ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா தயாரிக்க, விஜயகுமார், பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ஜார்ஜ் மரியான், பாவல் நவகீதன், திலீபன், ராஜீவ் ஆனந்த், குலோத்துங்கன் உதயகுமார் நடிப்பில் தமிழ் இயக்கி இருக்கும் படம்.
பொதுவாக மக்களுக்கு சட்டமன்ற பொதுத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல்கள் மீது இருக்கும் ஆர்வம் உள்ளாட்சித் தேர்தல்கள் மீது இருப்பதில்லை. காரணம் அதில் நிற்பவர்கள் பெரும்பாலும் நமக்கு நன்கு தெரிந்தவர்கள் , பக்கத்தில் வசிப்பவர்கள். தவிர உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வேட்பாளருக்கான பரப்பும் குறைவு .
ஆனால் சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களை விட உள்ளாட்சித் தேர்தல்கள் அடிப்படை கட்டுமானத்தில் முக்கியமானவை. கட்சிக்கும் அப்பாற்பட்டு சில சமயங்களில் வேட்பாளரின் தூய்மைக்கு முக்கியத்துவம் தருபவை .
அப்படி உள்ளாட்சித் தேர்தல்களை வைத்து பின்னப்பட்ட கதை இது .
கட்சி ஒன்றின் நீண்ட நாள் உறுப்பினரும் நேர்மையானவரும் உறவினர்களை விட கட்சிக்காரர்களை முக்கியமாகக் கருதும் ஒரு வெள்ளந்தி நபரின் ( ஜார்ஜ் மரியான்) வெகுகால நண்பர் ஒருவர் ஒருமுறை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார். ஆனால் அந்த வெள்ளந்தி நபர் நட்பை விட கட்சிக் கட்டுப்பாடே முக்கியம் என்று முடிவு செய்து, கட்சி சொன்ன கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு வேலை செய்து ஜெயிக்க வைக்கிறார் .
சுயேச்சையாக நின்ற நண்பர் தோற்றுப் போக, நட்பு பகையாகிறது
வெள்ளந்தி நபரின் மகனுக்கும் (விஜயகுமார்) நண்பரின் மகளுக்கும் ( ரிச்சா ஜோஷி) இருந்த காதல், நண்பரால் உடைக்கப்படுகிறது . அமெரிக்க மாப்பிள்ளையைக் கட்டிக் கொண்டு காதலி போக, மனம் நொந்த காதலன் சில நாள் கழித்து இன்னொரு பெண்ணை ( பிரீத்தி அஸ்ராணி) மணந்து கொள்கிறான்
இந்த முறை அவனது அப்பாவான வெள்ளந்தி நபருக்கு சீட் தர கூட்டணியில் முடிவாகிறது . ஆனால் போன முறை வெள்ளந்தி நபரால் ஜெயித்த நபர் இந்த முறை விட்டுக் கொடுக்க மறுக்கிறார்.” நீங்க எல்லாம் தொண்டனுங்க . தொண்டன் தலைவனாக ஆசைப்படுவதா?” என்கிறார் .
வெகுண்டு எழும் மகன் தேர்தலில் நிற்கிறான் . ஆனால் சாதி உணர்வு , பணபலம் , அரசியல் சூழ்ச்சிகளால் தோற்கிறான் .
அரசியலில் வளர்ந்து இருக்கும் பழைய காதலியின் அண்ணன் இப்போது நட்புடன் வந்து நாயகனை தேர்தலில் நிற்கச் சொல்கிறான் . நாயகன் மறுக்க, மீண்டும் மீண்டும் வற்புறுத்த, நாயகன் எலெக்ஷனில் நிற்கிறான் .ஆனால் பழைய காதலியின் அண்ணன் காலை வாருகிறான்.
வெள்ளந்தி மனிதர் தனது அப்பாவுக்கு உதவாவது , தங்கையின் திருமண வாழ்வில் நாயகனால் ஏற்பட்ட குழப்பங்கள் இவையே அந்தக் கால் வாரலுக்குக் காரணம்.
அதிர்ந்து நிற்கும் நாயகன் , அவனது மனைவி, அவனது அப்பாவான வெள்ளந்தி நபர் இவர்களின் நிலை என்ன ஆனது என்பதே படம் .
ஆழமான அரசியல் கதை .
அரசியலில் எளிய மனிதர்களில் ஒரு நல்லவன் இருந்தால் என்ன ஆகும் என்பதை சொல்ல வந்த கதை .
வேலூர் மாவட்ட மண் மொழி அழகு
எலெக்ஷன் பற்றிய விவரணைகள் சிறப்பு .
தமிழ் தேசியத்தை தேவை இல்லாமல் சீண்டினாலும் சமூக நீதி பேசும் வகையில் பாராட்டப்பட வேண்டிய படம்.
இயக்குனர் தமிழின் படமாக்கலில் உயிர்ப்பு இருக்கிறது
மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவு கிராமியச் சூழலையும் அங்கே மோதும் உணர்வுகளின் தாக்கத்தையும் இயல்பாகப் பதிவு செய்கிறது .
கோவிந்த் வசந்தா இசையில் அந்த எளிமையான பிரச்சாரப் பாடல் கவனம் கவர்கிறது .
வசனங்கள் இயல்பாக எளிமையாக இருப்பது சிறப்புதான், ஆனால் அழகிய பெரியவன், விஜயகுமார், தமிழ் மூன்று பேர் எழுதியும் ஓர் அரசியல் படத்தில் இருக்க வேண்டிய அழுத்தமும் செதுக்கலும் வசனங்களில் இல்லாதது குறையே
விஜயகுமாரும் பிரீத்தி அஸ்ராணியும் உற்சாகமாக நடிக்கிறார்கள் . ஜார்ஜ் மரியான் வெள்ளந்தி
அரசியல்வாதியாக பொருந்துகிறார் .நாச்சியாள் சுகந்தி பல்லைக் கடித்துக் கொண்டு படு செயற்கையாக நடித்து இருக்கிறார்.
அதே நேரம் பாவல் நவகீதன், திலீபன் இருவரும் தங்கள் கேரக்டருக்கு அருமையாக நியாயம் செய்து இருக்கிறார்கள்.
ராஜீவ் ஆனந்த், குலோத்துங்கன் உதயகுமாரும் குறை வைக்கவில்லை,
உள்ளாட்சித் தேர்தல் பற்றிய படம் என்றாலும் பொதுத் தேர்தலுக்கு உரிய தன்மையே காட்சிகளில் வெளிப்படுகிறது . இன்னும் ஆழமாக உள்ளாட்சித் தேர்தல்களை அவதானித்து எழுதி எடுத்து இருக்கலாம் .
விழிப்புணர்ச்சி தரும் படம் என்றாலும் ,
அரசியலில் நேர்மையாக இருப்பவன் ஜெயிக்க முடியாது அல்லது அதற்கு நிறைய இழக்க வேண்டும் என்பதை சத்தம் போட்டு சொல்வது குறையே என்றாலும்,
முடிவில் ஒரு நெகிழ்ச்சியான திருப்தி
மொத்தத்தில்
எலெக்ஷன் … நோ அப்ஜெக்ஷன் !