கனெக்டிங் டாட்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் கார்த்திக் மது சூதன் தயாரித்து , நிஹாரிகா சதீஸ், ரத்தன் கங்காதர் இவர்களுடன் சேர்ந்து கலை இயக்கம் செய்து, சாம் ஆர் டி எக்ஸ் உடன் சேர்ந்து திரைக்கதை வசனம் எழுதி இயக்கி, கதாநாயகனாகவும் கார்த்திக் மது சூதன் நடித்து இருக்கும் படம் டூடி.
தான் கொடுக்கும் முழுமையான காதலை, தான் காதலித்த மூன்று பெண்களும் (!) தரவில்லை என்பதால் காதலை வெறுத்து , பார்ப்பதில் பிடிக்கிற பெண்களை எல்லாம் தாஜா செய்து படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் முப்பது வயது இசைக்கலைஞன் ஒருவன் ( கார்த்திக் மது சூதன் )
நல்லவர் போல பழகி அப்புறம் சுய ரூபம் காட்டி படுக்கையில் வீழ்த்த முயலாமல் ஆரம்பத்திலேயே நேரடியாகவே செக்ஸ்க்கு முயலும் அவனது நேர்மை(!) கண்டு இம்ப்ரெஸ் ஆகி அவனை காதலிக்க ஆராம்பிக்கிறாள் ஒரு பெண் (ஷ்ரிதா சிவதாஸ்) .
ஆரம்பத்தில் மறுக்கும் அவன் ஒரு நிலையில் காதலை ஏற்க நினைக்க, தனக்கு ஐந்து வருடமாக ஒரு காதலன் இருப்பதை அவள் சொல்கிறாள் . அதைத் தாங்க முடியாமல் அவன் கோபத்தோடு (!) விலகிப் போய் விடுகிறான் . அவனைத் தேடும் முயற்சியில் தோற்று தனது ஊருக்கு வந்து விடுகிறாள்.
தன்னை மனுஷியாகக் கூட ஏற்க மறுக்கும் பழைய காதலை அவள் தைரியமாக உதறி விட்டு , நாயகனைப் பற்றி அப்பா அம்மாவிடம் ( ஜீவா ரவி, ஸ்ரீ ரஞ்சனி) விடம் சொல்கிறாள் .
அவனது கேரக்டர் அறிந்த அவர்கள் நாயகனை மறுத்து வேறு மாப்பிள்ளை பார்க்க, நாயகியின் காதலை உணர்ந்து நாயகன் அவளைத் தேடி வர, நாயகியின் முதல் காதலனும் கல்யாண மண்டபத்துக்கு வர , நடந்தது என்ன என்பதே டூடி.
படத்துக்கு என்ன அர்த்தம் என்று பெரிதாக யோசிக்க வேண்டாம். அது வளர்க்கும் நாய்க்கு நாயகனும் நாயகியும் சேர்ந்து வைத்த பெயர் .
தயாரித்ததோடு பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு ஆர்வமாக செய்திருக்கிறார் கார்த்திக் மதுசூதனன். நடிப்பும் ஓகே . அவரது குரல் மிக சிறப்பு .
நாயகி ஷ்ரிதா சிவதாஸ் சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல நடிக்கிறார். அதுதான் நல்ல நடிப்பு என்று அவரிடம் யாரோ தப்பாக சொல்லி இருக்கிறார்கள். பால சாரங்கனின் பின்னணி இசை அருமை . அசந்தர்ப்பமாக வரும் பாடல்களும் கூட இனிமை. சபாஷ் .
மதன் சுந்தர்ராஜ், சுனில் G N ஆகியோரின் ஒளிப்பதுவும் சிறப்பு.
கார்த்திக் மது சூதன் , நிஹாரிகா சதீஸ், ரத்தன் கங்காதர் ஆகியோரின் கலை இயக்கம் ரம்மியம்.
இணைந்து திரைக்கதை வசனம் எழுதி படத்தை இயக்கி இருப்பதோடு சிறப்பான குறையற்ற படத் தொகுப்பும் செய்து இருக்கிறார் சாம் ஆர் டி எக்ஸ் . வசனங்கள் சில இடங்களில் அட போட வைக்கின்றன.
குழந்தை இல்லாத – நாற்பது வருடம் மனமொத்த தாம்பத்யம் செய்யும்- பெங்களூரில் வாழ்கிற- தமிழ்க் கணவன் கன்னட மனைவியின் (ஜீவி மது சூதன்- உத்ரா) பாத்திரப் படைப்புகள் அருமை . நடிப்பும் ஓகே.
அதே போல நாயகனின் பழைய காதலியின் கணவன் பேசும் விசயமும் சிறப்பு .
இருக்கட்டும். இன்னொருவனைக் காதலிப்பதை நாயகி ஏன் நாயகனிடம் சொல்லாமல் தள்ளிப் போட்டாள்,?தினமும் ஒரு பெண்ணுடன் படுக்கும் நாயகன், அவள் இன்னொருவனின் காதலில் சிக்கி இருக்கிறாள் என்பது தெரிந்த உடன் கோபப்படுவது என்ன நியாயம்? அதை ஏன் அவனிடம் ஒருவருமே சுட்டிக் காட்டவில்லை என்பது உட்பட படத்தில் ஏகப்பட்ட கேள்விகள் .
அதனால் படத்தோடு ஒன்ற முடியவில்லை.
அழுத்தமான கதையோ , அதற்கேற்ற திரைக்கதையோ இல்லாமை, தெளிவற்ற கதாபாத்திர வடிவமைப்புகள் , படத்தை எப்படி முடிப்பது என்பது தெரியாத குழப்பம் இவை பெருங்குறைகள் .
வித்தியாசமாக ஏதாவது சொல்ல வேண்டும் என்ற முயற்சி பாராட்டுக்குரியது . அடுத்த படத்தில் கதை திரைகதையில் கவனம் செலுத்தட்டும் இந்தக் குழு .