ஈட்டி @ விமர்சனம்

eettii 1

குளோபல் இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எஸ்.மைக்கேல் ராயப்பன் தயாரிக்க, அதர்வா, ஸ்ரீதிவ்யா, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிப்பில் ரவி அரசு என்பவர் இயக்கி இருக்கும் படம் ஈட்டி .

ரசிகனின் மனதில் பாயுமா? பார்க்கலாம்

அல்ஸ்மைசர் எனப்படும் மறதிப் பெருக்க நோய் , பர்க்கின்சன்ஸ் எனப்படும் தொடர் பக்கவாத நோய் இவற்றின் வரிசையில் உள்ள அரிதான நோய்களில் ஒன்று பிளீடிங் டிஸ் ஆர்டர் எனப்படும் ரத்த உறைவுத் திறனின்மை நோய்.

பிறப்பு முதல் இந்த நோயால் பாதிக்கப்பட்ட, தஞ்சாவூர்  இளைஞன் ஒருவன் (அதர்வா), ரிடில்ஸ் எனப்படும் தடைஓட்டப் பந்தய வீரனாக வளர்கிறான் . சிறு காயம் பட்டாலே பெருங்குருதிப் போக்கு ஆபத்தும் சற்று ஆழமான காயம் என்றால் உயிரே போகும் ஆபத்து உள்ள நோய் இது .

அவனது தந்தையான ஒரு தலைமைக் காவலருக்கு (ஜெயப்பிரகாஷ்) , தன் மகன் தேசிய மற்றும் உலக அளவில் விருதுப் பதக்கங்கள்  பெற்று , அதன் மூலம் காவல் துறையிலேயே பெரும் பதவிக்கு வரவேண்டும் என்பதே லட்சியம்.

பந்தய வீரனின் பயிற்சியாளரும் (ஆடுகளம் நரேன்) அவனை மிகப் பெரிய வீரனாக ஆக்க உழைக்கிறார் .  

விளையாட்டு வீரனுக்கும் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்திக்கும் (ஸ்ரீதிவ்யா), ஒரு தவறான தொலைபேசி அழைப்பால் ஏற்படும் குழப்பமும் சண்டையும் நட்பாகி பின்னர் நேரில் பார்க்காமலே காதலாகிறது.

eetti 3

சென்னையில் இருபத்தைந்து வருடமாக கள்ள நோட்டு அடிக்கும் ஒரு சமூக விரோதியின் முக்கியக் கையாளான ஏகா என்பவன் , நாயகி மீது ஆசைப் படுகிறான்.

இதற்கிடையில் இவர்களது கள்ள நோட்டு மாற்றும் சமூக விரோத வேலையில் நாயகியின் அண்ணன் பாதிக்கப்படுகிறான். அது தெரியாமல் நாயகியை ஏகா பெண் கேட்டு வருகிறான். அவர்களை அண்ணன் அவமானப்படுத்துகிறான் .

அவனை கொல்ல ஏகா திட்டமிடுகிறான் .

இதற்கிடையில் விளையாட்டு வீரன்,  தேசிய தடகளப் போட்டிக்காக சென்னை வருகிறான். நாயகியை நேரில் சந்தித்து காதல் வளர்க்கிறான்.

ஏகா மற்றும் கள்ள நோட்டு தாதாவின் கொலை முயற்சியில் இருந்து நாயகனின் அண்ணனை விளையாட்டு வீரன் காக்கிறான்.

அதனால் கள்ள நோட்டு தாதா மற்றும் கும்பலின் கோபம் விளையாட்டு வீரன் மீது திரும்புகிறது.

‘லேசாக கத்தியால் கீறினாலே போதும்; குருதி உறையாமல் விளையாட்டு வீரன் செத்து விடுவான்’ என்ற உண்மை, விதம் விதமான கத்திகள் மற்றும் கொடிய ஆயுதங்களுடன் புழங்கும் தாதா கும்பலுக்கு தெரிய வருகிறது.

கொடிய கும்பலிடம் இருந்து விளையாட்டு வீரன் தப்பினானா? எனில் எப்படி? அவன் தடகளப் போட்டியில் வென்றானா? அவனது தந்தை மற்றும் பயிற்சியாளரின் கனவு நிறைவேறியதா ? என்பதே ஈட்டி .

eetti 2

சபாஷ் அதர்வா !

ஊண் , உடல் குறைத்து உருவேறி, நிஜ தடகள விளையாட்டு வீரனாகவே வில்லாக , வில்லில் இருந்து கிளம்பும் அம்பாக தன்னை மாற்றிக் கொண்டு அசத்தி இருக்கிறார் அதர்வா. ஒரு கதாபாத்திரத்துக்காக பிரம்மிக்க வைக்கும் உடல் உழைப்பைக் கொட்டிக் கொடுத்து இருக்கிறார் . நிஜ தடை ஓட்ட வீரனின் உடல் மொழிகளை நூறு சதவீதம் கைக் கொண்டிருக்கிறார் .

அதர்வாவின் தந்தை முரளி இப்போது இருந்தால் , தன் மகனின் உழைப்பைக் கண்டு உச்சி முகர்ந்து சிலிர்த்திருப்பார்.

நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெருகேற வேண்டும்,

ஸ்ரீதிவ்யா பாத்திரத்தில் சரியாக பொருந்தி இருக்கிறார் .

நாயகியின் தந்தை போலீஸ் அதிகாரியிடம் சீறும் இடத்தில் வசனம் சிறப்பு .

பல்வேறு கிளையில் பிரிந்தும் இணைந்தும் கண்ணா மூச்சி காட்டும் திரைக்கதையை சரியாக கோர்த்துக்கொண்டு வருவதில் ராஜா முகமதுவின் படத் தொகுப்பு பாராட்டுக்களை அள்ளுகிறது .

ஜி வி பிரகாஷ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பரவாயில்லை ரகம்தான் 

தடை ஓட்டக் காட்சிகளில் சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு சபாஷ் போட வைக்கிறது.

eetti 4

ராஜ சேகரின் சண்டைக் காட்சிகள் சிறப்பு.

படத்தில் ஏகப்பட்ட லாஜிக் குளறுபடிகள் . அதனால் படத்தோடு ஒன்ற முடியவில்லை

பிளீடிங் டிஸ் ஆர்டர் உள்ளவர்கள் விளையாட்டு வீரராக இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் இந்தப் படத்தின் நாயகன் விளையாட்டு வீரனாக இருப்பதோடு மட்டும் இல்லாமல் பறந்து பறந்து சண்டை வேறு போடுகிறார் .

பொதுவாக கள்ள நோட்டு அடிப்பவர்கள் வேறு எந்த வகையிலும் தங்களை சிக்கலுக்கு ஆளாக்கிக் கொள்ள மாட்டார்கள், குறிப்பாக வேறு குற்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் இந்தப் படத்தில் வரும் கள்ள நோட்டுக் குற்றவாளிகள் மார்க்கெட்டில் மாமூல் வாங்கும் ரவுடிகள் போல, தங்களுக்கு எதிராகத் தும்முபவர்களைக் கூட துவளத் துவள அடிக்கிறார்கள் .

ராங் காலில் கெட்ட வார்த்தை பேசிய பெண்ணின் பேச்சை பதிவு செய்து வைத்துக் கொண்டு அவளை பிளாக் மெயில் செய்து அடிக்கடி போனுக்கு டாப் அப் பண்ண சொல்வது சுவாரஸ்யமான விஷயம்தான் . ஆனால் காட்சிகளில் வித்தியாசம் இல்லாமல் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாக வரும் அந்தக் காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன.

கள்ள நோட்டு விவகாரம், வழக்கமான அண்ணன் கேரக்டர் , அலுத்து சலித்த காதல் காட்சிகள் என்று படத்தில் பல பழ… பழக்கமான காட்சிகள், சென்னை வெள்ளத்தில் தேங்கிய குப்பைகள் போல , ஏராளமாக இருக்கின்றன .

சத்யா மூவீஸ் தயாரிக்க, கமல்ஹாசன்,  அம்பிகா நடிப்பில் ராஜசேகர் இயக்கிய காக்கி சட்டை படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த திரைக்கதைப் பகுதி ஒன்றை,  அப்படியே லவட்டி எடுத்து கிளைமாக்ஸாக வைத்து ‘அசத்தி’ இருக்கிறார் இயக்குனர் .

eetti 5

படத்தின் கடைசியில் வரும் திடீர் வில்லன் கேரக்டரை அவ்வளவு போராட்டங்களுடன் காட்டாமல் , ஒரு சின்ன கை குலுக்கல், எதிர்பாராத குரூரமான பிளேடு வெட்டு என்று சைலண்டாக காட்டி , இன்னும் சிலீர் ஏற்றி இருக்கலாம் .

பிளீடிங் டிஸ் ஆர்டர் நோய் உள்ள ஒரு நபரின் இயல்பு வாழ்க்கையை வைத்து கதை அமைத்து அதில் காதல் பொழுதுப்போக்கு , சிக்கல் , பரபரப்பு , பதைபதைப்பு, திரில் எல்லாம் சேர்த்து திரைக்கதை அமைத்திருந்தால் மிக வித்தியாசமான, அதே நேரம் மக்கள் கொண்டாடும் படமாக இருந்திருக்கும்  

கிளைமாக்ஸ், அரதப் பழசு !

மொத்தத்தில்……

ஈட்டி —- இன்னும் கூர்மையாக இருந்திருக்கலாம் !

மகுடம் சூடும் கலைஞர்கள்

————————————–

அதர்வா, ராஜா முகமது 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →