சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்பிரைசஸ் தயாரிப்பில் நவீன் சந்திரா மற்றும் சலோனி லுத்ரா இருவரும் இணையராக நடிக்க, இயக்குனர் மற்றும் நடிகர் அனுமோகனின் மகனான அருண் மோகன் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் சரபம் . சரபம் என்பது தமிழில் யாளி எனப்படும் சிங்கப் பறவைக்கான சமஸ்கிருதப் பெயர்.
பெயருக்கு ஏற்றார்போல கம்பீரமாக பறக்கிறதா படம் என்று பார்க்கலாம்.
பெரும்பணக்கார பிசினஸ் மேன் சந்திரசேகரின் (நரேன்) மகளான திவ்யா (சலோனி லுத்ரா) பிரவுன்சுகர் போதைப் பழக்கத்துக்கு ஆளானவர் . அவருக்கும் அப்பாவுக்கும் ஆகாது .
வாழ்வில் எப்படியாவது முன்னேறி பணக்காரன் ஆக வேண்டும் என்று துடிக்கும் இளைஞனான விக்ரம் (நவீன் சந்திரா) .
தனது கம்பெனி சார்பாக அவன் செய்து இருக்கும் புராஜக்டை சந்திரே சேகரிடம் ஒகே செய்ய வேண்டிய துடிப்போடு…அவரது அலுவலகத்தில் அவரது அழைப்புக்காக காத்திருக்க ,
அந்த நேரம் அரைகுறை உடையில் உள்ளே நுழைந்த திவ்யா தனது தந்தையிடம் போதை மருந்து வாங்க காசு கேட்டு , கலாட்டா செய்கிறாள் .
அதனால் மூட் அவுட்டான சந்திரசேகர் விக்ரமின் புராஜக்டை எரிச்சலோடு புறக்கணித்து விட , எட்டு மாத உழைப்பை சில நிமிடங்களில் சந்திரசேகர் புறக்கணித்ததை அவனால் மன்னிக்க முடியவில்லை . அவனுக்கு சந்திரசேகர் மேல் கோபம் வருகிறது. அவர் வீட்டின் மீது ஒரு கல்லையாவது எறிந்து விட்டு வரவேண்டும் என்ற நினைப்பில் முழு போதையில் அவரது வீட்டை நெருங்க , சந்திரசேகரின் மகள் இரவில் திருட்டுத்தனமாக வெளியேறுவதை பார்க்கிறான்.
அவளை பின் தொடர்ந்து போய் பேச, அவளுக்கும் தன் தந்தை மீது போதைப் பழக்கத்துக்கு காசு தராததாள் கோபம் இருப்பது தெரிகிறது . இருவரும் சேர்ந்து பிளான் செய்து , திவ்யாவை விக்ரம் கடத்து விட்டதாக சொல்லி சந்திரசேகரிடம் முப்பது கோடி ரூபாய் பணம் கேட்கின்றனர். ஆளுக்குப் பதினைந்து கோடி பிரித்துக் கொள்ள திட்டம்!
அப்படியே பணமும் வந்து சேர , திவ்யாவை பத்திரமாக அவளது வீட்டருகே விட்டு விட்டு விக்ரம் வந்துவிட , மறுநாள் திவ்யா கொலை செய்யப்பட்ட செய்தி எல்லா தொலைக் காட்சிகளிலும் ஓடுகிறது . அதன் பிறகு விக்ரமுக்கு என்ன நடந்தது என்பதே சரபம்.
இரட்டை வேடம் , சகோதரச் சண்டை, கொலையானது அவர் இல்லை இவர் , ஆனால் கடைசியில் இவர் இல்லை அவரேதான் . அது நல்லதுதான்.. இல்லை இல்லை இதுதான் நல்லது என்று… அடுத்தடுத்து பலப்பல( Zig Zag ) திருப்பங்களோடு பரபர தடதடவென பயணித்து நிறைகிறது படம் .
படத்தில் முதலில் கவனம் கவர்வது கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு. வண்ண ஒளி வெள்ளங்கள், மூட் லைட்டிங், கிறிஸ்டல் கிளியர் படப்பதிவு என்று ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் !
நடந்த விசயங்களை பல முறை பல கோணங்களில் காட்டினாலும் அலுக்க விடாமல் பார்த்துக் கொள்ளும் லியோ ஜான் பாலின் படத்தொகுப்பு அட்டகாசம் . சபாஷ் ! கலை இயக்கமும் அப்படியே
விக்ரம் கேரக்டருக்கு நவீன் சந்திரா பிரஷ் ஆக இருக்கிறார் . அதனால் பிளஸ் ஆக இருக்கிறார் நல்ல தேர்வு.
ஆனாலும் வரை விட ஒரு படி மேலே சிறப்பாக நடித்துள்ளார் சலோனி லுத்ரா . ஓங்குதாங்கான உயரம் , வெளீர் நிறம், அந்த ஏலியன் முகம் என்று…. அச்சு அசலாக படத்துக்கு பொருந்துகிறார் . ஆரம்பக் காட்சியிலும் கடைசிக் காட்சியிலும் சலோனி லுத்ரா கல்கி இருக்கிறார். நரேன் குரல் நடிப்பில் கவனம் கவர்கிறார். அடியாளாக வரும் நபரின் தொழில் நேர நேர்மை புன்னகைக்க வைக்கிறது
வசனம் சில இடங்களில் ரசனையாகவும் சில இடங்களில் இன்டல்லக்சுவல் காமெடியாகவும் இருப்பதை பாராட்டலாம் . அதே நேரம் வசனம் அதிகமும் கூட.
படமாக்களில் கவனக் குறைவு காரணமாக சில தவறுகள் இருப்பதை ஜஸ்ட் .. இயக்குனருக்கு முதல் படம் என்பதால் விளக்காமல் விட்டு விடுவோம்.
படம் முழுக்க சுவாரஸ்யம் சுற்றி வந்து சுறுசுறுப்பு ஏற்றினாலும் லாஜிக் பல இடங்களில் லகலகவென்று கலகலத்துப் போகிறது.
என்னதான் டுவின்ஸ் என்றாலும் அருகில் இருப்பது எந்த பிள்ளை என்று பெற்றவர்களுக்கு கூடவா தெரியாமல் போய் விடும் ?
அதே போல ஒரு படத்தின் முடிவு என்பது அநியாயம் வென்றது என்று சொல்லும்படியாக இருக்கக் கூடாது . எதிராளி இன்னும் அயோக்கியன் என்பதற்காக முக்கியக் கதாபாத்திரங்களும் ஏமாற்றி ஜெயித்து ஜாலியாக வாழ்வதாக ஒரு படத்தை முடிப்பதை ஜீரணிக்க முடியவில்லை .
சரபம்…. சலனம் !
மகுடம் சூடும் கலைஞர்கள்
———————————————-
கிருஷ்ணன் வசந்த், லியோ ஜான் பால் , சலோனி லுத்ரா