‘அதிரடி’யில் பொங்கிய ‘கங்காரு’

Adhiradi-Audio-Launch---7
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி  இசை அமைத்து மன்சூர் அலிகான் தனது  ராஜ்கென்னடி பட நிறுவனம் சார்பில் தயாரிக்க பாலு ஆனந்த் இயக்கி வெளிவரும்  படம் ‘அதிரடி’.  இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க பெப்சி அமைப்புக்கு மாற்றாக மன்சூர் அலிகான் துவங்கிய டாப்சி (தமிழ்நாடு திரைப்பட படைப்பாளிகளின் ஒருங்கிணைந்த இந்தியா கூட்டமைப்பு) தொழிலாளர்களை வைத்து உருவாக்கப்பட்டது 
முன்னணி  கதாபாத்திரத்தில்  மன்சூர் அலிகான், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மௌமிதா சௌத்ரி மற்றும் , சஹானா, பூவிஷா, கவ்யா, ராதா ரவி, செந்தில், சிசர் மனோகர் , ஸ்ரீ ரங்கநாதன் ,சங்கர், கிங்காங், நெல்லை சிவா, போண்டாமணி, சுப்புராஜ், மஞ்சப் பை சேகர், நடேசன் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். செந்தில் படகோட்டியாக நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் 
மறைந்து கொண்டிருக்கின்ற சிலம்பம், களறி, வாள் வீச்சு, மான் கொம்பு போன்ற சண்டைப் பயிற்சிகளை இளைஞர்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்கும் பயில்வானாக நடிக்கும் அதே நேரம்,   மதுபானக் கடைகளுக்குச் சென்று குடிப் பழக்கம் மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவற்றின் தீமைகளைக் கூறி அந்தப் பழக்கத்தில் இருப்பவர்களின் காலில் விழுந்து குடிக்காமல் தடுக்கும் வேடத்தில் மன்சூர் நடிக்கிறார் . 
Adhiradi-Audio-Launch---6
படத்தின் பாடல்களில் விதம் விதமான பெண்களை உருட்டி எடுக்கிறார் மன்சூர்.  மதுபானக் கடையில் குண்டுப் பெண்கள் புடை சூழ குடிப்பழக்கத்தைக் எதிர்த்து பாட்டுப்பாடுகிறார்  பாடுகிறார் . கொத்தமல்லிக் கீரைக் கட்டை பச்சையாகத் தின்கிறார் . .”U” சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள  இந்தப் படம்  அக்டோபர் மாதம் 16ஆம் தேதி திரைக்கு வருகிறது .
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர்கள் நாசர் , ஆர். சுந்தர்ராஜன் , எடிட்டர் மோகன் , ஆகியோர் கலந்து கொண்டனர் 
நிகழ்ச்சியில் கங்காரு படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது ”  இன்றைக்குள்ள முக்கியப் பிரச்சினை மதுவிலக்கு. அது  பற்றி மன்சூர்அலிகான் படமெடுத்துள்ளார். அவர் செய்வது சிலநேரம் பைத்தியக்காரத்தனம் போல் தெரியும்.ஆனால் அதில் மனிதாபிமானம் இருக்கும்.அவர் தொழிலாளர்களின்  கஷ்டம் புரிந்தவர். வேலை முடிந்த அன்றே சம்பளம் கொடுப்பவர். இது தவறா? 
இவ்விழாவுக்கு எங்கள் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து யாரும் வரவில்லை. ஏன் ?
ஒருவேளை இது டாப்சி அமைப்பின் விழா என்றால் கூட,  ‘பெப்சியோடு  இணைந்து தொழில் செய்வதால் நாங்கள் வர முடியாது’ என்று அவர்கள் ஒரு சப்பைக்கட்டு கட்டலாம் . இது டாப்சி அமைப்பின் விழா இல்லையே .
athiradi
அதிரடி படத்தின் விழாதானே? படத்தின் தயாரிப்பாளர் மன்சூரும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஓர் உறுப்பினர்தானே ? அப்புறம் ஏன் வரவில்லை? கேட்டால் ‘வேலை இருக்கிறது’ என்பார்கள் . இந்த விழா நடக்கும் இந்த நேரம் சங்கத்தின்  தலைவர் மட்டுமல்லாது மற்ற பொறுப்பில் உள்ள அனைவருக்குமா வேலை இருக்கிறது ? 
நாசர் நடிகர் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் . ஜெயித்தார் என்றால் நடிகர் சங்கம் சார்பில் நிகழ்ச்சிகளுக்கு போக வேண்டும் . நடிகர்களின் பிரச்னையைத் தீர்க்க நேரம் ஓஹுக்க வேண்டும் . அவர் இல்லாவிட்டால் அவர் சார்பில் யாரவது அந்த வேலையை செய்ய வேண்டும் . முடியாது என்றால் போட்டியிட்டு பதவிக்கு வரக் கூடாது . 
இன்று இங்கே நாசர் உள்ளிட்ட பலரும் நடிகர் சங்கம் சார்பில் வந்து இருக்கும்போது , தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பொறுப்பில் உள்ள ஒருவரும் வரவில்லை என்றால் என்ன அர்த்தம்?
வாழ்த்த ஒருவருக்கும் எண்ணமில்லை என்று அர்த்தம் . அதனால் ,யாரும் வரவில்லை. இதில் காட்டும் ஒற்றுமையை தொழில் வளர்ச்சிக்காகச் செய்தால் பாராட்டலாம் .ஆனால் அவர்களது செயல்பாடுகள் ஏட்டளவில்தான் இருக்கிறது.
Adhiradi-Audio-Launch---5
ஒருதயாரிப்பாளர் ஆடியோ வெளியீடு வரைதான் சிரிக்கிறான்.பிறகு படம் வெளியிடும்வரை அழுகிறான். பலசமயம் படம் வந்த பிறகு அந்த அழுகை நிரந்தரமாகிறது. தயாரிப்பாளர் பிரச்சினை தீர தயாரிப்பாளர் சங்கத்தில் வழி கேட்டால் ‘உடனே சட்டென்று ‘படம் எடுக்காதே’ என்கிறார்கள் .
சாப்பிட்டது ஒத்துக் கொள்ளவில்லை என்று டாக்டரிடம் போகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் . டாக்டர் ஜீரணம் சரியாக நடக்க மருந்து தரவேண்டும் . அதை விட்டுவிட்டு ‘இனிமேல் சாப்பிடாமல் பட்டினி கிடந்தது செத்துப் போ’ என்று சொன்னால் அந்த டாக்டரைப் பற்றி என்ன நினைப்போம் ? 
தயாரிப்பாளர் சங்கத்தில் போய் படத் தயாரிப்பாளர்கள் பிரச்னயை சொன்னால் ‘ உன்னை யாரு படம் எடுக்கச் சொன்னது ? படம் எடுக்க வராதே .  படமெடுத்தால்தானே நஷ்டம் வருகிறது? நஷ்டம் வருகிறது என்றால் படமெடுக்காதே’ என்கிறார்கள்.  இதை  சொல்லத்தானா தயாரிப்பாளர் சங்கம்? கொடுமையாக இருக்கிறது ”என்று பொங்கி விட்டார் 
அடுத்துப் பேசிய மன்சூர் அலிகான்  “தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விழாவுக்கு வரவேண்டியது அவர்கள் கடமை. வருவார்கள் என்று பெயர்கள் போட்டிருந்தேன். யாரும் வரவில்லை. நான் அதுபற்றிக் கவலைப்படுவதும் கிடையாது.  நான் யாருக்கும் பயப்படுவதும் இல்லை.
Adhiradi-Audio-Launch---4
நான் உருவாக்கியிருக்கும் ‘டாப்சி’ யாருக்கும் போட்டியான அமைப்பு இல்லை. மற்ற சங்கத்தில் சேர 5 லட்சம் வாங்குகிறார்கள். நான் வெறும் 2000 வாங்கிக் கொண்டு இந்த சங்கத்தில் சேர்த்துக் கொள்கிறேன்.
சினிமா நிரந்தரமில்லை. எம்.ஜி.ஆர். வந்தார் சிவாஜி வந்தார். இன்று இல்லை. நாளை நானும் இல்லை.6 ஆண்டுகளுக்குமுன் கார்த்தி யாரென்று தெரியுமா? 5 ஆண்டுகளுக்கு முன் விஜய் சேதுபதி யாரென்று தெரியுமா? இன்று பெரிய நடிகர்களாக அவர்கள் வர வில்லையோ? ஆனால் தொழிலாளி மட்டும் புதிதாக வரக் கூடாதா? ”என்றார்.
நாசர் பேசும் போது   ”மன்சூர்அலிகான் யாருக்கும் பயப்படமாட்டார். அவரது தோற்றத்துக்கும் குணத்துக்கும் சம்பந்தமிருக்காது.மனதில் அன்பு இருக்கும் அழகேஷ் என்றொரு இயக்குநர் என்னை மன்சூர்அலிகான் முரட்டு யானையைக் கட்டிப் போட்ட மாதிரி ஆடிக்கிட்டே இருப்பார் என்று கூறி அவரைப் போல நடிக்கச் சொல்லிப் பாடாய்ப் படுத்தினார்.
கடைசி வரை அவரைப் போல என்னால் நடிக்கவே முடியவில்லை. மன்சூர்அலிகான் காப்பியடிக்க முடியாத ஒரு நடிகர்.அவர் எல்லாரையும் சிரிக்க வைப்பார். கஷ்டத்தை மட்டும் பங்கு போட மாட்டார்.”என்றார்.
Adhiradi-Audio-Launch---2
எல்லாம் சரிதான் . ஆனால் மன்சூருக்கு ஒரு வார்த்தை!
குறைந்த சம்பளத்துக்கும் நிறைந்த ஒத்துழைப்புக்கும் டாப்சியில் உழைப்பாளிகள் இருப்பது தயாரிப்பாளர்களுக்கு நல்லதுதான் . ஆனால் அந்த நபர்கள் படத்தின் தரத்தை கட்டிக் காக்கும் அளவுக்கு திறமையும் நேர்த்தியும் வாய்ந்த கலைஞர்களாகவும் இருக்க வேண்டும் .
குறைந்த சம்பளத்துக்கு வருவார்கள் என்பதால் செய்நேர்த்தி இல்லாத நபர்களை எல்லாம் சேர்த்து படப்பிடிப்புக்கு அனுப்பி படத்தின் தரம் பாதிக்கப்பட்டால்…. டாப்சி உதிர்ந்து போகும் . 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →