தெனாலிராமனை அடுத்து வடிவேலு நடித்து இருக்கும் படம். கெட்டப் செட்டப் எல்லாம் அருமை . சில நேரம் சிரிக்க வைக்கிறார் . சில நேரம் புன்னகைக்க வைக்கிறார் . சில நேரம் ரசிக்க வைக்கிறார் . பே பே பே என்று ஆரம்பித்து மஹபூபா வரை போவது ரகளை . பேங்க் கொள்ளை காட்சி நல்ல காமெடி .
கிளைமாக்ஸ் சமயத்தில் வில்லன் தன்னை கண்டுபிடித்து விட்டதாக நினைத்து உள்ளுக்குள் பயந்து ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் கர்ஜிக்கும் காட்சியில் கலகலக்க வைக்கிறார் .
படத்தின் பெயருக்கு ஏற்ப சண்டைக் காட்சிகளில் எலியின் உடல் மொழிகளோடு அவர் நடந்து கொள்வதும்பாராட்டவைக்கிறது .
அவர் தலையில் இருக்கும் எலி வடிவ ‘விக்’ சிறப்பு
ஆனால் முழுப் படத்துக்கும் இவை மட்டுமே போதுமா ?
காட்சியில் மக்கள் நேரடியாக பார்த்து விட்ட விஷயத்தை மீண்டும் ஒருமுறை வாய் விட்டோ அல்லது மைன்ட் வாய்சிலோ இன்னும் பேசிக்கொண்டு இருப்பது எல்லாம் கொடுமை வடிவேலு .
சதா ஜஸ்ட் லைக் தட் ஆடுகிறார் . பாடுகிறார் . முறைக்கிறார் . சிரிக்கிறார் .ஒகே .
தோட்டா தரணியின் கலை இயக்கத்தில் நடன அரங்குகள் அருமை .
ஆனால் தாதாவின் இருப்பிடம் போன்ற அரங்குகளில் 1960களின் கால கட்ட குணாதிசயம் முழுமையாக வெளிப்படவில்லை .
ஜேம்ஸ்பாண்ட் படங்களின் தீம் மியூசிக்கை சற்றே இழுத்து இந்தப் படத்துக்கு ஒரு தீம் மியூசிக்கையும், எம் ஜி ஆர் நடித்த ராமன் தேடிய சீதை படத்தில் வரும் ”மச்சானா மாமானா யாரோ இவரு” பாடலின் பாணியில் சதாவுக்கு ஒரு அறிமுகப்பாடலும், கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் வித்யாசாகர். பின்னணி இசையில் அந்தக் கால இசையை கொண்டு வர முயன்று இருக்கிறார் . அவரது மனசில் அது இருந்தாலும் அதற்கேற்ற இசைக் கருவிகளை பயன்படுத்தாததால் , அந்த முயற்சி வெற்றி பெறவில்லை .
ஆராதனா இந்திப் படத்தில் இடம்பெற்ற மேரே சப் நோக்கி பாடலுக்கு வடிவேலு சதா ஆடிப் பாடுவது நகைச்சுவையாகவும் இருக்கிறது . படமாக்கி இருக்கும் விதம் வலிக்கவும் செய்கிறது .
பால் லிவிங்க்ஸ்டனின் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது . எடிட்டிங்கை குறை சொல்ல எல்லாம் ஒன்றும் இல்லை .
1960களின் சென்னையைக் காட்ட கை ரிக்ஷாவை எல்லாம் காட்டுகிறார்கள் . ஆனால் எங்கு பார்த்தாலும் தெருவில் சோடியம் வேப்பர் விளக்குகள் எரிகின்றன. நவீன கட்டிடங்கள் தெரிகின்றன. கால கட்டத்துக்கு அப்பாற்பட்டு வடிவேலு ” அவனவன் கிட்னி, இதயம், கல்லீரல் , மண்ணீரல், எல்லாத்தையும் தொலைச்சுட்டு நிக்கிறான் ” என்று வசனம் பேசுகிறார் .
ஒரு தயாரிப்பாளராக தனது பங்களிப்பை அருமையாக வியந்து பாராட்டும்படி மிக சிறப்பாக செய்து இருக்கிறார் சதிஸ் குமார் . இப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் கிடைப்பது ஒரு கொடுப்பினை.
உண்மையிலேயே இந்தப் படம் ஒரு வித்தியாசமான முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை . ஆனால் முயற்சியில் தீவிரம் இல்லை . இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் .
மொத்தத்தில் எலி….. ஒலி !