தயாரிப்பாளராகி விட்டார் நடிகர் டெல்லிகணேஷ் . அதுவும் தனது ‘தயாரிப்பு’க்காகவே இவர் தயாரிப்பாளராகி இருக்கிறார் . அந்த ‘தயாரிப்பு’ என்பது அவர் மகன் மஹா .
ஓம் கணேஷ் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் நாடகங்கள் நடத்திய டெல்லி கணேஷ் அதே பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி இருக்கிறார் . படத்தின் பெயர் என்னுள் ஆயிரம் . கதாநாயகியாக நடித்து இருக்கும் மரீனா மைக்கேல் மலையாளத்தில் சில படங்களில் நடித்து இருப்பவர் . தமிழில் இது அவருக்கு முதல் படம் .
கதை திரைக்கதை வசனம் எழுதி இருக்கும் கிருஷ்ணகுமார் இயக்குனர் ஏ.எல் . விஜய்யின் உதவியாளர் . ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் உதவியாளர் அதிசயராஜ் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகிறார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் இரண்டு பாடல்களை திரையிட்டார்கள் மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தரின் இசை. ஒரு பாடலில் ஆண்கள் ஆடும்போது மலையாள செண்டை மேளத்தையும் பெண்கள் ஆடும்போது தமிழ்நாட்டு தவில் மேளத்தையும் பயன்படுத்தி இருக்கிறார் .
‘உன் உதட்டில் உள்ள வரிகளை எல்லாம் எண்ணி முடிக்கவே பல நாள் ஆகும்’ என்ற ரீதியில் வரும் ஒரு வசனம் ஈர்க்கிறது .
ஓர் இளைஞன் மற்றும் இளம்பெண்ணின் காதல் . அந்த இளைஞனுக்கு வேறொரு பெண்ணுடன் ஏற்படும் உடல் தொடர்பு என ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ பாணியில் பயணித்து , கிரைம் , சஸ்பென்ஸ் என்று படத்தின் கதை போகும் என்பது…… பாடல்கள், முன்னோட்டம், மற்றும் படத்தின் புகைப்படங்களில் இருந்து தெரிகிறது .
நிகழ்ச்சியில் பேசிய டெல்லி கணேஷ் ” முப்பத்தஞ்சு வருசமா நடிச்சுட்டு இருக்கேன் . என் மகன் மஹாவை படிக்க வச்சு பெரிய ஆளாக்க ஆசைப்பட்டேன் . என்ஜினீயரிங் படிக்க வச்சேன் . வெளிநாட்டுக்கு போய் மேல் படிப்பும் படிச்சுட்டு வந்தார் . வந்ததும் நடிக்கனும்னு சொன்னார் . சரி … புள்ள ஆசையை நிறைவேத்தறதுதானே அப்பனோட வேலை ? இல்லன்னா அவன் வருத்தப்படுவான் . அவன் வருத்தப்பட்டா என் மனைவிக்கு தாங்காது.
படம் தயாரிக்க முடிவு செஞ்சேன் .
அந்த சமயத்துல இயக்குனர் கிருஷ்ண குமார் என் மகனை பார்த்து கதை சொல்லி இருக்கார் . கதை என் மகனுக்கு பிடிச்சு இருந்திருக்கு . என்னை கேட்கச் சொன்னான் . கேட்டேன் . நல்லா இருந்தது . இயக்குனர் விஜய் கிட்ட போன் பண்ணி கிருஷ்ணகுமார் பத்தி கேட்டேன் . ‘நம்பி படம் தரலாம். திறமைசாலி’ன்னு சொன்னார். ஆரம்பிச்சுட்டேன் .
படத்தில் பல புதுக் கலைஞர்கள் அறிமுகம் ஆகறாங்க . தவிர பிரபலமான பலர் , ‘படம் தயாரிக்கிறது நான்’னு சொன்ன உடனே சம்பளத்தை குறைச்சுகிட்டு எனக்காக வேலை செஞ்சு கொடுத்தாங்க . அவங்களுக்கு நன்றி .
ஆரம்பத்துல ஒரு நாள் என் பையன் நடிப்பை பார்க்கப் போனேன் . நல்ல நடிச்சான் . திருப்தியா வந்துட்டேன் . அப்புறம் ரெண்டு மூணு நாள் ஷூட்டிங் ஸ்பாட் போனதோட சரி . அதுக்கப்புறம் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கல . படம் பார்த்தேன் . நல்லா வந்துருக்கு .
அந்த சந்தோஷத்தோட ரிலீசுக்கு திட்டம் போடறோம் . விரைவில் இசை வெளியீட்டு விழா . ” என்றார் .
இயக்குனர் கிருஷ்ணகுமார் பேசும் போது ”
எனக்கு வாய்ப்புக் கொடுத்த டெல்லி கணேஷ் சாருக்கு நன்றி ” என்றார் .
நாயகி மரீனா பேசும்போது
நாயகன் மஹா தனது பேச்சில் ”
இந்தப் படத்தில் நிறைய புது முகங்கள். புது தொழில் நுட்பக் கலைஞர்கள்இருக்காங்க. அதிக புது முகங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்களால் சினிமாவுக்கு அறிமுகமானவர் என் தந்தை . அவர் தயாரிக்கும் படத்தில் நிறைய புதுமுகங்கள் இருப்பது பொருத்தமான ஒன்றுதானே ” என்றார் .
நியாயம்தான் .
படத்தின் டிரைலர் நன்றாக இருக்கிறது . பாடல்கள் இனிமை . ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது . வசனம் அருமை . கதாநாயகி அழகாக இருக்கிறார் . இன்னொரு நாயகி ஈர்ப்பாக இருக்கிறார் . நாயகன் மஹா இளமையாக அழகாக இருக்கிறார் . முக்கியமாக சிறப்பாக நடித்துள்ளார் .
டிரைலரும் பாடல்களும் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இப்போதே ஏற்படுத்துகின்றன. பார்க்கலாம் என்ற நம்பிக்கையை நமக்குள் ஊட்டுகிறது என்னுள் ஆயிரம் .