லிங்கா பிரச்னையில் டாக்டர் ராமதாஸ்

Rajinikanth-Lingaa-New-Movie-Stills-Images
லிங்கா படத்தின் விவரமான விநியோகம் மற்றும் வியாபார முறைகளால் கடும் நஷ்டத்தை சந்தித்த விநியோகஸ்தர்கள், ‘பட விற்பனையில் தயாரிப்பாளர் தரப்பு மட்டும் கொழுத்த லாபம் சம்பாதித்து இருக்கும் நிலையில் எங்களுக்கு ஏற்பட நஷ்டத்தை ஈடு கட்ட அந்த லாபத்தில் பங்கு தர வேண்டும்’ என்று கேட்டு தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்  மற்றும் ரஜினிகாந்துடன் நடத்திய பேச்சு வார்த்தையில் பலன் இல்லாத நிலையில்,  வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.
அதற்கு நாம் தமிழர் கட்சி சீமான், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி வேல் முருகன் ஆகியோர் ஆதரவு தந்தனர். வேல் முருகன் நேரடியாக ரஜினியை எச்சரித்தே பேசினார் .

அதன் பின்னர் ரஜினி தரப்பு மொத்தம்  வெறும் மூன்று கோடி மட்டும் நஷ்ட ஈடு தர முன் வந்தது . ஆனால் முப்பத்து மூன்று கோடியாவது கொடுத்தால்தான் ஓரளவாது பிரச்னையில் இருந்து மூச்சு விட முடியும் என்பது அந்த விநியோகஸ்தர்களின் நிலைமை.  ஆனால் அதற்கான வாய்ப்பே இல்லாத நிலையில் மீண்டும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது விநியோகஸ்தர்கள் குழு.

சந்திப்பின் ஆரம்பத்தில்  லிங்கா படத்தில் உள்ள காட்சிகளோடு பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களின்   நிலையை சொல்லும்படியாக ஒரு திரையிடல் இருந்தது. லிங்கா படத்தால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் என்று டைட்டில் போட்டு , லிங்கா படத்தில் ஆணை கட்டும் காட்சியில் வறுமையோடு நிற்கும் ஏழை மக்களை காட்டுகிறார்கள் .

அடுத்து லிங்கா படத்தின் ஆடியோ விழாவில் ” லிங்கா படத்தின் கதை , தயாரிப்பாளர், இயக்குனர் எல்லாவற்றையும் நான்தான் முடிவு செய்தேன் ” என்று ரஜினி பேசும் காட்சிகள் இடம்பெறுகின்றன . அதில் ராக்லைன்  வெங்கடேஷை பற்றிக் கூறும்போது ”யார் கஷ்டப்பட்டாலும் மனம் தாங்காதவர்; ஓடிப் போய் உதவி செய்பவர் ராக்லைன் வெங்கடேஷ் ”  என்று வானளாவப் புகழ்கிறார் ரஜினி .

அதைத் தொடர்ந்து ”லிங்கா படத்தின் தயாரிப்பு செலவு  ஐம்பது கோடி மட்டுமே ” என்று இயக்குனர் கே எஸ் ரவிகுமார் கூறுகிறார் .

அதன் பிறகு ரஜினியின் நண்பரும் , இந்தப் பிரச்னையில் ரஜினிக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையில் தூது போன திருப்பூர் சுப்ரமணியத்திடம் போனில் யாரோ உரையாடும் போது அவர் ” படம் மூலம் 182 கோடி  ரூபாய் பணம்  தயாரிப்பாளருக்கு கிடைத்தது. அதில் விளம்பரச் செலவுன்னு 25 கோடியை எடுத்துகிட்டாங்க . மீதம் 157  கோடி ”  என்று சொல்வது இடம் பெறுகிறது.

linga

படம் முடிந்த பிறகு தங்கள் தரப்பை சொன்னார்கள் விநியோகஸ்தர்கள் .

”ஒரு படத்தின் தோல்விக்கு அதில் நடித்த நடிகரிடம் நஷ்ட ஈடு கேட்பது முறை அல்ல என்பதை நாங்கள் அறியாதவர்கள்  அல்ல. ஆனால் லிங்கா படத்தைப் பொறுத்தவரை ரஜினிகாந்த நடிகர் மட்டுமல்ல . எல்லாமும் அவர்தான் 

‘லிங்கா’ திரைப்படத்தைப் பொறுத்தவரை எங்களுக்குத் தெரிந்த ஒரே நபர் ரஜினிகாந்த்தான். அவரை நம்பித்தான் ‘லிங்கா’ படத்தை வாங்கினோம். பட புரமோஷனில் பேசிய ரஜினிகாந்த் படத்தைப் பற்றியும், கதையைப் பற்றியும் உயர்வாகப் பேசியதை அடுத்து, இந்தப் படத்தை வாங்க முடிவுசெய்தோம். ஆனால், படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

எனவே, விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி இழப்பை ஈடுசெய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தும், சரியான பதில் இல்லாததால் கடந்த ஜனவரி 10-ம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருந்தோம்.

அதன்பிறகு எங்களை அழைத்த திருப்பூர் சுப்ரமணி, இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினிகாந்த் விரும்புவதாகவும், கணக்குகளை ஒப்படைக்குமாறு கூறியதையடுத்து வரவு செலவு கணக்குகளை ஒப்படைத்தோம். விரைவில் நஷ்டத்தொகை வழங்கப்படும் என்று கூறியதையடுத்து, அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடாமல் அமைதி காத்தோம்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் எங்களை தொடர்பு கொண்ட ரஜினியின் நண்பர் திருப்பூர் சுப்ரமணி, தயாரிப்பாளர் 10 சதவீத நஷ்ட ஈடு தொகை மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்ததாக கூறினார். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

lingaa-teaser-images-9

இரண்டு மாத காலமாக எந்தவித முடிவுமின்றி சென்று கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினையை முடித்து வைக்க ரஜினிகாந்த் முன்வராதது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

45 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட படத்தை 157 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டு, வெறும் 33 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாத இதயங்களை நினைத்து அதிர்ச்சியடைந்தோம். ரஜினிக்கு சம்பளம் 60 கோடி. ஆக , நாங்கள் நஷ்டப்பட்ட காசு 97 கோடி தயாரிப்புத் தரப்பில் இருக்கிறது . இந்த இரண்டு தரப்பும் பெற்ற லாபத்தில் ஆளுக்கு பத்து கோடியாவது கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம் .

அதற்குக் கூட   மனமில்லாத இவர்களோடு மல்லுக்கட்ட, பணமில்லாத எங்களுக்கு வேறு வழி இல்லாததால் அடுத்த கட்ட போராட்டத்திற்கு எங்களை தள்ளியுள்ளனர்.

இதற்கு மேலும் ரஜினிகாந்த் தலையிட்டு இந்தப் பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லாததால் திரையரங்க உரிமையாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க வகை செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்து உண்மையை விளக்கி ‘மெகா பிச்சை’ என்ற பெயரில் பிச்சை எடுக்கும் போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம்.

இந்தப் போராட்டம் போயஸ் கார்டனில் அமைந்துள்ள ரஜினிகாந்த் வீட்டு வாசலில் இருந்து துவக்கப்படும். பிரபல அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் முதல் பிச்சையை போட்டு போராட்டத்தை துவக்கி வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இனி மேல் ரஜினிகாந்த் நடித்த படத்தை வாங்கி திரையிட்டால் பிச்சை எடுக்கும் நிலைதான் ஏற்படும் என்பதை விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கும் வண்ணமாகவும், ரஜினிகாந்த்தை நம்பினால் நடுத் தெருவில்தான் நிற்கவேண்டும் என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும் விதமாகவும் இந்த போராட்டம் இருக்கும்.

இந்தப் போராட்டத்தில் விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் கையில் பதாகையும், திருவோடும் ஏந்தி பிச்சை எடுப்பார்கள். போராட்டத்தின் நோக்கம் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.

‘லிங்கா’ படத்தை திரையிட்ட திரையரங்குகளின் வாசலில் பிச்சை எடுக்கும் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேனர்கள் கட்டி, அதன் அருகில் உண்டியல் வைக்கப்படும். இந்த போராட்டத்தின் தேதி விரைவில் அறிவிக்கப்படும். ” என்று கூறுகிறார்கள் .

அந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட இந்த விநியோகஸ்தர்களுக்கு ஆதரவாக களம் இறங்கி முதல் பிச்சையை இடம் போகிற அரசியல் தலைவர் டாக்டர் ராமதாஸ் என்பதுதான் பரபரப்புச் செய்தி .

பிரச்னை சூடேறும் போலத்தான் தெரியுது !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →