கார்த்திக் கல்ட் கிரியேஷன்ஸ் சார்பில் கார்த்திக் சபரீசன் மற்றும் வி செல்லுலாயிட், வி ஆர் குளோபல் மீடியா, ஸ்வேதா வாகினி ஸ்டுடியோஸ், க்ளவுன் பிக்சர்ஸ் சார்பில் விஷ்வக் சென் , சாந்தினி சவுத்ரி, அபிநயா, முஹம்மத் சமத், ஹரிகா பெடாடா, மயான்க் பரக், தயானந்த் ரெட்டி, சாந்தி ராவ் ஆகியோர் நடிக்க, பிரதியுஷ் வத்யாமுடன் சேர்ந்து எழுதி, வித்யாதர் காகிட்டா இயக்கி இருக்கும் தெலுங்குப் படம் .
தான் யார் என்று தெரியாத மறதி நோய் உள்ள அகோரியும், சக மனிதர்களைத் தொட்டலோ அல்லது அவர்களால் தொடப்பட்டாலோ பயத்துடன் கூடிய மயிர்க் கூச்செறிவு பெற்று மயக்கம் அடைந்து விடும் ஹப்பெபோபியா என்னும் குறைபாடு கொண்டவனுமான ஷங்கருக்கு ( விஷ்வக் சென்) , இமயமலையில் முப்பத்தி ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை முளைக்கும் , ஒளிரும் தன்மையுடைய பயோலுமினிசென்ட் வண்ணக் காளான்கள்தான் மருந்து என்று கூறும் காசி வாழ் அகோரிகள் அவனை அதை நோக்கிப் போகச் சொல்கின்றனர் .
அந்தக் காளான்கள் பற்றி ஆராய்வதற்காக ஜானவி என்ற இளம் பெண்ணும் (சாந்தினி சவுத்ரி) உடன் போகிறார்
அதே நேரம் இந்திய சீன எல்லையில் ஒரு சட்ட விரோத ஆராய்ச்சிக் கூடத்தில் பெண்களின் நிர்வாண உருவங்களைக் காட்டி கரண்ட் ஷாக் கொடுக்கப்பட்டு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு , சித்திரவதை செய்யப்பட்டு , பல முறை தப்பிக்க முயன்று தோற்றுப் போகும் சி டி 333 என்ற நபரின் (முஹமது சமத்) நினைவுகள், சங்கருக்கு பிரம்மையாக வந்து போகிறது.
இன்னொரு பக்கம் ஆந்திராவில் தேவதாசி கலாச்சாரத்தில் ஊறிய ஒரு கிராமத்தில் தேவதாசியாக இருந்து, ஒரு நிலையில் நோய் காரணமாக விலகிய துர்கா என்ற பெண்ணின் ( அபிநயா) சிறுமியான மகள் உமாவை (ஹரிகா பேடாடா) அந்த ஊர் ஆட்கள் தேவதாசியாக ஆக்க முயல , தன் மகளை அதில் இருந்து காப்பாற்ற முயல்கிறாள் தாய் .
இந்த மூன்று கதைகளிலும் நடந்தது என்ன? இவைகளுக்கு இடையில் உள்ள தொடர்பு என்ன என்பதே படம்.
கடைசியில் மூன்றுக்கும் யாரும் எதிர்பாராத ஒரு டுவிஸ்ட் கொடுக்கிறார்கள் . சில வகையில் அடடே என்று சொல்லும்படியும் சில வகையில் அட இவ்வளவுதானா என்று சொல்லும் படியும் இருக்கிறது அந்த டுவிஸ்ட் . அட, அது நல்லது என்றே வைத்துக் கொள்வோம் .
ஆனால் அதற்குள் நீட்டி முழக்கி, முறுக்கி , காட்சிகளை மெதுவாக நகர்த்தி பொறுமையை சோதிக்கிறார்கள் .
தயாரிப்புத் தரம் பிரம்மாதம்.
லே, கர்துங் லா பகுதிகளின் பனிமலை, பனிப் பள்ளத்தாக்கு, பனிச் சமவெளி லொக்கேஷன்கள் பிரம்மதம் . அலகாபாத், வாரணாசி லொக்கேஷன்களில் தெய்வீகம் .
மூன்று கதைகளுக்கும் வெவ்வேறு உணர்வுகளைக் கொடுக்கும் ஒளிப்பதிவை சிறப்பாகச் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஸ்வநாத் ரெட்டி செல்லுமல்லா. அருமை
கலாப் பூர்வமாக சில விஷயங்கள், இடைவேளையில் கொடுக்கும் சுவையான மிஸ் லீட் ..என்று இயக்குனர் வித்யாதர் காகிட்டாவைப் பாராட்ட சில விஷயங்கள் இருந்தாலும் அதற்கு அதீத பொறுமையோடு காத்திருக்க வேண்டி உள்ளது .
கலை இயக்கம் பாராட்டும்படி இருக்கிறது .
இந்தப் படத்தில் முதல் முக்கிய வில்லன் ராகவேந்திரா தருணின் எடிட்டிங்தான் .
மூன்று கதைகளையும் மாற்றி மாற்றி சொல்வதுதான் இந்தப் படத்தின் ஓட்டம் . ஆனால் அப்படி சொல்லும்போது ஒவ்வொரு கதையையும் கொஞ்ச நேரம் ஓட விட்டு, ரசிகனுக்கு வர வேண்டிய உணர்வுப்பூர்வம் கிடைத்த உடன் அடுத்த கதைக்குப் போக வேண்டும் . அதை விட்டு விட்டு , கொத்து பரோட்டா போட்ட கதையாக இஷ்டத்துக்கு மாற்றி மாற்றிக் காட்டுவது, சஸ்பென்ஸ் என்று நினைத்துக் கொண்டு கண்ட இடத்தில் கட் செய்வது என்று பொறுமையை அளவுக்கு மேல் சோதிக்கிறார்கள் .
பனிமலை பற்றிய லாஜிக்கே சற்றும் இல்லாமல் எடுக்கப்பட படம் இது . சங்கராச்சும் அகோரி . சரி போகட்டும் . ஆனால் ஜானவி பனி மலையில் நீட்டிக் கொண்டு இருக்கும் பனிக் கட்டியை வெறும் கையால் இறுக்கிப் பிடித்தபடி மணிக் கணக்கில் தொங்கிக் கொண்டே இருக்கிறார் .
பனி மலையில் வரும் சிங்கம் ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் இருக்கும் சிங்கம் போலவே மஞ்ச மசேல் என்று இருக்கிறது.
இப்படியாக, தெலுங்கில் இவர்களுக்கு பிடிக்காத வார்த்தை తర్కశాస్త్రం போல் இருக்கிறது .
மொத்தத்தில் gaami …. దాచు