ஸ்ரீ விஷ்ணு விஷன்ஸ் சார்பில் ராஜசேகர் தயாரிக்க, ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப், பூஜா ஜவேரி, ஆஷிஷ் வித்யார்த்தி, பிரவீணா நடிப்பில் நவீன் கணேஷ் என்பவர் இயக்கி இருக்கும் படம்
சென்னையில் பிரம்மாண்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளைஞன் ( ஸ்ரீகாந்த்) மீது அந்த நிறுவன உரிமையாளரின் மகளுக்கு (பூஜா ஜவேரி) காதல். அவனும் சந்தோஷமாக ஏற்கிறான்.
இந்த நிலையில் அவனது அம்மா (பிரவீணா) தனது சொந்த ஊருக்கு மகளை அழைத்துக் கொண்டு போக, அங்கே பல வருடங்களுக்கு முன்பு , இந்த அம்மாவின் திருமணத்தால் ஊர் ரெண்டானது பற்றிப் பேசப்பட, மீண்டும் ஊரை ஒன்றாக்க, அங்குள்ள உறவுக்காரப் பெண் ஒருத்தியை ( வித்யா பிரதீப்), மகனை வற்புறுத்திக் கல்யாணம் செய்து வைத்து விடுகிறார் அம்மா.
சில நாட்கள் காதலியை மறக்க முடியாமல் தவித்தாலும் , ஒரு நிலையில் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பிக்கிறான். இருவரும் ஒரு பேய் படத்துக்கு போய் வர, திரையரங்கில் அவள் பயந்து நடுங்குகிறாள்.
அதன் பின் வீட்டில் அவளுக்கு பல விதமான சத்தங்கள் கேட்கின்றன . உருவங்கள் தோன்றுகின்றன. ஒரு நிலையில் பயந்து பேதலித்து , ஒரு குரல் இட்ட ஆணைப்படி தற்கொலை செய்து கொள்கிறாள்.
மனைவியை இழந்த இவனைத் தேடி பழைய காதலியும் வந்து விட்ட நிலையில், அதே சத்தங்கள் இவனுக்கும் கேட்கின்றன.
தன்னைக் காப்பாற்றக் கோரி அறிவியல் முறையில் ஆவி விரட்டும் நபரை ( ஆஷிஷ் வித்யார்த்தி) தேடித் போய் உதவி கேட்க நடந்தது என்ன என்பதே படம்.
கிராமத்துப் பெண் மற்றும் மனைவியாக சிரத்தையாக நடித்து கவனம கவர்கிறார் வித்யா பிரதீப். அவரது பெரிய கண்கள் அவருக்கு பெரிதும் உதவுகின்றன.
கிளாமருக்கும் கடற்கரை கில்மா பாட்டுக்கும் பூஜா ஜவேரி.
ஆஷிஷ் வித்யார்த்தி சிறப்பாக நடித்திருக்கிறார் .
படத்தின் பலம் கோபிநாத்தின் ஒளிப்பதிவு. ஆஷிஷ் வித்யார்த்தி இருப்பிடத்தைக் காட்டும் இடம் , கணவன் மனைவி வீட்டை காட்டும் விதம் எல்லாம் அருமை .
கதையின் முடிவு வித்தியாசமான ஒன்றுதான். ஆனால் கிராமத்துப் பெண்ணின் மரணத்துக்கு காரணம் யார் என்பது குழந்தைகளுக்கும் சுலபமாகப் புரியும அளவுக்கு காட்சிகளும் நடிப்பவர்களின் முக பாவங்களும் இருப்பது கொடுமை .
விஞ்ஞான ரீதியாக ஹலூசினேஷன் வித்தைகள் எல்லாம் காட்டியும் பலன் இல்லாமல் போய் விட்டது .