தமாக இருந்த 2.13 ஏக்கர் நிலத்தை வைத்து அவர் இந்தியன் வங்கியில்  2007 ஆம் ஆண்டு 3 கோடி கடன் வாங்கி இருக்கிறார் .

பின்னர் அதே நிலத்தைக் காட்டி 2009 இல் மீண்டும் இந்தியன் வங்கியில் 40 கோடி கடன் வாங்கி இருக்கிறார் . பிறகு முதலில் வாங்கிய 3 கோடி ரூபாயை 2011 இல் திருப்பி செலுத்தி இருக்கிறார் . பின்னர் அதே பத்திரத்தை  2011 ஜூலை மாதம் மீடியா ஒன் நிறுவனத்திடம் வைத்து இருபது கோடி கடன் வாங்கி இருக்கிறார். 

மூன்று சர்வே எண்கள் கொண்ட நிலம் என்பதால் இப்படி ஒரு கடன் இருக்கும்போதே மீண்டும் மீண்டும் அடமானம் வைக்கப்பட்டு கடன் வாங்கப்பட்ட நிலம் அது. “ஒருவேளை ஒரு சர்வே நம்பரிலேயே முழு நிலமும் இருப்பது போல சொல்லி இது போல ஒவ்வொரு சர்வே நம்பரிலும் தனித்தனியாக முழு அளவு நிலமும் இருப்பதுபோல் ஜோடித்து இந்தக் கடன்கள் வாங்கப்பட்டு இருக்கலாம் ” என்கிறார் ஒரு பத்திரப் பதிவுத் துறை அதிகாரி . 
இது இப்படி இருக்க,  கோச்சடையான்  படம் சம்மந்தமாக மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் தொடர்ந்த வழக்கில்  22,கோடியே  21 லட்சத்து 85 ஆயிரத்து  865 ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை லதா ரஜினிகாந்த் பிணையாகக் கொடுத்து இருந்தார் என்றும் சொல்லப்பட்டது .
இந்த நிலையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி அந்த நிலத்தை கையகப்படுத்துவதாக எக்ஸிம் வங்கி நாளிதழில்  அறிவிப்பு வெளியிட்டது .அது தொடர்பாக எக்ஸிம் வங்கி வெளியிட்டு இருந்த அந்த அறிவிப்பில் ” மீடியா ஒன் குளோபல் நிறுவனம் எங்கள் வங்கியிடம் வாங்கி இருந்த கடனை அதன் கெடு தேதியான ஜூலை 17 க்குள் செலுத்தவில்லை. அதன் பிறகும் நாங்கள் அறுபது நாட்கள் கெடு கொடுத்தோம் . அந்த கெடு காலம் முடிந்தும் கடனை திரும்ப செலுத்தவில்லை . எனவே அந்த கடனுக்கு பிணையாக கொடுக்கப்பட்டு உள்ள மேற்படி நிலம் இனி எங்கள் உரிமை . எனவே அந்த நிலத்தை இனி யாரும் வாங்கவோ விற்கவோ கூடாது ” என்று கூறி இருந்தது .
இது தொடர்பாக அண்மையில் மீடியா ஒன் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் முரளி மனோகர் எல்லா பத்திரிக்கையாளர்களையும் சந்திக்க தைரியம் இன்றி,  ரகசியமாக சில பத்திரிக்கையாளர்களை மட்டும் சந்தித்தார் . அப்போது “லதா ரஜினிகாந்த் எங்களுக்கு பொருளாதார உதவி செய்வதற்காக கேரண்டராக மட்டுமே தனது சொத்தை அளித்தார் ” என்று ‘சமாளித்து’ப் பேசினார் .
ஆனால் மீடியா ஒன் நிறுவனம் வங்கியில் கடன் பெறுவதற்காக லதாவே சில வங்கிகளிலும் தனியார் நிறுவனங்களிலும் முன் ஜாமீன்தாரார் ஆக கையெழுத்துப் போட்டுள்ளார் என்ற உண்மை  இப்போது வெளியே  வருகிறது . 
rajini wife 3
இந்த வழக்கு மட்டும் இல்லாமல் லதா மீது சில ஏமாற்றுதல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பாகவும் கடந்த நவம்பர் மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் தகவல்கள். 
இவையெல்லாம் வெளியே தெரிந்த சில விசயங்கள்தான் . இவற்றுக்கு நியாயமான தீர்வுகள் கிடைக்கும்போது பாதிக்கப்பட்ட இன்னும் பலர் தைரியமாக வெளியே வந்து புகார் தரலாம் என்கிறார்,  விஷயத்தை கூர்ந்து கவனிக்கும் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் . 
நடக்கும் சம்பவங்கள் உண்மையான ரஜினி ரசிகர்களை மிகவும் வருத்தத்துக்கு ஆளாக்குகின்றன என்பதுதான் வேதனையான விஷயம். “ரஜினியின் நற்பெயருக்கு களங்கம்  வந்து விடக் கூடாது என்பதில்  ரஜினியால் எந்தப் பலனும் பெறாத — ரஜினியை விருப்பு வெறுப்பின்றி நேசிக்கும் ஒரு ஏழை எளிய ரசிகனுக்கு உள்ள அக்கறை கூட லதாவுக்கு இல்லையோ என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் அந்த ரசிகர்கள் . 
இது பற்றி பேசும் ஒரு நீண்ட கால ரஜினி ரசிகர் ”  அப்போதெல்லாம்  எம்ஜிஆர் சிவாஜி ஆகியோர் நடித்த படங்கள் வரும்போது அந்தப் படங்களில் அவர்கள் வரும் தோற்றத்தையும் படத்தின் பெயரையும் போட்ட பனியன்கள் கீ செயின்கள் எல்லாம் விற்பனைக்கு வரும் . அவர்களை  யார் வேண்டுமானலும் தயாரித்து விற்பனை செய்து பலன் பெறுவார்கள் . அப்படி தயாரித்து விற்பனை செய்பவர்கள் யார் என்பது கூட அந்த நடிகர்களுக்கு தெரியாது .  கமல் கூட  அந்த விசயத்தில் அப்படித்தான் இருந்தார் . 
ஆனால் எங்கள் தலைவர் படம் வெளிவரும்போது மட்டும்  மேற்சொன்ன  விசயங்களை கூட நாங்கள்தான் தயாரித்து விற்று  பணம் பார்ப்போம் என்று தனது குடும்பத்தினர் இறங்கியபோதே அதை தலைவர் தடுத்திருக்க வேண்டும் . அப்படி செய்து இருந்தால் இப்போது இவ்வளவு பிரச்னைகள் வளர்ந்திருக்காது . தலைவர் படம் வரும்போதெல்லாம் அதை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கும் சிலர் அவரது குடும்பத்தினரை வளைப்பதும்  தொடர்ந்து நடந்தது . இவற்றின் விளைவுதான் இது ” என்கிறார் வேதனையோடு . 
rajini kanth wife 2
இந்த நிலையில் லதா ரஜினிகாந்த் செய்ய வேண்டியது என்ன?
தன்மீதான குற்றச் சாட்டுகளில் இருந்து நேர்மையாக வெளிவர என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து களங்கங்களை துடைத்து, இத்தனை ஆண்டுகளாக ரஜினி உழைத்து உருவாக்கியுள்ள …. நற்பெயரையும் காப்பற்ற வேண்டும் என்பதுதான் . 
செய்வாரா ?
ரஜினியை மனசார இன்னும் நேசித்து பூஜிக்கும் ரசிகர்களின் மனதில் உள்ள சோர்வை நீக்குவாரா ?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →