பைவ் ஸ்டார் ஹோட்டலில் வேலை பார்க்கும் இளைஞன் அசோக்.
கல்யாணம் முடிந்து அமெரிக்க போன கணவனால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தனிமையில் விரக தாபத்தில் வாடும் ஆர்த்தி என்ற பிராமணப் பெண்ணுக்கும் ( ஸ்ருதியுகல்) அசோக்குக்கும் ,
ஒரு மழை நாளில் எதிர்பாராத சந்திப்பும் அதன் தொடர்ச்சியாக பாலுறவும் நிகழ்கிறது .
மறுநாள் அவள் வீடு மாற்றிக் கொண்டு போய் விடுகிறாள் . அந்த விசயம் அசோக்கின் மனதில் உறுத்தலாக இருக்கிறது .
இதற்கும் முன்பே கல்லறை ஒன்றின் காவலாளியின் மரணம் போலீசை பல யூகங்களுக்கு இட்டுச் செல்கிறது.
இந்த நிலையில் சுகாசினி என்ற பெண்ணை (மரினா மைக்கேல்) விரட்டி விரட்டிக் காதலித்து அவளது காதலைப் பெறுகிறான் மகேஷ் .
சுகாசினியும் பிராமின் என்ற நிலையில் அவளது வீட்டின் மாடிக்கு வாடகைக்கு குடி வருகிறாள் ஆர்த்தி .
சுகாசினியின் வீட்டுக்கு வரும் அசோக் ஆர்த்தியை பார்க்கிறான் . ஆர்த்தியும் அசோக்கை பார்த்து விடுகிறாள் .
அவளால் எதுவும் சிக்கல் வருமோ என்று எதிர்பார்த்தால் , அப்படி எதுவும் நடக்காத நிலையில் , கல்லறை காவலாளி இறந்த விசயமும் அது தொடர்பாக நடக்கும் சில சம்பவங்களும்,
அப்போது அசோக் நடந்து கொள்ளும் முறையும் பிரச்னையைப் பெரிதாக்குகிறது .
இந்த நிலையில் சுகாசினி தனது பெற்றோருக்குத் தெரியாமல் மகேஷை திருட்டுக் கல்யாணம் செய்து கொள்ள கிளம்பிப் போகிறாள் . அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த என்னுள் ஆயிரம் .
படத்தின் டைட்டில் போடும் விதம் நன்றாக இருக்கிறது . மகா பிரஷ்ஷான யதார்த்த நாயகனாக இருக்கிறார் .
நல்ல கதை நல்ல திரைக்கதை நல்ல இயக்குனரை தேர்ந்தெடுத்து படம் பண்ணினால் நல்ல எதிர்காலம் இருக்கிறது .
ஆர்த்தி அசோக் சம்மந்தப்பட்ட அந்த மழை நாள் சந்திப்பு தொடர்பான காட்சிகளை (மட்டும்) ரசித்து லயித்து எடுத்து இருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணகுமார் .
ஆர்த்தியின் சலனம், பரிதவிப்பு , மனம் தயங்க , உடல் துணிய , மனதை உடல் வெல்லும் விதம் என்று… மிக அட்டகாசமான LITTLE DETAILS !
மரினா மைக்கேலுக்கு கதாபாத்திரச் செறிவு நிறைந்த வித்தியாசமான முகம் .
ஆனால் அவர் ரொம்ப அழகாகவும் படு கேவலமாகவும் மாறி மாறித் தெரியும்படி ஷாட் வைத்து இருப்பது கொடுமை .
ரொம்ப யோசித்து யோசித்து வசனம் பேசுகிறார் . (மெமரி பிராப்ளம்?)
கொஞ்ச நேரமே வந்தாலும், தங்கத்தை உருக்கப் பயன்படும் அடர் செந்தூர நெருப்பு மாதிரி, சும்மா தகதகவென ஜொலித்து விட்டுப் போகிறார் ஆர்த்தி .
கிறங்கடிக்கடிக்கவும் செய்கிறார் .
திரைக்கதையில் அந்தப் பகுதி படத்தின் துவக்கத்திலேயே காட்டப்படுவதால் ,
அவர் மேல் ஒரு பரிதாபமும் அன்பும் ஈர்ப்பும் வந்து விடுகிறது.
அதனால் சுகாசினியுடனான அசோக்கின் காதல் ஈர்க்கவில்லை .
தவறான வரிசைப்படுத்தல் !
போலீஸ் அதிகாரியாக வரும் வின்சென்ட் அசோகன் சிறப்பாக நடித்துள்ளார்
ஆனால் அசோக்கின் நண்பனாக நடித்து இருக்கும் அண்ணாமலை யதார்த்தமாக நடிக்கப் பழகவேண்டும்.
பைவ் ஸ்டார் ஹோட்டல் ரூம் சர்வீஸ் நபர்களுக்கு கிடைக்கும் வித்தியாசமான அனுபவங்கள் என்பது எவ்வளவு பெரிய ஏரியா ! ஆனால் கிரிக்கெட் மைதானத்தில் கோலி குண்டு ஆடி இருக்கிறார்கள் .
ஒரு படத்தில் முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் அந்தப் படம் எதை நோக்கி போகிறது என்பதை ஆடியன்சுக்கு தெளிவாக புரியவைக்க வேண்டும்.
அதன் பின்னர் எதாவது ஒரு கேரக்டர் அல்லது கிளைக்கதை உள்ளே வந்தால் அது பொருத்தமானதாக , தவிர்க்க முடியாததாக , சுவாரஸ்யமானதாக இருக்க வேண்டும் .
அந்த தெளிவு குறித்த உணர்வு திரைக்கதையில் இல்லை . தவிர . சாதாரண கிளைக்கதைகள் , கதாபாத்திரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
படத்தில் தேவை இல்லாமல் பாடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதுவும சுரத்தில்லாத பாடல்கள் .
கோபி சுந்தரின் இசையில் இசைக் கருவிகள் பயன்பாட்டில் தேவை இல்லாத- திரைக்கதைக்கு சம்மந்தம் இல்லாத – intellectual arrogant ஆன – மலையாள டாமிநேஷன் .
அதை நியாயப்படுத்துவதற்காக தமிழ்ப் பெண்ணை மணந்து கொள்ளும் மலையாளி என்று, தேவை இல்லாத அசட்டுத்தனமான சில காட்சிகள் ! உங்களுக்கெல்லாம் திரைக்கதைன்னா அவ்வளவு இளப்பமா போச்சுல்ல?
திடீரென அசோக் அவ்வளவு வன்முறையாளனாக மாறுவதற்கான கரணம் என்ன? காதலில் இருப்பவன் அப்படி செய்வானா?அப்படி செய்பவனின் காதல் உண்மையாக இருக்குமா?
அவன் நல்லவனா ? கெட்டவனா? நார்மலனவனா ? சைக்கோவா ? தைரியமானவனா? அப்பாவியா? எதாவது ஒரு பக்கம் நில்லுங்கப்பா ! கதாபாத்திரச் சீர்குலைவு !
சுகாசினியின் அம்மா என்று ஒருவர் ஒரு காட்சியில் சும்மனாச்சுக்கும்ம் உட்கார்ந்து சிரித்துக் கொண்டு இருக்கிறாரே .. அண்ணன் என்று ஒருத்தரை ரெண்டு சீனில் மட்டும் பிரேம் ஓரத்தில் காட்டுறீங்களே ..
இவங்க எல்லாம் முக்கியமான காட்சிகளில் எங்கே போனார்கள் . ?
கள்ள உறவில் ஆரம்பிக்கும் திரைக்கதை , மனசாட்சியே இல்லாமல் காதல் ஏரியாவுக்குள் நுழைகிறது . சரி கள்ள உறவு கொண்டவள் மீண்டும் வரும்போதாவது திரைக்கதை ஒரு ஒழுங்குக்குள் வரும் என்று பார்த்தால் ,
கள்ள உறவுச் சிக்கல் , காதல் பிரச்னை , இரண்டையும்,
மைக் செட் இல்லாத திருவிழாவில் தொலைந்து போன குழந்தைகளைப் போல அம்போ என விட்டு விட்டு, சுமார் நாற்பது நிமிடம் வேறு படத்தின் காட்சிகளை எடுத்து இதில் சேர்த்து விட்டது போல…
தூர தேசம் போய் விடுகிறது திரைக்கதை .
கடைசியில் இரண்டு மணி நேரம் பத்தொன்பது நிமிஷம் ஆச்சே என்பதற்காக ஒரு முடிவு .
இந்தக் கதையையே எப்படி சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்? பார்ப்போமா?
அசோக் சுகாசினி காதலை முதலில் சொல்லி .
பெரும்பாலும் இயல்பாக இருக்கும் அசோக் சில சமயங்களில் மட்டும் அதீத பயத்துக்கும் குழப்பத்துக்கும் ஆளாகிறான் என்று காட்டி
ஒரு நிலையில் அசோக் ஆர்த்தி உறவு , சுகாசினியை அவன் பார்ப்பதற்கு முன்பே நடந்த எதிர்பாராத விபத்து என்று சொல்லி,
அதன் பின்னர் அவனை ஆர்த்தி கல்யாணம் செய்து கொள்வதற்காகவோ அல்லது உறவை நீடிக்கவோ தேடுகிறாள் என்று சொல்லி, ஆர்த்திக்கும் சுகாசினிக்கும் நட்பு ஏற்படுவதாக காட்டி ,
கல்லறை சமாச்சாரத்துக்குப் பதிலாக , அசோக் வேலை செய்யும் பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடந்த ஒரு நிகழ்வு அவனுக்கு பிரச்னை ஏற்படுத்துவதாக கதைப் போக்கை கொண்டு போய்,
அதில் சுகாசினி அல்லது ஆர்த்தியை சம்மந்தப்படுத்தி
இவை எல்லாம் ஒரு புள்ளியில் குவியும்போது என்ன நடக்கிறது என்று சொல்லி இருந்தால் …
நிச்சயமாக படம் இதைவிட BETTER ஆக வந்திருக்கும் .
எனவே ,
BETTER LUCK NEXT TIME டெல்லி கணேஷ் சார் மற்றும் மகா தம்பி !