ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டைன்மென்ட் , ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் சார்பில் ராஜ்குமார் ஹிரானி, கவுரி கான், ஜோதி தேஷ்பாண்டே தயாரிப்பில் டாப்ஸீ பன்னு , ஷாருக் கான், விக்கி கவுஷல், பொம்மன் இரானி நடிப்பில் அபிஜத் தோஷி, கனிகா தில்லான் ஆகியோரோடு இணைந்து எழுதி இருப்பதோடு , படத் தொகுப்பும் செய்து ராஜ்குமார் ஹிரானி இயக்கி இருக்கும் படம்.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இந்தியாவில் பஞ்சாபில் இருந்து லண்டனுக்கு நிறைய உடலுழைப்புத் தொழிலாளர்கள் போனார்கள். அவர்கள் அங்கேயே தங்கி விட , அவர்களின் உறவினர்கள் லண்டன் போவதும் செட்டில் ஆவதும் தொடர்ந்து பஞ்சாபில் இருந்து லண்டனுக்கு தமது உறவினர்களை செட்டில் செய்வதும் வருவதும் போவதும் எளிதாக இருந்தது .
லல்ட்டு போன்ற பஞ்சாப் கிராமங்களில் இதைப் பெருமிதமாக எடுத்துக் கொண்டு வீட்டின் உச்சியில் விமான வடிவம் வைத்து வீடு கட்டுவதும் ‘நாங்கள்லாம் லண்டன்காரங்க..’ என்று பெருமிதப்படுவதும் வழக்கமாக இருக்க,
1962 ஆம் ஆண்டில் அந்த சலுகைகளை எல்லாம் இங்கிலாந்து ரத்து செய்தது. வசதி இல்லாதவர்கள், ஆங்கிலம் தெரியாதவர்கள் போக முடியாது என்ற நிலை ஏற்பட்டது .
ஒரு ராணுவ வீரனைக் காப்பாற்றியதால் தனது அண்ணனை இழந்து தாங்கள் வாழ்ந்த பெரிய வீட்டையும் இழந்து , அந்த வீட்டை மீட்க ஆசைப்படும் மனு ரந்தாவா என்ற பெண் ( டாப்ஸீ பன்னு) மற்றும் சிலர் லண்டன் போக ஆசைப்பட, பணத்தை வாங்கிக் கொண்டு ஒரு ஏஜென்ட் (பொம்மன் இரானி) இவர்களை ஏமாற்ற , அதனால் அந்த ஊர் நபர் ஒருவன் காதலியைப் பார்க்கப் போக தாமதமாக, லண்டனில் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ள, அதை அறிந்து லண்டன் போக முடியாமல் போன ஒரு நபர் ( விக்கி கவுஷல்) தற்கொலை செய்து கொள்ள,
பெண்ணின் அண்ணனால் காப்பற்றப்பட்ட ராணுவ மேஜர் ( ஷாருக் கான்) அவர்களை சட்ட விரோதமாக நீர், நிலம் , ஆகாயம் வழியே லண்டன் கொண்டு போக முயல ..
மொத்தக் கதையும் பிளாஷ்பேக் ஆக விரிய நடந்தது என்ன என்பதே படம்.
இது கதாசிரியர்களில் ஒருவரான கனிகா தில்லானின் சமூகத்தினுடைய கதை போல . நாயகன் ஷாருக் கானுக்குக் கூட ஹர்தயாள் ஹார்டி சிங் தில்லான் என்பதுதான் பெயர் .
இதை விட எத்தனையோ சோக தியாக கண்ணீர், ரத்த வரலாறுகள் தமிழ் நாட்டில் எவ்வளவோ உண்டு . ஆனால் தமிழ் சினிமா என்பது வந்தவன் போனவன் எல்லாம் குண்டி தேய்க்கும் குட்டிச் சுவர் என்று ஆகி விட்டதால் அந்தக் கதைகள் பற்றி யாரும் யோசிப்பது இல்லை. ஆனால் டங்கியில் தில்லாக செய்து இருக்கிறார்கள் . பாராட்டுகள் .
ஆங்காங்கே கொஞ்சம் ஆக்ஷன் இருந்தாலும் இது ஆக்ஷன் படம் இல்லை. அகதிகள் நிலைமை, நாட்டுப் பற்று , காதல், சென்டிமென்ட் , உலகம் ஒன்றே என்ற விசயங்களைப் பேசும் படம்.
இவற்றை எல்லாம் நன்றாகவே பேசி இருக்கிறார்கள் . கதையும் வசனமும் அபாரம் .
மகிழ நெகிழ சிலிர்க்க வைக்கும் செண்டிமெண்ட் காட்சிகள் ,கொஞ்சம் காமெடி எல்லாம் உண்டு .
முரளிதரன், நம்ம ஊர் மனுஷ் நந்தன், அமித்ராய், குமார் பங்கஜ் ஆகியோரின் ஒளிப்பதிவும் ப்ரீதம் அமன் பந்த் ஆகியோரின் இசையும் படத்துக்கு சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளன
டைட்டிலில் டாப்ஸீ பன்னு பேரை முதலில் போட்டு விட்டு அப்புறம் ஷாருக் கான் பெயரைப் போடுகிறார்கள் . நடிப்பில் இரண்டு பெரும் அசத்தி இருக்கிறார்கள் என்றலும் பன்னு கொஞ்சம் அதிகம்தான் .
விக்கி கவுஷல் மரணம், கோர்ட் சீன், என்று பல அருமையான அழுத்தமான கேரக்டர்கள் .
ராணுவ மேஜராக இருந்த காரணத்தால் எந்த நிலையிலும் நாட்டை விட்டுக் கொடுக்க விரும்பாத ஷாருக் கானின் கேரக்டர், குடும்ப வீட்டை மீட்க, அதில் இருந்து முரண்படும் பன்னுவின் கேரக்டர் . எனினும் அவர்களுக்குள் மாறாத காதல் என்று கதாபாத்திரங்களின் வடிவமைப்பில் நேர்த்தி .
லண்டனை அடையும் பயணத்தை இன்னும் அழுத்தமாக ஆக்ஷன் காட்சிகளாக அதிக நேரம் எடுத்துக் காட்டி அதன் பின் வரும் விசயங்களை கொஞ்சம சுருக்கி ஷார்ப்பாக சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் .
யூகிக்க முடிந்த கடைசி காட்சிகள், அளவுக்கு மீறிய நிதானமான கடைசிக் கட்ட கதை சொல்லல் பின்னடைவே .
படம் அகதிகள் பிரச்னை பற்றிப் பேசுகிறது . படத்தின் சில காட்சிகள் மற்றும் ரெஃபரன்ஸ்களில் உலகம் எங்கும் உள்ள பல்வேறு இன அகதிகள் காட்டப்படுகிறார்கள்.
இந்தியாவின் பழமையான முதன்மையான தேசிய இனம் தமிழ் இனம் . அந்த இன உறவுகள் உலகம் எங்கும் அகதிகளாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களைப் பொறுத்து ஒரு சின்ன அங்கீகாரம் கூடக் கிடையாது . அந்த வகையில் டங்கி …. ‘டாங்கி’யாகத்தான் இருக்கிறது.
கேட்டால் ஹமாரா தேஷ் என்பார்கள் இந்த வடக்கன்ஸ் .
இத்தனைக்கும் படத்தின் ஒளிப்பதிவாளர் முரளிதரனின் மகள் கார்த்திகா முரளிதரன் இதே தேதியில் வெளியாகும் சபாநாயகன் தமிழ்ப் படத்தின் முதன்மைக் கதாநாயகி வேறு
மொத்தத்தில் டங்கி… இதே ராஜ்குமார் ஹிரானி இயக்கிய பி கே , திரீ இடியட்ஸ் அளவுக்கு இல்லை .
எனினும் பாராட்டும்படியே இருக்கிறது