இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் போல இருந்தாலும் இரண்டுக்கும் இடையில் ஒரு தொடர்பு இருக்கு. அது என்ன என்று பார்ப்பதற்கு முன்பு…
மாருதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாரா வேலு தயாரிக்க புதுமுகங்கள் வெங்கட், சோனியா , உமா ஆகியோர் நடிக்க ஏ.ஆர்.ஜே.வேலு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “எப்ப சொல்லப் போற”
ஒகனேக்கல்லில் வந்து தற்கொலை செய்து கொள்ளும் காதல் ஜோடிகளைப் பார்த்து, காதல் என்றாலே கேவலமான விஷயம் என்று கிண்டலடிக்கும் ஒருவன், தானும் காதலில் விழுந்த போது அவனுக்கு என்ன ஆச்சு என்பதே இந்தப் படம்.
படத்தை எழுதி இயக்கி இருக்கும் ஏ.ஆர்.ஜே.வேலுவும் இயக்குனர் ஏ. ஆர். முருகதாசும் ஒரே அறையில் தங்கி இருந்த நண்பர்கள். இருவரும் ஒன்றாக தினகர் என்ற திரைக்கதை வசனகர்த்தாவிடம் பணியாற்றியவர்கள் . இந்த தினகர் பழம்பெரும் தயாரிப்பாளர் மற்றும் கதை வசனகர்த்தாவான கலைஞானத்திடம் உதவியாளராக பணியாற்றியவர் . அந்த வகையில் கலைஞானத்திடமும் பணியாற்றி இருக்கிறார் இந்த ஏ.ஆர்.ஜே.வேலு.
பின்னர் இயக்குனராக முயன்று முடியாமல் போய் , ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து மனைவி தாராவின் பெயரில் பட நிறுவனத்தை ஆரம்பித்து இந்த எப்போ சொல்லப் போற படத்தை ஏ.ஆர்.ஜே.வேலு எடுத்து முடித்து இருக்கிறார்
இந்த நட்புறவு காரணமாக படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலைஞானம், .தினகர் , ஆகியோர் கலந்து கொண்டனர் . ஆல்வின் என்பவரின் ன் இசை மற்றும் வரிகளில் உருவான ஆறு பாடல்களில் இருந்து சில பாடல்கள் திரையிடப்பட்டன . பாடல்களில் கிராமியத் தன்மையும் இனிமையும் இருந்தது .
“நான் சினிமாவுல கிட்டத்தட்ட இயக்குநர் ஆகிடணும்னு 15 வருஷம் வெறியோடு இருந்தேன், ஆனால் அது நிறைவேறாமலே நான் சினிமாவை விட்டு விலக வேண்டியதா போச்சு, அதன்பின் இனி சினிமாவுக்குள் வந்தால் தயாரிப்பாளராகத்தான் வரவேண்டுமென்று சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்தேன். காலை 5 மணிக்கு வீட்டைவிட்டு சென்றால் நள்ளிரவு 12 மணிக்குத்தான் வீட்டு வருவேன்.
5 வருடங்கள் கடுமையாக உழைத்து போதுமான அளவு பணத்தை சேர்த்து தற்போது இந்த படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறேன், இவையனைத்திற்கும் எனக்கு உறுதுணையாக இருந்தது என் மனைவி தாராதான்.
இந்தப் படத்துக்கு முழுக்க முழுக்க ஒகேனக்கல் பகுதியில் மிக ஆபத்தான இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம். படத்தின் நடிக்க நடிகையர் உயிரைப் பணயம் வைத்து நடித்துக் கொடுத்தனர் ” என்றார் இயக்குனர் ஏ.ஆர்.ஜே.வேலு.
கலைஞானம் பேசும்போது ” சினிமாவுல நன்றி என்ற ஒன்று வார்த்தையில் மட்டுமே இருந்து வருகிறது. என்னால் அறிமுகமான பலர் இன்று சிகரம் போன்று வளர்ந்துவிட்டார்கள். ஆனால் அறிமுகப்படுத்திய நான் இருக்கும் நிலையை கண்டுகொள்ள ஆளில்லாமல் இருக்கிறேன்.
நடிகை வாணி ஸ்ரீ , சுருளிராஜன் , ஜெயசித்ரா , எடிட்டர் வெள்ளைச்சாமி … இப்படி இன்னும் பலபேரை நான்தான் சினிமாவில் அறிமுகப்படுத்தினேன் .
ஒருவரிடம் இருக்கும் திறமையும் அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும் எனக்குப் பிடித்து விட்டால் அவர்களை சரியான சமயத்தில் தேடிப் போய் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாய்ப்புக் கொடுப்பேன். அது என் குணம் .
அப்படித்தான் நான் தயாரித்த வெகுளிப்பெண் படத்திற்கு டான்ஸ் உதவியாளராக வந்திருந்த ஒரு பையனைப் பார்த்து வியந்தேன் . அப்படியே தங்கச் சிலை போல இருந்தான் அந்தப் பையன் . யார் இவன் என்று கேட்டபோது ‘களத்தூர் கண்ணம்மா, பார்த்தால் பசி தீரும் , ஆனந்த ஜோதி படங்களில் நடித்த கமல்ஹாசன்’ என்றார்கள் .
ஜெமினி , கே ஆர் விஜயா நடித்த குறத்தி மகன் படத்தில் இரண்டு இளம் ஹீரோக்கள் கேரக்டர் இருக்கும் நிலையில் ஒரு கேரக்டருக்கு அவர் சரியாக இருப்பான் என்று யோசித்து , இயக்குனர் கே எஸ் கோபால கிருஷ்ணனிடம் சொன்னேன் . ‘அழைச்சுட்டு வா பார்க்கலாம்’ என்றார் அவர் .
நான் கமல் வீட்டுக்கு போய் அவரிடம் விஷயம் சொன்னேன். அவர் “அண்ணே.. எனக்கு சினிமாவில் நடிக்கிற எண்ணமே இனி இல்ல . நான் களத்தூர் கண்ணம்மாவில் நடித்து 10 வருடங்கள் ஆகிறது. அதன் பிறகு இன்று வரை என்னை யாருமே சீண்டல. இப்போ ஹீரோன்னு சொன்னா மக்கள் என்னை ஏத்துக்க மாட்டாங்க.நான் இனி நடிக்கவே வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டேன். இனி நடனம் மட்டும்தான் ” என்றார் .
அப்போது அவர் வட இந்தியாவுக்கு சென்று நடன நிகழ்ச்சி ஒன்று நடத்திய வகையில் பதினெட்டாயிரம் ரூபாய் நஷ்டப்பட்டு இருந்தார் . அப்போது கூட நடிப்பை விட நடனமே நல்லது என்ற முடிவில்தான் அவர் இருந்தார் . நான்தான் அவரை வலுக்கட்டாயமாக என் காரில் அழைத்துக் கொண்டு போய் கே எஸ் கோபால கிருஷ்ணனிடம் அறிமுகப்படுத்தி குறத்தி மகன் படத்தில் நடிக்க வைத்தேன். அப்புறம் கமல் நடிகராகவே நிலை பெற்றார் .
ரஜினி வில்லனாக நடித்துக் கொண்டிருந்த காலம் . எனது ஆறு புஷ்பங்கள் படத்தில் வில்லனாக நடித்தார் . அவரை ஹீரோவாக போடலாமே என்று எனக்குப் பட்டது . என் மீது அன்பு கொண்ட சாண்டோ சின்னப்ப தேவர் “நீ தயாரிப்பாளரா வா . நான் பைனான்ஸ் பண்றேன்’ என்று சொன்னார் . நான் பைரவி படத்தின் கதையை தயார் செய்து ரஜினியிடம் சொன்னேன்.
கதையைக் கேட்ட அவர் படத்தில் வரும் வில்லன் வேடத்தைக் குறிப்பிட்டு ‘ நல்ல கேரக்டர் . பண்ணிடலாம் ‘ என்றார் . நான் உடனே ” அந்த ஹீரோ கேரக்டர்தான் உங்களுக்கு’ என்று சொன்னேன் . ரஜினி அப்படியே பிரமித்துப் போனார் . என் கையைப் பிடித்து வலிக்க வலிக்க குலுக்கினார் ரஜினி .
தேவரிடம் விஷயத்தை சொன்னேன் . “ரஜினி ஹீரோவா ? அதெல்லாம் சரி வராது . அவரை வில்லனாப் போட்டுட்டு ஜெய் சங்கரை ஹீரோவா போடு ‘ என்று சொன்னார் . ”நான் ரஜினிக்கு வாக்குக் கொடுத்துட்டேன்” என்றேன் . “நான்தானே பணம் தரணும்” என்றார் தேவர் .
நான் வேறு தயாரிப்பாளரை வைத்து ரஜினியை முதன் முதலில் ஹீரோவாகப் போட்டு படத்தை எடுத்து முடித்தேன் . படம் சூப்பர் ஹிட் .
தேவர் என்னை அழைத்து ” ரஜினி பிரம்மாதமா நடிக்கிறான்யா. அவன்கிட்ட சொல்லி எனக்கும் இரண்டு படம் நடிச்சு கொடுக்க சொல்லு “என்று கூறினார்.
இந்த விஷயத்தை நான் ரஜினியிடம் சொன்னதும், அவர் நடந்து வரவில்லை . கிட்டத்தட்ட பறந்து வந்து உடனே தேவரின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து விட்டார். அவரை தூக்கி விட்டு வாழ்த்திய தேவர் ஒரே நேரத்தில் ரஜினியை ரெண்டு படங்களுக்கு புக் செய்து ரஜினிக்கு பெரும் சம்பளம் கொடுத்தார் . அதன் பின்னர் ரஜினிக்கு ஏறுமுகம்தான்
எனவே பெரிய நடிகர்கள் எல்லாரும் ஒரு காலத்தில் புதுமுகங்களாக இருந்தவர்கள்தான் . இந்தப் படத்தில் புதுமுகங்களாக இருக்கும் நீங்களும் ஒரு காலத்தில் பெரிய ஹீரோ ஆவீர்கள் . அப்போது உங்களுக்கு வாழ்வு கொடுத்த தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் நீங்களாவது நன்றியோடு நடந்து கொள்ளுங்கள் ” என்றார் கலைஞானம் .
ஹும்ம்மம்மம்ம்ம்ம் !