ஆரபி புரடக்ஷன்ஸ் மற்றும் வியன் வென்ச்சர்ஸ் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும் வினோத் ராஜேந்திரன் தயாரிப்பில் , அதே வினோத் ராஜேந்திரன் , சார்லி, சென்ட்ராயன்,நடிப்பில் வினோத் ராஜேந்திரனே எழுதி இயக்கி இருக்கும் படம் .
குற்றவியல், சட்டம் இவற்றில் ஆர்வம் கொண்ட மாணவர் ஒருவர் ( வினோத் ராஜேந்திரன்) ஒரு துப்பறியும் நிறுவனம் ஆரம்பிக்கிறார். அவருக்குத் துணையாக சில நண்பர்கள்.
குற்றம் செய்யாமல் சிறையில் வாடும் நபரின் வழக்கைத் துப்பறிந்து அவரை விடுவிக்க எண்ணி அதற்கேற்ற வழக்கை அவர்கள் தேடுகிறார்கள் .
வருபவர்கள் எல்லோரும் பொய்யர்களாகவே இருக்க, ஒரு நிலையில் நிஜமாகவே பாதிக்கப்பட்ட ஒரு நபரின் வழக்கு கிடைக்கிறது.
அடகுக் கடை சேட்டை நம்பி, தான் வாழும் பகுதியில் தங்களைப் போன்ற எளிய மக்களிடம் சீட்டுப் பிடிக்கும் ஒரு குடும்பத்தை அந்த சேட் ஏமாற்றி விடுகிறான் .
சீட்டுப் பணம் கட்டியவர்கள் அந்த குடும்பத் தலைவரின் ( சார்லி ) குடும்பத்தை நெறிக்க, அவருக்கு தெரிந்த ஒருவன் (சென்ட்ராயன்) தன் பணத்தைக் கொடுத்து பாதிப் பிரச்னையைத் தீர்க்கிறான் .
மீதிப் பணத்துக்காக அவன் சொன்னதற்காக யாரோ ஒருவனைக் கொன்றதாக ஒத்துக் கொண்டு ஜெயிலுக்குப் போகிறார் குடும்பத் தலைவர்.
பணமும் தரப்படாத நிலையில் குடும்பத் தலைவரின் மனைவி தற்கொலை செய்து கொண்டு இறந்து போக, தனியாய்த் தவிக்கும் அவரது மகளுக்காக, அந்தத் தகப்பனைக் காப்பாற்ற அந்த வழக்கை எடுக்கிறது துப்பறியும் குழு .
நடந்தது என்ன என்பதே படம்.
வித்தியாசமான கதை. அர்த்தமுள்ள கதை. சமூக அக்கறையுள்ள கதை. சொல்லப்பட வேண்டிய கதை. இளம் படைப்பாளிகளுக்கு எடுத்துக் காட்டாக இருக்கும் கதை சபாஷ்
மிக எளிமையான படமாக்கல் கவனம் கவர்கிறது .
பிரசாந்த் வெள்ளியங்கிரியின் ஒளிப்பதிவு கடல்புறக் காட்சிகளில் கவனிக்க வைக்கிறது.
படத்தின் பலம் இவையே .
சூர்ய பிரசாத்தின் இசையும் அஜய் சம்மந்தத்தின் கலை இயக்கமும் ஒகே ரகம்
வித்தியாசமான கதையை எடுத்தவர்கள் வழக்கின் பின்னணியையும் வித்தியாசமாக பிடித்து இருக்கலாம் . வழக்கமான ரூட்டில் போய் விட்டது . அதே நேரம் சில காட்சிகள் பாராட்டும்படியும் இருக்கிறது .
குடும்பத் தலைவர் பணத்துக்காக ஒத்துக் கொண்டு ஜெயிலுக்குப் போனார் என்று சொன்னதற்குப் பதில் மிரட்டி ஒத்துக் கொள்ள வைக்கப்பட்டார் என்று சொல்லி இருந்தால் இன்னும் வீரியமாக இருந்திருக்கும்.
பணத்துக்காக ஒத்துக் கொண்டு போனவனை எதுக்கு காப்பாத்தணும்? அவனும் குற்றவாளிதானே?
படத்தின் முதன்மைக் கதை துப்பறியும் மாணவருடையதா? பாதிக்கப்பட்ட பெண்ணுடையதா என்பதில் குழப்பம்.
துப்பறியும் கதையாக ஆரம்பித்து பாதிக்கப்பட்டவரின் கதையாக முடிகிறது .
எந்தக் கதையில் ஆரம்பிக்கிறோமோ அந்தக் கதையில் திரைக்கதை முடிந்தால்தான் படம் பார்க்கும் ரசிகனுக்கு முழுமை கிடைக்கும் .
சார்லி , சென்ட்ராயன், மகளாக, மனைவியாக வருபவர்கள் ஆகியோர் சிறப்பாக நடித்து இருந்தாலும் (சார்லி கொஞ்சம் ஓவர் கூட) மற்றவர்கள் படு செயற்கை . சிலபேர் முகம் சுண்ணாம்பு அடித்த சுவர் மாதிரி அசையாமல் இருக்கிறது .
நிழல்கள் ரவி கேரக்டர் தேவை இல்லாத ஒன்று .
எடிட்டர் தமிழ்க் குமரன் இரண்டாம் பகுதியில் ரிப்பிட்டேஷன்களை அப்பீட் ஆக்கி இருக்கலாம் .
இந்த நல்ல கதைக்கேற்ற டைட்டிலும் வைத்து இருக்கலாம் .
இப்படி சில குறைகள் இருந்தாலும் இப்போது திரையில் ஓடிக் கொண்டு இருக்கும் அபத்தக் களஞ்சிய டிராமக்களுக்கு இந்தப் படம் எவ்வளவோ மேல் .
இந்த வாரம் தியேட்டருக்குப் போக நினைப்பவர்கள் இந்தப் படத்துக்குப் போகலாம்