மக்கள் பாசறை சார்பில் ஆர் கே தயாரித்து கதாநாயகனாக நடிக்க, ஷாஜி கைலாஷ் இயக்கி இருக்கும் படம் என் வழி தனி வழி .
இந்த வழி வெற்றி வழியா ? பார்க்கலாம்
நேர்மையும் வீரமும் நிறைந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரி வெற்றிச் செல்வன் (ஆர் கே)…..அவருடன் துடிப்பாக பணியாற்றும் நேர்மையான உதவி அதிகாரிகள் குழு (தலைவாசல் விஜய், இளவரசு, மீனாட்சி தீட்சித் )…. அந்த அதிகாரியின் பாசம் நிறைந்த – விதவைத் தாய் (சீதா)…..’எப்போ கல்யாணம் பண்ணிக்குவீங்க மாமா ‘ என்று காத்திருக்கும் முறைப்பெண் (பூனம் கவுர் )
அந்த அதிகாரி எதிர்கொள்ளும் லோக்கல் ரவுடி (பொன்னம்பலம்), இன்டர்நேஷனல் தாதா (ராஜீவ் கிருஷ்ணா), மோசமான போலீஸ் கமிஷனர் (ராதாரவி), அந்த கமிஷனருக்கு துணை போகும் அயோக்கிய போலீஸ் அதிகாரிகள் (ஆசிஷ் வித்யார்த்தி, சம்பத் ) , மோசமான எம்.பி. (ஞானவேல்) , அதிகாரியை அழிக்கத் துடிக்கும் பெண் அமைச்சர் (ரோஜா) அந்த அதிகாரிக்கு எதிராக திரளும் அரசியல்வாதிகள் ( சங்கிலி முருகன், ராஜ் கபூர், டி. பி. கஜேந்திரன், பயில்வான் ரங்கநாதன்) …….
இந்த ஆட்களுடன் நேர்மையான போலீஸ் அதிகாரி வெற்றிச் செல்வன் நடத்தும் போராட்டம் …
இவற்றுக்கு இடையே அவருக்கு ஏற்படும் உறவின் இழப்பு …
இப்படி பல பலம் வாய்ந்த அயோக்கிய எதிரிகளுக்கு இடையே நேர்மையாக நடந்து கொண்டு, தனிப்பட்ட விதத்திலும் பாதிக்கப்பட்டு, கடைசியில் சட்டத்தின் துணையை மட்டுமே நம்பும் வெற்றிச் செல்வனால் வெல்ல முடிந்ததா இல்லையா என்பதே இந்தப் படம் .
கம்பீரமான போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு கனகச்சித்தமாக பொருந்துகிறார் ஆர் கே . சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிக்கிறார் . வசனங்களை உணர்ந்து பேசுகிறார் . ஆனால் ஃபாரினில் போய் எடுக்கட்ட பாடல் காட்சிகளிலும் விறைப்பாக இருக்கிறார் .
உதவி போலீஸ் அதிகாரியாக வரும் மீனாட்சி தீட்சித் நன்றாக செய்து இருக்கிறார் .
பஞ்சாபி புள்ளை பரமக்குடி பவழாயி வேஷம் கட்டி ஃபேன்சி டிரெஸ் காம்பெட்டிஷனில் வந்த மாதிரி இருந்தாலும், நடிக்க முயல்கிறார் பூனம் கவுர் . ஒரு பாடல் காட்சியில் வாரி வழங்குகிறார் .
ராதாரவி, இளவரசு , தலைவாசல் விஜய், ஆஷிஷ் வித்யார்த்தி , ரோஜா, ராஜீவ் கிருஷ்ணா போன்ற சீனியர் நடிகர்கள் போகிற போக்கில் சிறப்பாக செய்து இருக்கிறார்கள் .
அம்மா – மகன் பாசக் காட்சிகள் முதல் பாதியில் பொறுமையை சோதித்தாலும் இடைவேளைக்கு பிறகு கனமாகவும் அழுத்தமாகவும் அமைந்து கண் கசிய வைக்கிறது . இந்த ஏரியாவில் பாராட்டுப் பெறுகிறார் இயக்குனர் ஷாஜி கைலாஷ் . இது தவிர ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிய விதத்திலும் கவனம் கவர்கிறார் இயக்குனர் .
சின்ன சைலன்ஸ் கேப் கூட இல்லாதபடி, இசையை ஊற்றிக் கொண்டே இருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா . ஏன் சார் அப்படி ? தனக்கு எதிராக செயல்பட்ட மாவட்டச் செயலாளரை அமைச்சர் ரோஜா செங்குத்துக் குழி தோண்டி உயிரோடு நிற்கவைத்துப் புதைக்கும் காட்சியில் இசையே இல்லாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் தெரியுமா ஸ்ரீகாந்த் ?
சில இடங்களில் மேக்கப்பும் ஒளிப்பதிவும் சண்டை போட்டுக்கொண்டு ஆர் கே மற்றும் மீனாட்சி தீட்சித்தின் முகங்களை பதம் பார்த்தாலும், பொதுவில் ராஜரத்னத்தின் ஒளிப்பதிவு சிறப்பு .
ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி எதிர்கொள்ள வேண்டிய எல்லா எதிரிகளையும் படத்தில் காட்டி இருந்தாலும் அவனுக்கு அவனது போலீஸ் துறையிலேயே அதிக எதிரிகள் உருவாவதை அழுத்தமாக சொன்ன விதத்தில் பிரபாகரின் திரைக்கதை பாராட்டுக்குரியதகிறது . ஆரம்பத்தில் ரவுடியை சுட்டுக் கொல்லத் தயங்கும் பெண் போலீஸ் அதிகாரி ஒரு நிலையில் தானாக பொங்கி எழுந்து முக்கிய வில்லன் ஒருவரை போட்டுத் தள்ளுவது சுவாரஸ்யமான எவர்கிரீன் திரைக்கதை டெக்னிக் . அதே நேரம் பிரபாகரின் வசனத்தில்தான் அவரது முந்தைய படங்களின் கச்சிதம் குறைவு. சில இடங்களில் மட்டுமே வசனம் ஈர்க்கிறது .
சிங்கமுத்து , தம்பி ராமையா காமெடி இலுப்பைப் பூ !
பாடலில் ‘கொந்தளிக்கும்’ என்று ஒரு வார்த்தை போட்டதற்காக அடுத்தவரியில் ‘எந்திரிக்கும்’ என்று போடுவது எல்லாம், சில்லுண்டி வேலை .
‘ரோடு போடுவது பாலம் கட்டுவது போன்ற ஆக்கபூர்வமான பணிகளுக்காக மக்களின் வரிப்பணத்தை எடுத்து காண்ட்ராக்ட் என்ற பெயரில் தனியார் முதலாளிகளிடம் கொடுக்கிறோம் . அவன் முதலில் தனது லாபத்தை ஒதுக்கிக் கொள்கிறான் . மிச்சம் உள்ள பணத்தில் கடமைக்கு வேலை செய்வதற்காக அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்கிறான். அதிலும் கழிந்தது போக எஞ்சி உள்ள பணத்தை வைத்து ஆக்கப் பணிகளை கடமைக்கு செய்கிறான் . எனவேதான் டெல்லியில் விளையாட்டு மைதானம் இடிந்து விழுந்தது . சென்னை விமான நிலைய மேற்கூரை கட்டப் படும் போதிலிருந்து இன்றுவரை இருபது முறைக்கும் மேல் இடிந்து விழுந்து கொண்டே இருக்கிறது’ என்பது இந்தப் படம் வைக்கும் முக்கியக் குற்றச் சாட்டு . அற்புதம் ! சிறப்பு ! சபாஷ் .
ஆனால் அதற்கு இந்தப் படம் சொல்லும் தீர்வு , இது போன்ற ஆக்கபூர்வமான பணிகளுக்கு ராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என்பதுதான்.
அது போல ‘ராணுவத்துக்கு என்று தனிக் கோர்ட்டு இருப்பது போல போலீசுக்கும் தனி கோர்ட் இருக்க வேண்டும் . அப்போதுதான் போலீஸ் துறையில் முறைகேடுகள் குறையும் . போலீஸ் துறைக்கு கம்பீரம் ஏற்படும் ‘ என்றும் கருத்து தெரிவிக்கிறது முதல் படம் .
ராணுவ வீரர்கள் என்பவர்கள் நாட்டின் பாதுகாப்புக்காக கட்டமைக்கப் பட்டவர்கள் . ஆக்கபூர்வமான பணிகள் என்பது எப்போதும் நடப்பது . இந்தப் பணிகளுக்கு ராணுவவீரர்களை ஈடுபடுத்தி எப்போதும் வேலை செய்பவர்களாக மாற்றி விட்டால், போர்க்காலத்தில் அவர்களின் தனிச் சக்தி வெளியாகாமல் போகும் ஆபத்து உண்டு .
பூகம்பம் , வெள்ளம் போன்ற கால கட்டங்களில் ராணுவத்தை பயன்படுத்துகிறோமே .. அப்படித்தானே இதுவும் என்கிறது இந்தப் படம் . வெள்ளம் பூகம்பம் போன்றவை எப்போதாவது ஏற்படுபவை . அவைகளுக்கு ராணுவ வீரர்களை பயன்படுத்துவது வேறு . அது தவறும் இல்லை . ஆனால் அன்றாடம் நடக்கும் பணிகளுக்கு அவர்களை பயன்படுத்தினால் போர்க்காலத்தில் என்ன சிறப்பு சேவையை அவர்களிடம் எதிர்பார்க்க முடியும் ?
“உலகின் பல நாடுகள் ராணுவத்தினரை இது போன்ற பணிகளில் எப்போதும் ஈடுபடுத்திக் கொண்டுதான் இருக்கிறது” என்கிறார் ஆர் கே .
அது போன்ற நாடுகள் எல்லாம் பல கூட்டு நாடுகளாக ஒன்று சேர்ந்து பொதுவான ராணுவத்தை அமைத்துக் கொள்கின்றன . அந்த நாடுகளுக்கு இடையே எப்போதும் வெடிக்கும் எல்லைப் பிரச்னைகள் , போர் ஆபத்துகள் இல்லை . அங்கே பெரும்பாலான ராணுவ வீரர்களுக்கு போர் வேலையே இல்லை என்ற நிலையில் அவர்களை அப்படி பாலம் கட்டவும் ரோடு போடவும் பயன்படுத்துகிறார்கள் .
ஆனால் பாகிஸ்தான் , சீனா, பங்களாதேஷ் , இலங்கை என்று நான்கு பக்கமும் சண்டைக்கார நாடுகளை வைத்திருக்கும் இந்தியாவில், தொடர்ந்து எப்போதும் நடக்கும் பணிகளான பாலம் கட்டுதல் ரோடு போடுதல் கட்டுமானப் பணிகளுக்கு ராணுவத்தை பயன்படுத்துவது ஒத்து வராது .
மீறி செய்தால் என்ன ஆகும்?
ஜல்லிக்கட்டுக் காளையை தினசரி செக்காட்ட வைத்து விட்டு, பொங்கலுக்கு மட்டும் மீண்டும் ஜல்லிக் கட்டுக்கு அனுப்பினால் என்ன ஆகும் ? அந்த கதைதான் ஏற்படும்.
வேறு என்ன செய்யலாம் ?
பாலம் கட்டுதல் , கட்டிடம் கட்டுதல் , ரோடு போடுதல் அரசின் ஆக்க பூர்வ பணிகளுக்கு என்று அரசே ஒரு தனிப்பட்ட கார்ப்பரேஷன் அமைத்து ஆள் எடுக்க வேண்டும் . திட்டங்கள் , பணிகள் , செய்யப்படும் வேலை இவற்றுக்கு முதல் நிலை அதிகாரி முதல் கடை நிலை ஊழியர் வரை வழங்கப்படும் தினக் கூலி , வாரக் கூலி, மாதாந்திர சம்பளங்கள் ஆகியவை சம்பந்தப்பட்டவர்களின் பெயர் மற்றும் புகைப்படததோடு வெளிப்படையாக ஆன் லைனில் வெளியிடப்பட வேண்டும் . இதை செய்தாலே ஊழல் குறையும். ராணுவத்தை பயன்படுத்த தேவை இல்லை .
அதே போலத்தான் போலீசுக்கு தனி கோர்ட் அமைக்கும் கோரிக்கையும் .ராணுவ கோர்ட்டில் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையானவை . அது போல கடுமையான தண்டனைகளை போலீஸ் ஏற்பார்களா ? ராணுவ கோர்ட் குற்றங்கள் நாட்டின் எதிரிகளோடு சம்மந்தப்பட்டவை . எனவே அவற்றை வெளியே சொல்லத் தேவை இல்லை . ஆனால் போலீசாரின் குற்றங்கள் மக்களோடு சம்மந்தப்பட்டவை . அவற்றை மக்களுக்கு விளக்காமல் இருக்க முடியுமா?
போலீசுக்கு தனி கோர்ட் என்றால் அப்புறம் வக்கீல்கள் , டாக்டர்கள், என்ன்று ஒவ்வொருவரும் தனிக் கோர்ட்டு கேட்பார்கள் . அப்புறம் பொதுக் கோர்ட்டு என்பது அப்பாவி பொது ஜனத்துக்கு மட்டும்தானா?
கோர்ட் ஒன்றாக இருந்தாலும் தண்டனை குற்றத்துக்கு ஏற்ப மாறுகிறது அல்லவா? அது போல பொறுப்பான பணிகளில் உள்ளவர்கள் தவறு செய்தால் தண்டனையை அதிகப்படுத்தி அவற்றை பொது கோர்ட்டுகள் மூலம் மக்கள் அறிய வழங்கினாலே போதும் . காவல்துறை தூய்மை பெறும்.
எனவே சமூக அக்கறையோடு படம் முன் வைக்கும் குற்றச் சாட்டுகள் அற்புதமானவை . அனால் அவற்றுக்கு படம் சொல்லும் தீர்வுகள்தான் சிறுபிள்ளைத்தனமாக உள்ளன.
ஆனாலும் என்ன?
கதை திரைக்கதை வசனம் என்று எதுவுமே இல்லாமல் படங்கள் வரும் காலத்தில் இவ்வளவு விவாதங்களை கிளப்பும் அளவுக்கு படத்தை உருவாக்கியதற்கு ஆர் கே , ஷாஜி கைலாஷ் , பிரபாகர் மூவருக்கும் மனதாரத் தரலாம் ஒரு மகிழ்வான கைதட்டலை .
என் வழி தனி வழி .. B and C வழி