வையம் மீடியாஸ் சார்பில் வி பி விஜி தயாரித்து இயக்க, மாஸ்டர்கள் பிரவீன், ஸ்ரீஜித், வினீத், சுகேஷ், சிறுமிகள் கிருத்திகா, தீபிகா….
இவர்களுடன் விவேக், தேவயானி, பிரேம், அழகம்பெருமாள், ரிஷி, பசங்க சிவகுமார், செல் முருகன் ஆகியோர் நடித்திருக்கும் படம் எழுமின் .
விவேகானந்தர் ஆங்கிலத்தில் சொன்ன” Arise! Awake!! Stop not till the goal is reached ” என்ற வாசகத்தின் செந்தமிழாக்கமான ,
”எழுமின் ! விழிமின்! குறிக்கோளில் வெல்லும் வரை ஓயாதீர் ” என்ற வாசகத்தின் முதல் வார்த்தையைக் கொண்டு உருவாகி இருக்கும் படம் .
படம் விழிமினா ? இல்லை வீழ்மினா ? பார்க்கலாம் .
சுந்தரம் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற அமைப்பை நடத்தி வரும் சுந்தரம் ( அழகம் பெருமாள்) தமிழ்நாட்டில் இருந்து தகுதியான மாணவர்களை,
பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்கு தேர்வு செய்யாமல் தடுத்து, தகுதி அல்லாத நபர்களை தேர்வு செய்து ,
அதன் மூலம் மற்ற மாநில மாணவர்கள் ஜெயிக்க வழி வகை செய்து, அதற்கு கையூட்டாக பணமும் பெற்றுக் கொள்கிறார் .
சுந்தரத்தின் இருபத்தைந்து ஆண்டு கால நண்பர் விசுவநாதன் ( விவேக்) . அவரது மனைவி பாரதி (தேவயானி) ஒரே மகன் அர்ஜுன் (சுகேஷ்).
நண்பன் மகன் என்பதால் விஸ்வநாதனின் மகனை மட்டும் தடுக்காமல் திறமையை வெளிக்காட்ட வாய்ப்புத் தருகிறார் சுந்தரம் .
அதற்கேற்ப அர்ஜுனும் எல்லா போட்டிகளிலும் வெல்லும் வேளையில் ஓர் அசம்பாவிதம் நிகழ்கிறது
விளைவு ? தான் ஒரு ஸ்போர்ட்ஸ் அகாடமி துவங்கும் விசுவநாதன் நேர்மையாக செயல்படுகிறார் .
சுந்தரத்தால் புறக்கணிக்கப்படும் பாக்சிங், சிலம்பம் உள்ளிட்ட வீரக் கலைகளில் சிறந்து விளங்கும் – தரமான தமிழ் நாட்டு பிள்ளைகளான,
அஜய் (பிரவீன்) கவின் ( ஸ்ரீஜித்) , வினீத் (வினித்), ஆதிரா (கிருத்திகா), சாரா (தீபிகா) ஆகியோருக்கு பயிற்சி தருகிறார் .
அவர்கள் சுந்தரத்தின் சோப்ளாங்கி மாணவர்களை வென்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகிறார்கள் .
சம்மந்தப்பட்ட ஏழை மாணவர்களின் பெற்றோர்களின் விருப்பமின்மையையும் மீறி , தான் பொறுப்பு ஏற்று அவர்களை இறுதிப் போட்டிக்கு அனுப்பி வைக்கிறார் விசுவநாதன் .
வழியில் மாணவர்கள் கடத்தப்படுகிறார்கள். சும்மா போட்டியில் கலந்து கொள்ளாமல் தடுக்கும் கடத்தலோ என்று பார்த்தால் அதையும் மீறி ஓர் ஆபத்து நிகழ்கிறது .
மாணவர்களுக்கு என்ன ஆனது ? பொறுப்பேற்ற விஸ்வநாதனின் நிலை என்ன ? மாணவர்கள் இறுதிப் போட்டியில் வென்றார்களா ? என்பதே இந்த எழுமின் .
எழுமின் என்ற அற்புதமான தமிழ்ப் பெயரை வைத்ததற்கே இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் வி பி விஜிக்கு ஒரு வாழ்த்துப் பூங்கொத்து !
தற்காப்புக் கலைகளின் வரலாற்றை சுருக்கமாக சொல்லி துவங்கும் படத்தில் ,நமது தற்காப்புக் கலை வரலாற்றின் பெருமை,
இன்று உலகின் புகழ் பெற்ற பல தற்காப்புக் கலைகளின் அடிப்படை நம் மண்தான் என்ற உண்மை,
குழநதைகள் கடத்தல் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பெருகி வரும் சூழலில் தற்காப்புக் கலைகளை,
சிறுவர்கள் குறிப்பாக சிறுமிகள் கற்க வேண்டியதன் அவசியம்…. இவற்றை சொல்லும் விதமே படத்துக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது .
விளையாட்டில் இருக்கும் அரசியல், தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வில் புறக்கணிக்கப் படுவது இவற்றை அழுத்தமாக சொல்கிறார் இயக்குனர் விஜி .
திறமை உள்ள பல குழந்தைகளை ஏழ்மை கவிழ்க்கும் விதத்தையும் அவர்களுக்கு கை கொடுக்க ஆள் இல்லாத கொடுமையையும் சொல்லும் இயக்குனர்,
படத்தில் வரும் விசுவநாதன் போல ஒருவர் கிடைக்க மாட்டாரா என்று யோசிக்க வைக்கிறார் .
விவேக்கோடு செல் முருகன் சேரும் காட்சிகளில் நகைச்சுவை சுவை .
விசுவநாதன் – பாரதி பாத்திரப் படைப்புகள் அருமை . அப்துல் கலாமை குறிப்பிடுவது உட்பட படத்தில் சிறுவர் சிறுமியருக்கான பல நல்ல கருத்துகள் இருக்கின்றன .
மாணவர்களின் தற்காப்புக் கலைத் திறமை படத்தில் பிரம்மிக்க வைக்கிறது
ஆதிராவாக நடித்து இருக்கும் கிருத்திகா சிலம்பத்தில் சிலிர்க்க வைக்கிறார் . அதுவும் சிலம்பக் குச்சிக்கு பதில் இரும்புக் குழாய் எடுத்து அவர் சுற்றும் காட்சி அபாரம் . .
பாக்சிங் சிறுவன் வினீத்தின் தந்தையாக அவனது அப்பாவான இயக்குனர் வி பி விஜியே நடித்து உள்ளார் . அந்த குட்டிப் பையன் பாக்சிங் போடும் விதமும் அழகு .
உயரமான கூரையில் நடப்பது உட்பட பிரவீன், ஸ்ரீஜித், வினீத், சுகேஷ், சிறுமிகள் கிருத்திகா, தீபிகா அனைவருமே ரிஸ்க் எடுத்து,
அற்புதமாக தற்காப்புக் கலைகள் செய்வது மட்டுமின்றி பிரம்மாதமாக நடித்தும் உள்ளனர் . நடிப்பில்,
அவர்களிடம் அட்டகாசமாக வேலை வாங்கிய விசயத்தில் இயக்குனர் விபி விஜிக்கும் ஒரு சபாஷ் .
நகைச்சுவையில் மட்டுமின்றி சோகக் காட்சிகளிலும் விவேக் கவர்கிறார் . அவருக்கு இணையாக சோகக் காட்சிகளில் ஈடு கொடுக்கிறார் தேவயானி.
மோசமான ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனராக அழகம்பெருமாள், அழகு .
வில்லனாக ரிஷி, பர பர சுறு சுறு இன்ஸ்பெக்டராக பிரேம் , கோபக்கார ஏழை அப்பாவாக பசங்க சிவகுமார் , அப்பாவி அம்மாவாக லதா ராவ்,
மிக எளிய மனிதராக வி பி விஜி அனைவரும் தங்கள் பங்களிப்பை கச்சிதமாக செய்துள்ளனர் .
கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு எளிமையில் இனிமை சேர்க்கிறது . கணேஷ் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் அருமை . சோகப் பாடல்கள் உருக்குகின்றன.
ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் சிறப்பு .
சிறுவர் சிறுமிகளை வைத்து அட்டகாசமாக ஸ்டன்ட் காட்சிகளை அமைத்துள்ளார் மிராக்கில் மைக்கேல் ராஜ் .
படமாக்கலில் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் . இருந்திருந்தால் இன்னும் படத்துக்கு பலம் கூடி இருக்கும். அதே போல இரண்டாம் பகுதியில் இன்னும் சுவாரசியம் கூட்டி இருக்கலாம்
ஆனாலும் என்ன ..
தற்காப்புக் கலையின் அவசியம் சொல்லும் படத்தின் ஆரம்பம் முதல் “உங்கள் வீட்டில் ஆண் குழந்தை இருந்தால் பெண்மையை மதிக்கக் கற்றுக் கொடுங்கள் .
பெண் குழந்தை இருந்தால் தற்காப்புக் கலை கற்றுக் கொடுங்கள் ” என்ற கடைசி வசனம் வரை,
படம் சிறப்பாக எடுத்துக் கொண்ட நோக்கத்தில் சற்றும் பிசகாது தடுமாறாது சிறப்பாகப் பயணிக்கிறது . அதுதான் படத்தின் பெரும்பலம்.
குழந்தைகள் அவசியப் பார்க்க வேண்டிய படம் . பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவசியம் காட்ட வேண்டிய படம் .
மொத்தத்தில் எழுமின் … வெல்மின்!