சாய் பிக்சர்ஸ் சார்பில் ப. சிவகுமார் தயாரிக்க, சீனு மோகன், தாரா பழனிவேல், சாய் அரவிந்த் நடிப்பில் சாய் அரவிந்த் எழுதி இயக்கி எம் எக்ஸ் பிளேயரில் வெளியாகி இருக்கும் படம் ஈ பி கோ 306
லால்குடி பக்கம் உள்ள சிறுமயங்குடி என்ற ஊரில் வாழும் – மனைவியை இழந்தவரும் இரவுக் காவாலளியாகப் பணியாற்றுபவருமான – முதியவரின் ( சீனு மோகன்) மகள் ஈஸ்வரி ( தாரா பழனிவேல்).
ஏழ்மை காரணமாக சரியான மருத்துவம் கிடைக்காமல் அம்மா இறந்து போன நிலையில் அப்படி ஒரு நிலைமை தனது ஊரில் உள்ள யாருக்கும் இனி வரக் கூடாது என்பதற்காக மருத்துவம் படிக்க லட்சியம் வைத்து, அதன் படியே படித்து அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம் படிக்க தயாராக இருக்கும் மாணவி ஈஸ்வரி
ஆனால் தமிழகம் போன்ற சமூக நீதி மாநிலங்களில் ஏழை மக்கள் முன்னேறக் கூடாது என்ற நோக்கில் அதுவரை படிக்காத பாடத்தில் தேர்வு நடத்தும் வஞ்சக நீட் தேர்வு சதியால் தன்னால் மருத்துவம் படிக்க முடியாதோ என்ற அச்சம் அடைந்த ஈஸ்வரி கோர்ட்டில் வழக்குத் தொடுக்கிறாள் .
அவளுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அரசியலும் சமூகமும் சுயநலத்துக்காகவும் அக்கறை இன்றியும் கண்டு கொள்ளாமல் போக , ஈஸ்வரி தொடர்ந்த வழக்கு தோற்கிறது . அவளால் நீட் படிக்க முடியாமல் போகிறது . அடுத்தது என்ன நடந்தது என்பதே இந்த ஈ பி கோ 306. வடக்கத்தி மற்றும் மேட்டுக்குடியின் வஞ்சக சதியால் மருத்துவக் கனவு பறிபோய் தன்னை மாய்த்துக் கொண்ட தங்கை அனிதாவின் கதை .
ஈஸ்வரியாக நடித்திருக்கும் தாராவின் முகத்தோற்றம் வேறு அப்படியே அனிதாவை நினைவுபடுத்தி மனதைப் பிசைகிறது .
நீட் தேர்வு வருவதற்கு முன்பு மருத்துவப் படிப்பை வைத்து அரசியல்வாதிகளும் கல்வித் தந்தைகளும் அடித்த கொள்ளையை விட நீட் தேர்வு வந்த பிறகு மருத்துவப் படிப்பை வைத்து அரசியல்வாதிகளும் கல்வித் தந்தைகளும் அடிக்கும் கொள்ளை அதிகம் என்று நிறுவும் காட்சிகள் அருமை .
அதே போல மதுக்கடை பார் வைத்து நடத்தினால் கிடைக்கும் வருமானத்தை விட நீட் தேர்வு கோச்சிங் செண்டர் வைத்து நடத்தினால் கிடைக்கும் வருமானம் அதிகம் என்ற ஒப்புமையும் அருமை .
நீட்டை எதிர்ப்பது போல நடித்து விட்டு உள்ளே அதன் மூலம் சம்பாதிக்கத் துவங்கிய அரசியல்வாதிகளை கழட்டி அடிக்கிறார்கள் படத்தில் .
சமூக நீதி வழியான படிப்பு மறுக்கப்பட்டதால் தகுதி இருந்தும் படிக்க முடியாமல் மன நோயாளியாய் திரியும் இளைஞனின் பாத்திரம் சவுக்கால் அடிக்கிறது.
வசனங்கள் ஆங்காங்கே மனம் கசிய வைக்கின்றன .
அனிதாவின் தற்கொலை கோழைத்தனம் அல்ல; ‘தன் மரணமாவது விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தாதா?’ என்ற ஏக்கத்தின் வெளிப்பாடே என்பதை உணர்த்தும் காட்சி போற்றுதலுக்கு உரியது . அதற்குப் பின்பும் அமைதியாகச் சோரம் போவதுதான் கோழைத்தனம் . (ஆனால் யதார்த்தம் என்ற பெயரில் விரக்தியை விதைக்கும் கிளைமாக்ஸ் தேவையா ?)
இப்படி பல நல்ல விசயங்களை சொல்லி இருக்கும் இந்தப் படம் மேக்கிங்கில் வழுக்கி இருப்பதுதான் வேதனை .
இயல்பாக நடிப்பதாக எண்ணிக் கொண்டு ஓவராக நடிக்கும் மறைந்த சீனு மோகன் ,கம்பீரமாக நடிப்பதாக எண்ணிக் கொண்டு ரொம்ப செயற்கையாக – சகிக்க முடியாத நீண்ட இடைவெளிகளோடு வசனம் பேசி நடிக்கும் சாய்….
இந்த இருவரும் படத்தை பின்னோக்கி இழுக்கிறார்கள். அதிலும் சாய் நடித்து இருக்கும் கதாபாத்திரம்அரசியல்வாதியா இல்லை சைக்கோவா என்ற கேள்வி வருகிறது . மன நோயாளி இளைஞனின் பாத்திரத்திலும் கூட மிகையோ மிகை நடிப்பு .
இவர்கள் இப்படி என்றால் மற்றவர்கள் நடிக்காமலே கேமராவை முறைத்து முறைத்து படுத்தி எடுக்கிறார்கள்.
ஈஸ்வரியாக நடித்து இருக்கும் தாரா , ஓரளவாவது பொருத்தமாக நடித் தாரா…. நாம் தப்பிக்கிறோம் .
எடுத்துக் கொண்ட கதையால் மரியாதைக்குரிய சமூக அக்கறைப் படைப்பாகிறது ஈ பி கோ 306