Air flick தயாரிப்பில் தயாரித்து தீரஜ் கதாநாயகனாக நடிக்க, ஸ்ம்ருதி வெங்கட், கோவை சரளா, எம் எஸ் பாஸ்கர், சுனில் ரெட்டி , ஷாரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த் ஜார்ஜ் விஜய், டெட்டி கோகுல் நடிப்பில் சந்துருவின் இணை எழுத்து மற்றும் இணை தயாரிப்பில் மீரா மகதி எழுதி இயக்கி இருக்கும் படம்.
சிறு வயதிலேயே ஒரு விபத்தில் பெற்றோரை இழந்ததோடு விபத்துக் காரணமாக தெய்வமகன் சிவாஜி மாதிரி முகம் கோரமாகி, பலரால் அவமானப்படுத்தப்பட்டு குமைந்து வாழ்ந்து வளர்ந்து இளைஞனான ஒருவனுக்கு ( தீரஜ்) ஒரு பெண்ணின் மேல் (ஸ்ம்ருதி வெங்கட்) காதல் வருகிறது . இவனது தோற்றம் காரணமாக அவள் தயங்க ,” நீ ஒத்துக் கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று இவன் சொல்ல , ஒரு நிலையில் அவள் மனம் மாறி காதலைச் சொல்ல வரும்போது… அவன் செத்துப் போகிறான் . ஆனால் தற்கொலை செய்து கொண்டு அல்ல. மனிதர்கள் வாழ்நாள் முழுக்க செய்யும் நன்மை தீமைகளை கணக்கெடுத்துக் கொண்டு சாகும்போது கணக்கையும் செத்தவன் உயிரையும் கடவுளிடம் ஒப்படைக்கும் இரண்டு தேவதைகள் , வேறொருவன் உயிருக்குப் பதில் இவன் உயிரை எடுத்து விடுகின்றன.
கடவுளிடம் விஷயம் போவதற்குள் தவறை உணர்ந்த தேவதைகள் மீண்டும் உயிரை வைக்க முயல, அதற்குள் நாயகன் உடல் மாயமாக , வேறு வழி இல்லாமல் அதே போன்ற உருவம் கொண்ட ஆனால் முகத்தில் கோரத்தன்மை இல்லாத- இறந்து போன ஒரு நபர் ( தீரஜ் தான்) உடலில் அந்த உயிரை வைக்க, புதிய நாயகன் விழிக்கிறான்.
இதோடு ஒரு தாதா ( மன்சூர் அலிகான்) , தாதாவை ஏமாற்றும் ஒரு ஜோடி ( கருணாகரன் – யாஷிகா ஆனந்த்) ஒரு பெண் போலீஸ் ( கோவை சரளா) மற்றும் சில கதாபாத்திரங்கள் சந்திக்கும்போது நடக்கும் விளைவுகளே படம்.
தீரஜ் சற்றே மிகை நடிப்பாக இருந்தாலும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப உற்சாகமாக நடித்துள்ளார். ஸ்ம்ருதி வெங்கட் இயல்பு .
மற்றபடி ஏ..ஏ…ஏ.. கப்பட்ட காமெடி நடிகர்கள் இருந்தும் அதில் காமெடி இல்லை என்பது பரிதாபம்.
அதே நேரம் கடவுளுக்கு பாவ புண்ணியக் கணக்குக் கொடுக்கும் தேவதைகளாக வரும் லெஃப்ட் , ரைட் அனிமேஷன் உருவங்களும் அவற்றின் அசைவுகளும் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்கிறது. அதில் அந்த உருவங்களுகுக் குரல் கொடுத்து இருக்கும் முனீஸ்காந்த் , காளி வெங்கட் இருவரின் பங்களிப்பும் சிறப்பு .
உலகத் தரத்தில் அனிமேஷன் செய்து இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ரயில் பெட்டி அனிமேஷன் எல்லாம் அபாரம். ஒளிப்பதிவாளர் ராஜேந்திரன் அனிமேஷன் பின்புலம் மற்றும் உருவங்களை மனித கதாபாத்திரங்களோடு உலவ விட்ட வகையில் பாராட்டுப் பெறுகிறார் .
வித்யா சாகர் இசையில் கிண்கிணி கிண்கிணி பாடம் உட்பட இரண்டு பாடல்கள் அபாரம் . ஆனால் அவற்றை படம் ரிலீஸ் ஆகும் வரை படக் குழு ரகசியமாக வைத்து இருந்தது ஏன் என்றுதான் தெரியவில்லை.
இந்த சிறப்பான தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப சரியான திரைக்கதை வசனம் இருந்து இருந்தால் ட்ரிப்பிள் டக்கராகக் கூட ஆகி இருக்கும் . அது இல்லாததால் அனிமேஷன் என்ற ஒரே டக்கர்தான் அசத்தி இருக்கிறது .