வன்சன் மூவீஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரிக்க, ஜெய், பிரனிதா, தம்பி ராமையா, கருணாகரன் , காளி வெங்கட், நவீன் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிக்க,
மகேந்திரன் ராஜாமணி இயக்கி இருக்கும் படம் எனக்கு வாய்த்த அடிமைகள் . இந்த அடிமைக்கு ரசிகர்களாகிய எஜமானர்கள் வாய்ப்பார்களா ? பார்க்கலாம் .
கிருஷ்ணா என்ற இளைஞன் (ஜெய்), திவ்யா என்ற பெண்ணை (பிரனிதா) மனப்பூர்வமாகக் காதலிக்கிறான் .
கிருஷ்ணாவுக்கு ஷேர் ஆட்டோ ஓட்டும் மைதீன் பாஷா (காளி வெங்கட்) , கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கும் ரமேஷ் (கருணாகரன்) ,
செல்போன் கஸ்டமர் சர்வீசில் பணியாற்றும் சவுமி நாராயணன் (நவீன்) என்று மூன்று நண்பர்கள் .
ஒரு நிலையில் திவ்யா , கிருஷ்ணாவுக்கு துரோகம் செய்து விட்டு வேறொரு பணக்கார இளைஞனோடு ஆண்கள் கழிவறையில் …..
மனம் வெறுத்த கிருஷ்ணா தற்கொலைக்கு முடிவு செய்து விட்டு நண்பர்களுக்கு போன் செய்து ஆறுதல் தேட , ஆளுக்கொரு பிரச்னையில் இருக்கும் நண்பர்கள் கிருஷ்ணாவை திட்ட,
போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யும் கிருஷ்ணா ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு தற்கொலைக்கு முயல்கிறான் .
ஒருநிலையில் கிருஷ்ணாவை தேடிக் கிளம்பும் நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்னையால் ஒரு கொலை முயற்சிக்கு துணை போன குற்றச் சாட்டில் மைதீன் ஜெயிலுக்குப் போகிறான் .
தன வருங்கால போலீஸ் மாமனார் முன்பாகவே ஒரு விபச்சாரப் பெண்ணுடன் இருப்பது போன்ற பொய்யான சூழல் காரணமாக , ரமேஷின் திருமணம் கேள்விக்குறி ஆகிறது .
திவ்யாவின் புதிய காதலன் செய்த கொலை முயற்சியால் சவுமி படுகாயப் படுகிறான் .
ஆனால் தற்கொலைக்கு முயன்ற கிருஷ்ணா . மனம் மாறி நம்பிக்கையோடு வெளியே வருகிறான்.
தன்னால் தனது நண்பர்களுக்கு ஏற்பட்ட நிலை அறிந்த கிருஷ்ணா என்ன செய்தான் என்பதே இந்த படம் .
ஜெய் தனக்கே உரிய வழக்கமான பாணியில் வருகிறார் . பிரனிதா ஒப்புக்கு சப்பாணி ஹீரோயின் . கண்ணும் பல்லும் தவிர எதுவும் பலன் இல்லை .
அவரை விட கருணாகரனின் வருங்கால மனைவியாக வரும் பெண் இயல்பாக கவர்கிறார் .காளி வெங்கட் நடிப்பு யதார்த்தமாக உள்ளது
காதலிகள் போனை பயன்படுத்தி செய்யும் அழிச்சாட்டியம் பற்றி சொல்லும் அந்த காட்சி ரசிக்க வைக்கிறது
கெஸ்ட் ரோலில் சந்தானம் வரும் காட்சியும் சிறப்பு .சில இடங்களில் வசன காமெடியும் பரவாயில்லை .
ஆனால் பல சமயங்களில் நிஜமாகவே காமெடியா இல்லையா என்ற கவலை இல்லாமல் கேப் விடாமல் பேசிக் கொண்டே இருப்பதை தவிர்த்து இருக்கலாம்
ஆரம்பத்தில் சவுமியுடன் சண்டை போடும் லோக்கல் நண்பர்கள் காட்சி எல்லாம் எதற்கு ? அவற்றால் எல்லாம் திரைக்கதைக்கு என்ன பலன் ?
அதுபோல தம்பி ராமையா மன நல மருத்துவராக வரும் காட்சிகளும் பெரிதாகப் பலன் தராமல் சில புன்னகைகளை மட்டும் கொடுத்து விட்டுப் போய் விடுகின்றன.
கிருஷ்ணாவின் காதல் தோல்வி, அவனது நெருங்கிய நண்பர்கள் யாருக்கும் தெரியைல்லை என்று சொல்லும்போதே திரைக்கதை அந்நியமாகிப் போகிறது .
என்னதான் துரோகம் என்றாலும் ஒரு கதாநாயகி கதாநாயகனுக்கு துரோகம் செய்வதை இப்படி மூக்கைப் பொத்தும் வகையில் சொல்லாமல் வேறு மாதிரி சொல்லி இருக்கலாம் .
ஜெய்யையும் மொட்டை ராஜேந்திரனும் ‘அப்படி’ என்பது போல காட்டுவதும் .. சாரி ரொம்ப ஓவர்
காமெடி என்றால் லாஜிக் தேவை இல்லை என்பது இனி வேலைக்கு ஆகாது . அதே போல அருவருப்பு இல்லாத காமெடிகளே நன்றாக ரசிக்கப்படும் .
ஜெய் தற்கொலை செய்து கொள்ளாமல் வெளியே வந்த பிறகே படம் முடிந்து விட்ட உணர்வு .. அதன் பிறகு வரும் எல்லாமே திரைகதையில் இயல்பாக வளர்ந்ததாக தெரியாமல்,
வலுக்கட்டாயமாக ஓட்ட வைத்த உணர்வு ஏற்படுகிறது .
இதை எல்லாம் தவிர்த்து , நட்பு காதல் என்ற விசயத்தை வைத்து வித்தியாசமான திரைக்கதை அமைத்து சினிமா என்பது மைக் மட்டுமில்லை என்பதை உணர்ந்து நல்ல படமாக்கலையும் கொடுத்து இருந்தால் ,
இந்த அடிமைகள் அரசர்களாக ஆகி இருப்பார்கள் .