குள்ள நரிக் கூட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி அடுத்து வாலி பிலிம் விஷன்ஸ் தயாரிப்பில் இயக்கும் படம் எங்க காட்டுல மழை.
மதுரை அருகே உள்ள கிராமத்தில் இருந்து வெவ்வேறு எதிர்பார்ப்புகளோடு சென்னைக்கு வரும் கதாநாயகன் முருகன் , அவனது நண்பன் குபேரன் இவர்களின் புதிய நகர வாழ்க்கையில் நாயகனுக்கு மகேஸ்வரி என்ற பெண் மீது காதல் வருகிறது. ஆனால் அந்தப் பெண் தன்னை மணக்க விரும்பும் ஒருவனின் பெயரை சொல்லி அவன் நல்லவனா கெட்டவனா என்று விசாரித்து சொல்ல வேண்டும் என்று சொல்ல .. அடுத்து அந்தர கந்தர சுந்தர காமெடிகள்தான் இந்த எங்க காட்டுல மழை படமாம் .
இப்படியாக காதலையும் காமெடியையும் கலந்து கட்டி உருட்டி புரட்டி பிசைந்து உருவாகும் இந்தப் படத்துக்கு குள்ளநரிக் கூட்டம் ஆதலால் காதல் செய்வீர் படங்களுக்கு வசனம் எழுதிய கிளைட்டன் வசனம் எழுத, மேற்படி அதே ஆதலால் காதல் செய்வீர் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஏ.ஆர் சூர்யாவின் ஒளிப்பதிவு செய்ய இசை அமைத்து இருக்கிறார் ஸ்ரீவிஜய்.
கதாநாயகனாக சென்னையில் ஒரு நாள் படத்தில் நடித்த மிதுன் நடிக்க சுருதி ராம கிருஷ்ணன் கதாநாயகியாக நடிப்பு மீட்ட, இவர்களுடன் அப்புக் குட்டி , மதுமிதா, சாம்ஸ் ஆகியோர் நடிக்க ,வித்தியாசமான போலீஸ் வேடத்தில் கலக்கி இருக்கிறாராம் அருள்தாஸ் . மிக முக்கிய வேடத்தில் டக்ளஸ் என்ற நாமகரணம் கொண்ட காதாபாத்திரத்தில் நடிக்கிறார், சென்னையைச் சேர்ந்த கோல்டன் ரெட்ரிவல் என்ற நாயார் . (பேரைப் பார்த்த உடனே யாரோ ஹாலிவுட் நடிகைன்னு நினைச்சீங்களோ ?)
படத்தில் ஹீரோ ஹீரோயின் ஹீரோவின் நண்பன் யாருக்கும் பஞ்ச் டயலாக் எதுவும் இல்லை . ஆனால் டக்ளசுக்கு பக்கம் பக்கமாய் பக்கா பக்காவாய் பஞ்ச் டயலாக் இருக்கிறதாம்.
எப்பூடி சார் என்று இயக்குனரிடம் கேட்டால் எல்லாமே மைன்ட் வாய்ஸ்தான் சார். ஆனா காமெடி பட்டையை கிளப்பும் . நானே டப்பிங் வாய்ஸ் கொடுக்கப் போறேன்” என்கிறார் இயக்குனர் . படத்தில் நிறைய காட்சிகள் நாயாருக்கும் அப்புக்குட்டிக்கும் தானாம் . நாய் மட்டும் நாப்பது நாள் கால்ஷீட் கொடுத்து நடிச்சிருக்காம் . (அப்ப கண்டிப்பா ஹீரோயினை விட பெரிய கேரக்டராதான் இருக்கும் )
“குடும்பத்தோடு பார்க்க வேண்டிய பொழுது போக்கு சித்திரம் இது ” என்கிறார் இயக்குனர் பாலாஜி.
பார்ப்போம் .