விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ஆர் டி டீம் ஒர்க்ஸ் சார்பில் விஷ்ணு விஷால் மற்றும் ரவி தேஜா தயாரிக்க, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கருணாஸ், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் செல்ல அய்யாவு எழுதி தமிழிலும் மட்டி குஸ்தி என்ற பெயரில் தெலுங்கிலும் இயக்கி இருக்கும் படம்.
அம்மா அப்பா இல்லாத நிலையில் ஆணாதிக்க மனோபாவம் கொண்ட மாமனால் (கருணாஸ் ) வளர்க்கப்பட்டு, அதே மன நிலையில் வளர்கிற – சொத்து தேய்ந்து கொண்டிருக்கிற பணக்கார- கபடி விளையாட்டில் ஆர்வம் கொண்ட – முன்னேற்றம் குறித்த பொறுப்பற்ற – பொள்ளாச்சி இளைஞன் வீரா ( விஷ்ணு விஷால்)…
அடிமைத்தன சுபாவம் கொண்ட – தலை நிறைய கூந்தல் கொண்ட- கிழித்த கோட்டைத் தாண்டாத – மிக மிகக் குறைவாகப் படித்த தன்னை விடவும் குறைவாக படித்த, ஒரு பெண்ணைத்தான் மணக்க வேண்டும் என்று தேடுவதால் அவனுக்கு அமையாமலே இருக்க,
மாமாவின் கேரளத்துப் பாலக்காட்டு நண்பனின் ( முனீஸ்காந்த்) அண்ணன் மகளான – நன்கு படித்த , அதே நேரம் குஸ்தி வீராங்கனையான — அதனாலேயே மாப்பிள்ளை அமையாத பெண்ணை (ஐஸ்வர்யா லக்ஷ்மி) – உண்மைகளை மறைத்து திருமணம் செய்து வைக்கின்றனர்.
மாமா ஒரு வழக்கில் ஜெயிலுக்குப் போகிறான்
பின் முழங்கால் வரை தொங்கும் சவுரி முடி, பணிவு . பதவிசு உட்பட பற்பல மேக்கப், கெட்டப் , செட்டப்களோடு அந்தப் பெண் கட்டுப்பெட்டி கிராமத்து மனைவியாய் (சில மெல்லிய லாஜிக் மீறல்களோடு) சமாளித்துக் கொண்டு இருக்கிறாள். நாயகனின் சுற்றுச் சூழல் ஆர்வ செயல்பாடு ஒன்றால் நியாயமாகப் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்து வில்லன், நடு ரோட்டில் அடியாட்களோடு கணவனை வழி மறிக்க, நாயகன் சீறிச் சினன்று சண்டை போட்டாலும் ஒரு நிலையில் சிக்கிக் கொள்ள , அவனை வில்லன் வெட்டப் போக….
குத்து விளக்கு பொண்டாட்டிக்குள் மறைந்து கிடந்த குஸ்தி வீராங்கனை தடை உடைகளை உடைத்துப் பொடி செய்து வெளியே வந்து வில்லனையும் அவன் ஆட்களையும் கிழித்துக் கீரை விதிக்கிறாள்.
ஊரே அல்லோலகல்லோலப் பட, வில்லன் கும்பல் விதிர் விதிர்த்துப் போக, கணவன் கிடுதாக்கிப் போகிறான் . அவன் மனைவியுடன் சமாதானமாகப் போனாலும் ஜெயிலில் இருந்து வரும் மாமன் நாயகியைக் கேவலமான வார்த்தைகளால் பேச , அவள் மாமனை அறைய, விஷயம் அறிந்து வரும் நாயகன் மனைவியை அடிக்க,…
இல்ல இல்ல… பதிலுக்கு அவள் அவனை அடிக்கவெல்லாம் இல்ல…. கோவித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போய் விடுகிறாள் .
நாயகனுக்கே தெரியாமல் மாமா அவளுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப, அவள் மனம் உடைந்து மீண்டும் இறுகி, மறுபடியும் குஸ்தியில் இறங்க, அந்த செய்தி பார்த்து நாயகனை ஊர் கிண்டல் செய்ய ,
“நீ குஸ்தி கற்று உன் மனைவியிடம் மோதி, ஜெயிக்க வேண்டும் ” என்று மாமா தூபம் போட, மனைவியுடன் மோத நாயகன் தயார் ஆக, நாயகி மீது ஆசைப்படும் ஒரு குஸ்தி பயிற்சியாளன் , மேலும் கணவன் மனைவிக்குள் சண்டையை அதிகரிக்கிறான் குஸ்திப் போட்டி நடந்ததா இல்லையா? ஆம் எனில் எப்படி நடந்தது ?அப்புறம் என்ன நடந்தது என்ற – தெறிக்க விடும் நகைச்சுவைகளுடன் கூடிய கல கல லக லக ரகளைப் படம் இந்த காட்டா குஸ்தி .
முதல் பாராட்டுகள் எழுதி இயக்கி இருக்கும் செல்ல அய்யாவுக்கு .
வித்தியாசமான களத்தில் புதுமையான பின் புலத்தில் ரசிக்கக் கூடிய கதையை எடுத்து , அதில் இதுவரை பார்க்காத காமெடி காட்சிகளோடு வளரும் திரைக்கதை அமைத்து, சரியான இடத்தில் கதைப் போக்கை யதார்த்தப்படுத்தி , ஏற்றுக் கொள்ளும்படியாக காட்சிகளை அமைத்து , சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற விசயங்களைச் சொல்லி , மசாலா விசயங்களையும் கலந்து , மற்ற தொழில் நுட்பங்களையும் நடிக நடிகையரையும் சிறப்பாகப் பயன்படுத்தி, தேர்ந்த படமாக்கல் சிறப்பான இயக்கம் என்று சாதித்து இருக்கிறார் இயக்குனர் .
முடி துவைக்கும் காட்சியில் அந்த முடி வேண்டுமானால் சவுரி முடியாக இருக்கலாம் . ஆனால் அந்தக் காட்சி தமிழ் சினிமாவின் நகைச்சுவையில் தழையத் தழைய மனசில் நிற்கும் நிஜக் கூந்தல் .
அட்டகாசமான எழுத்து . நகைச்சுவை, சீரியஸ், எள்ளல் என்று எல்லா விதத்திலும் அமேசானாகப் பொங்கிப் பாய்ந்திருக்கிறது செல்ல அய்யாவுவின் எழுத்து . அதுவும் ஆண்களைப் பற்றி பெண்களும் பெண்களைப் பற்றி ஆண்களும் பேசும் அந்த முரட்டு நகைச்சுவைக் காட்சியில் ஜோடியாகப் படம் பார்க்க வந்தவர்கள் கூட தனித்தனி அணியாகப் பிரிந்து கைதட்டி சிரிக்கிறார்கள்.
இப்படி, சண்டைக் காட்சிகள் உட்பட அனைத்து வகையிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைக்கதையை ஏற்று நாயகனாக நடித்து தயாரித்தும் இருக்கிறாரே விஷ்ணு விஷால் … அதுதான் அவரது நிஜ ஹீரோயிசம் . இந்த மாதிரி நபர்கள் இருப்பதால்தான் இன்னும் நல்ல சினிமாக்கள் வருவதற்கான வழி தூர்ந்து போகாமல் இருக்கிறது .
அதே நேரம் கிளைமாக்ஸ் ஏரியாவை முழுதும் தன் வசப்படுத்தி தன்னையும் நிரூபிக்கிறார். விஷ்ணு . மூன்றாம் பிறை படத்தில் படம் முழுக்க ஸ்ரீதேவியை நடிக்க விட்டு விட்டு கடைசியில் கமல் ஸ்கோர் செய்வாரே அந்த உத்தியின் இன்னொரு வகையான பரிமாணம் இது .
அடேயப்பா ஐஸ்வர்யா லக்ஷ்மி ! அசல் குஸ்தி வீராங்கனை போல களத்தில் ஆக்ரோஷம் காட்டும் முதல் காட்சியிலேயே ”இது என் படம்…” என்று சொல்லாமல் சொல்லி விடுகிறார் . சண்டைக் காட்சிகளில் பகீரத உழைப்பு , நடிப்பில் நேர்த்தி என்று படத்தைத் தாங்கித் தூக்கி நிறுத்துகிறார் . பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக வந்தவர் இதில் பொம்பள ஆதித்த கரிகலானாக வியாபிக்கிறார் .
சண்டைக் காட்சிகளில் பின்னிப் பிரித்துப் பெடல் எடுத்து இருக்கிறார்கள் அன்பறிவ் .
ரிச்சர்டு நாதனின் ஒளிப்பதிவு முதல் காட்சியிலேயே படத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துகிறது .
அசத்தி இருக்கிறார் ஆர்ட் டைரக்டர் உமேஷ் ஜே குமார். ஜிகே பிரசன்னாவின் படத் தொகுப்பும் சிறப்பு.
ஜஸ்டின் பிரபாகரனின் இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ரவி ஆர் டி டீம் ஒர்க்ஸ் நிறுவனங்கள் படத்துக்குக் கொடுத்து இருக்கும் தயாரிப்புத் தரம் அபாரம்.
நகைச்சுவை மட்டுமின்றி முதல் பாதியில் எல்லாவிதமான காட்சிகளிலும் இருக்கும் நவீனமும் வித்தியாசமும் இரண்டாம் பகுதியில் குறைந்து விட்டது .
வித்தியாசமான காட்சிகளோடு ஒரு திரைக்கதையை அமைப்பது எவ்வளவு பலமோ அவ்வளவு ரிஸ்க்க்கும் கூட . ஏனேன்றால் இடைவேளைக்குப் பிறகு ரசிகர்கள் மேலும் நிறைய வித்தியாசமாக எதிர்பார்ப்பார்கள் . அந்த யானைப் பசிக்கு நீராவி ரயில் என்ஜினில் நிலக்கரி அள்ளிக் கொட்டுவது போல கொட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அது நகைச்சுவைக் காட்சிகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மனைவியை மாமன் திட்ட வரும் போது நாயகன் இல்லாமல் இருப்பது, நாயகனுக்கே தெரியாமல் வக்கீல் நோட்டீஸ் போவது, மனைவியைப் பார்க்க வரும் கணவனை குஸ்தி போடும் வில்லன் ஜஸ்ட் லைக் தட் பார்க்க விடாமல் தடுப்பது , மனைவியின் மெடல்கள் எல்லாம் பசங்க தள்ளி விடுவதற்காகவே பீரோ மேல் ஹார்லிக்ஸ் பெட்டியில் காத்த்திருப்பது….
என்று சில காட்சிகள் வழக்கமான டெம்ப்ளேட்டில் மாட்டிக் கொண்டு விட்டன. இந்தக் காட்சிகள் மூலம் இயக்குனர் சொல்ல வரும் விசயமும் காட்ட வரும் உணர்வும் மிகச் சரியானதுதான் . ஆனால் அதை சொல்லப் பயன்படுத்தி இருக்கும் காட்சிகள் ஒரு மாற்றுக் குறைந்து விட்டன.
இப்படி ஓரிரு குறைகள் இருந்தாலும் சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல வேண்டிய வகையில் சிறப்பான உருவாக்கத்தில் மக்கள் சிரித்துத் திளைக்கும்படி சொல்லி அசத்தி இருக்கிறது கட்டா குஸ்தி .