அமைச்சரிடம் கோரிக்கை வைத்த ‘எழுமின்’ V.P.விஜி

“வையம் மீடியாஸ்” சார்பில் தயாரிப்பாளர் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கும்  திரைப்படம் “எழுமின்”.
 
தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.
 
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பலநூறு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்பு கலைஞர்கள் மத்தியில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
 
விழாவில் “செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்” திரு. கடம்பூர் ராஜு, “விளையாட்டு துறை அமைச்சர்” திரு. பாலகிருஷ்ண ரெட்டி,
 
நடிகர்கள் விவேக், ஆரி, “ஹிப்-ஹாப்” ஆதி, இசையமைப்பாளர்கள் டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர்கள் மயில்சாமி, பிரேம்குமார், உதயா,
மற்றும் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.
 
இந்த விழாவில் பேசிய “செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்” திரு. கடம்பூர் ராஜு,
“இவ்வளவு மாணவர்கள் மத்தியில் இந்த விழா மிகுந்த எழுச்சியோடு நடைபெறுகிறது.
 
நடிகர் விவேக் எங்கள் ஊரைச் சேர்ந்தவர். அவர் பல நல்ல கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் செல்வதினால்தான் வாழும் கலைவாணராக இருக்கிறார்.
 
வருகின்ற காலங்களில் இளைஞர்கள் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமான கருத்தைக் கூறும் இந்தப் படம் வரவேற்பை பெறவேண்டும்.
 
முன்பெல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் படங்கள் எல்லாம் எங்களுக்கு பாடங்கள்.
 
அப்படி இந்த “எழுமின்” திரைப்படமும் இன்றைய தலைமுறைக்கான பாடமாக அமைய வேண்டும். தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டு எப்படியோ அப்படித் தான் சிலம்பாட்டமும்.
அதுவும் வீரத்தின் அடையாளமாக இருக்கிற ஒரு விளையாட்டுதான். தமிழ் சினிமா நூறாண்டு காணும் இந்தக் காலத்தில்,
 
“எழுமின்” திரைப்படம் ஒரு முக்கியமான கருத்தை எடுத்து வருகிறது. இப்படம் கூறுவதைப் போல, தற்காப்புக் கலைகளை மாணவர்கள் அவசியமாக கற்க வேண்டும்.
 
கோவாவிற்கு திரைப்பட விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன். அங்கு தமிழ் சினிமாக்களுக்கு நல்ல மரியாதை இருக்கிறது.
 
காரணம் இதைப் போல அழுத்தமான கதைகளுடன் இன்னமும் இங்கு படங்கள் வந்து கொண்டிருப்பதால்தான்.
 
எனவே, நம் தமிழ் இளைஞர்கள் “எழுமின்” திரைப்படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார் 
 
தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி பேசும்போது, “இரண்டு அமைச்சர் பெருமக்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.
 
ஒருவர் விளையாட்டுத் துறை, இன்னொருவர் செய்தித்துறை, இவர்கள் முன்னிலையில் ஒரு பணிவான கோரிக்கையை வைக்கிறேன்.
 
தயவுசெய்து இந்த “எழுமின்” திரைப்படத்தை ஒவ்வொரு பள்ளி மாணவ, மாணவியரும் பெற்றோருடன் பார்ப்பதற்கு அரசு உதவி செய்ய வேண்டும்.
 
அதற்கு இந்த திரைப்படத்திற்கு ஏதேனும் சிறப்பு அந்தஸ்து வழங்கி, வரிவிலக்கு அளித்திட ஆவண செய்ய வேண்டும்.
 
இதனைக் கேட்பதற்கான காரணம், இந்த திரைப்படம் நிச்சயமாக சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
 
குறைந்தபட்ச விழிப்புணர்வையாவது மாணவர்களுக்கு வழங்கும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமெனில், இந்தத் திரைப்படத்தில் நடிக்க வந்த பிறகு “கிக் பாக்சிங்” கற்றுக்கொண்ட சிறுவன் இப்போது ஸ்டேட் லெவலில் தங்கப் பதக்கத்தை வெல்லும் அளவிற்கு, 
 
முன்னேறி இருக்கிறார். தற்காப்பு கலைகளின் முக்கியத்துவத்தை நிச்சயமாக “எழுமின்” திரைப்படம் மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கும்” என நெகிழ்ச்சியுடன் பேசினார். 
 
இசையமைப்பாளர் டி.இமான் பேசும்போது,“மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. காரணம், விவேக் நடித்த நிறைய படங்களுக்கு ஆரம்ப காலகட்டங்களில் இசையமைத்திருக்கிறேன்.
 
அப்போது ஒன்றை புரிந்துகொண்டேன், விவேக் சார் ஒரு நல்ல மோட்டிவேட்டர். தொடக்கத்தில் நிறைய குழப்பங்களோடு இருந்த என்னை, வழி நடத்தியவர்களில் விவேக் சார் முக்கியமானவர்.
சுந்தர். சி இயக்கத்தில் “தகதிமிதா” என்ற படத்திற்கு நான் இசையமைத்திருந்தேன். அந்த படத்தின் பாடல்களை பிடித்திருந்ததால் என்னிடம் தொலைபேசியில் விவேக் சார் பேசினார்.
 
“காதலை யாரடி முதலில் சொல்வது” என்ற பாடலை மிகவும் பாராட்டிப் பேசினார். அப்போது அவர் ஒன்றைச் சொன்னார், “இறைவன் உங்களைப் பார்த்து சிரிக்கணும்” என்று.
 
காலம் போக போகத்தான் தெரிந்தது அன்று அவர் சொன்னதற்கான அர்த்தம். “Arise Awake Achieve” என்று ஒவ்வொருவருக்கும் யாராவது ஒருவர் சொல்ல வேண்டும்.
 
இளைஞர்களை மோட்டிவேட் செய்யக் கூடிய இந்த “எழுமின்” மாதிரியான சினிமாக்கள் நிறைய வரவேண்டும்.
 
இருட்டு அறைக்குள்ளே நல்லதையும் விதைக்க முடியும் என்பதனை நிரூபிக்க வேண்டும். அந்த வகையில் நிச்சயம் “எழுமின்” மாணவர்களை மொட்டிவேட் செய்யும்” என்றார் 
இசையமைப்பாளர் “ஹிப்-ஹாப்” ஆதி பேசும்போது,“எழுமின் முக்கியமான திரைப்படம். இது முழுக்க முழுக்க மாணவர்களுக்கானது.
 
இன்றைய மாணவர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படமாக இது இருக்கும் என நம்புகிறேன்.
 
காரணம், 2020-ஆம் அண்டில் மாணவர்கள் நிறைந்த தேசமாக இந்தியா இருக்கும். நம் மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்தால் 2027-இல் நிச்சயம் இந்தியா வல்லரசாகும்.
 
இப்படத்தின் பாடல்களைப் பார்க்கும் போதே, மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்பது தெரிகிறது” என்றார் 
 
நடிகர் விவேக் பேசும்போது,  “தமிழ்நாட்டில் சமீபமாக பல சூப்பர் ஸ்டார்கள் உருவாகி இருக்கிறார்கள்.
“ஜல்லிக்கட்டு” போராட்டத்தை முன் நின்று நடத்தி வென்று காட்டிய மாணவர்கள்தான் அந்த உண்மையான சூப்பர் ஸ்டார்கள்.
 
நான் 4பேருக்கு நன்றி சொல்லியாக வேண்டும். முதலாவது, தன்னம்பிக்கையால் உயர்ந்த நடிகர் தனுஷுக்கு.
 
நான் கேட்டவுடன் மறுக்காமல் வந்து ஒரு பாடலைப் பாடி கொடுத்திருக்கிறார். இரண்டாவது இசையமைப்பாளர் அனிருத்திற்கு.
 
மூன்றாவது நன்றி, இசையமைப்பாளர்கள் ஆதி மற்றும் இமான் இருவருக்கும்” என்றார் 
 
விழாவில் நடிகர் தனுஷ் பாடிய “எழடா” பாடலும், இசையமைப்பாளர் அனிருத் பாடிய “எழு எழு” பாடலும்  பிரம்மாண்டமான திரையில் மாணவர்களுக்காக பிரத்யேகமாக ஒளிபரப்பப்பட்டது.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *