திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்க, சித்தார்த், தீபா சந்நிதி, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிப்பில் பிரசாத் ராமர் இயக்கி இருக்கும் படம் எனக்குள் ஒருவன் . கன்னடப்படமான லூசியா படத்தில் ரீமேக் என்ற அடையாளம் இருந்தாலும், இந்த எனக்குள் ஒருவன் படம் பல விஷயங்களில் பல மடங்கு லூசியாவை விட பல படிகள் மேலே .
அப்படி என்ன இருக்கிறது இந்த எனக்குள் ஒருவன் படத்தில்? பார்க்கலாம் வாருங்கள் .
தூக்கமின்மை நோயால் பாதிக்கப்படும் நாயகனுக்கு (சித்தார்த்) ஒரு வித்தியாசமான– விபரீதமான லூசியா என்ற மாத்திரை கிடைக்கிறது. நாம் இயல்பில் வாழும் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு என்னவாக எப்படி வாழவேண்டும் என்று ஆசைப் படுகிறோமோ அந்த வாழ்க்கையை நினைத்துக் கொண்டு அந்த மாத்திரையை போட்டு விட்டுப் படுத்தால் போதும் . நல்ல தூக்கமும் வரும் ; ஆசைப்பட்ட அந்த வாழ்க்கை அட்சரசுத்தமாக கனவில் விரியும் .
அது மட்டும் அல்ல தூங்கி விழிக்கும் போது எந்த இடத்தில் கனவு முடிகிறதோ , அந்த இடத்தில் இருந்து மறுபடி தூங்க ஆரம்பிக்கும்போது கனவு தொடரும் .
இப்படியாக நாயகனுக்கு நனவு வாழ்க்கை ஒன்றும் கனவு வாழ்க்கை ஒன்றும் அமைகிறது.
ஒரு வாழ்க்கையில் நாயகன் நலிந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு பழமையான திரையரங்கின் ஊழியன். படம் போட்ட பிறகு இருட்டில் திரையரங்குக்குள் நுழையும் நபர்களின் டிக்கெட்டை வாங்கி, அவர்களின் சீட் நம்பரை டார்ச் லைட் அடித்துப் பார்த்து , அதே டார்ச் லைட் ஒளி மூலம் சரியான இருக்கையில் அமர வைக்கும் வேலை பார்ப்பவன். பெரிதாக வருமானம் இல்லாத அந்த தியேட்டரின் முதலாளி (ஆடுகளம் நரேன்) அவனுக்கு மாதம் மூவாயிரம் மட்டுமே சம்பளமாகக் கொடுத்தாலும், அவனை தனது சொந்தத் தம்பி போல பார்த்துக் கொள்கிறார் .
நாயகனின் தகுதிக்கு ஏற்ப ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க முயல , அப்படி பார்க்கப் போன பெண்ணுக்கு (தீபா சந்நிதி) அவனை பிடிக்கவில்லை . என்றாலும் அந்தப் பெண் மீது அவனுக்கு காதல் வருகிறது . அவனது எளிய காதலை ஆரம்பத்தில் அவள் ஏற்க மறுத்தாலும் பின்னர் ஏற்கிறாள். அதே நேரம் அவனை தொழில் ரீதியாக தரம் உயர்த்தவும் முயல்கிறாள்.
அந்தத் தியேட்டர் முதலாளி வாங்கிய சொற்ப கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில், தியேட்டரை எழுதித் தரச் சொல்லி மிரட்டுகிறது ஒரு கந்து வட்டி தாதா கோஷ்டி . ஒரு நிலையில் அந்த கோஷ்டியால் தியேட்டர் முதலாளிக்கு உயிராபத்து ஏற்படுகிறது . இப்படி தொடர்கிறது ஒரு கதை .
இன்னொரு கதையில் நாயகன் ஒரு புகழ் பெற்ற இளம் ஹீரோ . பெரிய நடிகையாக ஆசைப்படும் ஒரு மாடல் ( இதுவும் தீபா சன்னிதியே ) அவனை காதலிக்கிறாள் . ஆரம்பத்தில் காதலை ஏற்க மறுக்கும் நாயகன் பின்னர் ஏற்கிறான் . அந்தக் கதையில் தியேட்டர் முதலாளியாக வரும் நபர் இந்தக் கதையில் நடிகனுக்கு மேனேஜர் , உடன்பிறவா அண்ணன் என்று சகல விதத்திலும் துணையாக இருக்கும் மனிதராக வருகிறார் . இந்தக் கதையில் நாயகனை பணம் கேட்டு மிரட்டும் ஒரு கடத்தல் கோஷ்டியால் நாயகனுக்கு உயிராபத்து ஏற்படுகிறது . இப்படி தொடர்கிறது இந்தக் கதை .
திரைக்கதை அமைவுப்படி படத்தின் துவக்கத்தில் நாயகன் அடிபட்டு மருத்துவமனையில் படுத்திருக்க பிளாஷ்பேக் உத்தியில் இரண்டு கதைகளும் அடுத்தடுத்து விவரிக்கப்படுகிறது . நடிகனின் கதை கருப்பு வெள்ளையிலும் , தியேட்டர் ஊழியனின் கதை வண்ணத்திலும் விரிகிறது .
இந்த இரண்டு கதைகளின் பின்னலுக்கு இடையே மருத்துவமனையில் இருக்கும் நாயகனுக்கு என்ன ஆனது என்பது பற்றி போலீஸ் நடத்தும் விசாரணை மூன்றாவது பிரியாக நீள, ஒரு அழகான இளம்பெண்ணின் நீண்ட கருங்கூந்தலை மூன்றாகப் பிரித்துப் பிணைத்து இறுக்கமாக பின்னப்படும் அழகிய சடை போல விரிகிறது, திரைக்கதை .
இன்னும்தான் இந்தத் திரைக்கதையில் பாராட்ட எவ்வளவு அற்புத விஷயங்கள் தெரியுமா?
ஒரு கதையில் நாயகி மீது நாயகனுக்கு முதலில் காதல் வர, இன்னொரு கதையில் நாயகன் மீது நாயகனுக்கு முதலில் காதல் வருகிறது. ஒரு கதையில் நாயகன் ஊருக்குப் போகிறான் . இன்னொரு கதையில் நாயகி ஊருக்குப் போகிறாள் . ஒரு கதையில் அண்ணன் மீது கொலை மிரட்டல் . இன்னொரு கதையில் நாயகன் மீது கொலை மிரட்டல். ஒரு கதையில் லூசியா மாத்திரை விவகாரம் முன்னரே சொல்லப் படுகிறது . இன்னொரு கதையில் கடைசியாக சொல்லப்படுகிறது . ஒரு கதையில் நாயகன் அப்பாவி . இன்னொரு கதையில் நாயகி அப்பாவி .
இப்படியாக சில கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு அவற்றை ஒரு கதையில் இருந்து இன்னொரு கதைக்கு முற்றிலும் மாறாக தலை கீழாக எதிர் எதிராக மாற்றி திருப்பி புரட்டி பிரசாத் ராமர் ஆடியிருக்கும் திரைக்கதை சித்து விளையாட்டை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை . இரண்டு கதைகளையும் கிளைமாக்சில் கொண்டு வந்து இணைக்கும் விதம் அட்டகாசம் என்றால் அங்கு வரும் ஒரு எதிர்பாராத திருப்பம் … பிரம்மாண்டப் பிரமாதம் !
தியேட்டர் உதவியாளன் மீது நாயகிக்கு காதல் வந்த சமயம் அவள் எந்தத் தியேட்டருக்கு போனாலும், தன் கையில் ஒரு டார்ச் லைட்டோடு போய் , அங்கே டார்ச் லைட் வைத்து பணியாற்றும் உதவியாளர்களின் முகங்களில் அடித்துப் பார்ப்பது , முகம் காட்டும் போது பிடிக்காத நாயகன் அதற்கும் முன்பே மிக்கி மவுஸ் பொம்மை முகத்துடன் மனம் கவர்ந்து போய் விட்டதை நாயகி உணர்வது , கடைசியில் தியேட்டர்கார நாயகனின் வீட்டில் குழந்தை , மனைவி , கிச்சன் , வீட்டில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றாக மறைவது ஆகிய காட்சிகளில் ‘டைரக்டோரியல் டச்’களில் உச்சம் தொடுகிறார் இயக்குனர் .
இப்படியாக இந்தப் படத்தின் திரைக்கதை , படமாக்கல் , இயக்கம் ஆகிய விஷயங்களின் சிறப்புகளை சொல்லித் தீராது . படம் பார்த்து முடித்து விட்டு வந்து விட்ட பிறகும் காட்சிகளை மனத் திரையில் ஓட்டிப் பார்த்தால் புதிது புதிதாக சில விஷயங்கள் புரிவது , ஓர் அற்புத அனுபவம்.
இரண்டு கதைகளிலும் நடித்து இருப்பது ஒரே நடிகனா இல்லை வெவ்வேறு ஆளா என்று கேட்கும் அளவுக்கு நிறம் , தோற்றம் , உடல் மொழிகள், குரல் , வித்தியாசமான முக பாவனைகள் என்று வீடுகட்டி விளையாடி இருக்கிறார் சித்தார்த், விருது கேடயங்களுக்கு அலமாரிகளை தயார் செய்து வையுங்கள் சித்து .
தீபா சந்நிதி ஒரு கதையில் உடல் அழகையும் இன்னொரு கதையில் மன அழகையும் வெளிப்படுத்தும்படி நடித்துள்ளார்.
சித்தார்த், தீபா சந்நிதி இருவருக்குமாவது கெட்டப் வித்தியாசம் என்னும் கூடுதல் பலம் ருக்கிறது . ஆனால் இரண்டு கதைகளின் பாத்திரங்களுக்கும் இடையே பெரிதாக தோற்ற வித்தியாசம் இல்லாத நிலையிலும் பிஹேவியர் நடிப்பால் அசத்த்த்தி இருக்கிறார் ஆடுகளம் நரேன் .
ஒரே கதாபாத்திரங்கள் ஒரே நடிகர்கள் ஆனால் மாறுபட்ட சூழல்கள் சடார் சடார் திருப்பங்கள் , மூன்று கதை டிராக்குகள் என்று…. சும்மா வாயால் சொல்லப் போனாலே நுரை தள்ள வைக்கும் இந்தத் திரைக்கதையை, தனது அற்புதமான படத்தொகுப்பால் உலக உருண்டையை சுமக்கும் அட்லஸ் போல சுமந்து ஜொலிக்கிறார் எடிட்டர் லியோ ஜான் பால் .
படத்தில் மூன்றே பாடல்கள் . மூன்றும் சும்மா பட்டையைக் கிளப்புகிறது. பின்னணி இசையும் படத்துக்கு யானை பலம் சேர்க்கிறது . சபாஷ் சந்தோஷ் நாராயணன் . பின்னிப் பெடல் எடுத்துட்டீங்க .
அதே போல கதைகளை வித்தியாசப் படுத்திக் காட்டியது , ஒவ்வொரு காட்சிக்குமான மன நிலைக்கு ரசிகனை தயார் செய்வது, லைட்டிங் ரசவாதம் , கிளைமாக்சில் கடற்கரையில் வரும் பிரம்மாண்டமான் ஏரியல் வியூ ஷாட் என்று அசத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் .
ஸ்ரீ சங்கர் , விஷ்ணு கோவிந்த் இவற்றின் ஒலி வடிவமைப்பு, உணர்வுகளை மொத்தமாக ரசிகனுக்கு கடத்துகிறது . விஜய் ஆதி நாதனின் கலை இயக்கமும் பாராட்டும்படி இருக்கிறது .
மருத்தவமனையில் படுத்திருப்பது எந்தக் கதையின் நாயகன் என்பதை யூகிக்க முடியாதபடி படமாக்கிய விதத்தில் இயக்குனர் , ஒளிப்பதிவாளர் , நடிகர், கலை இயக்குனர் அனைவரும் நூற்றுக்கு நூறு வாங்குகிறார்கள் .
கதையில் நடக்கும் எந்த ஒரு குற்ற நிகழ்வுக்கும் லூசியா மாத்திரை காரணம் இல்லை எனும்போது , அந்த மாத்திரை தருபவர்களை எதற்கு சமூக விரோதிகள் போல நடத்த வேண்டும் ? இந்த ஏரியாவில் மட்டும் சறுக்கி இருக்கிறது படம் . மற்றபடி எனக்குள் ஒருவன் ஒரு முழுமையான படம் .
பொதுவாக இன்னொரு மொழியில் வெற்றி பெற்ற படத்தை ரீமேக் செய்யும்போது மூலப் படத்தை விட பத்து சதவீதம் பெட்டராக இருந்தாலே கொண்டாடித் தீர்ப்பது வழக்கம் . ஆனால் இந்த எனக்குள் ஒருவன் படமோ, லூசியாவை விட இரு நூறு மடங்கு மேல் .
மொத்தத்தில் எனக்குள் ஒருவன் …. தவற விடக் கூடாத தங்கமான திரை அனுபவம்
மகுடம் சூடும் கலைஞர்கள்
—————————————
பிரசாத் ராமர், சித்தார்த், லியோ ஜான் பால் , சந்தோஷ் நாராயணன், சி.வி.குமார், கோபி அமர்நாத் , ஆடுகளம் நரேன், லூசியா’ பவன் குமார் , ஸ்ரீ சங்கர் மற்றும் விஷ்ணு கோவிந்த்
Comments are closed.