ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, சத்யராஜ் , ஏமி ஜாக்சன், விக்ராந்த், கருணாகரன் ஆகியோர் நடிக்க , மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கி இருக்கும் படம் கெத்து . சத்தா இல்லை வெத்தா ? பார்க்கலாம்
பொக்ரானில் அணுகுண்டு வெடித்து அந்நிய சக்திகளை இந்தியா அதிர வைத்து விட்ட நிலையில், அக்னி ‘இ’றகுகள் என்ற புத்தகத்தை எழுதிய விஞ்ஞானியும் ஜனாதிபதியுமான அப்துல் க’மாலை’ போட்டுத்தள்ள விரும்பும் ஒரு அந்நிய தீவிரவாத ஏஜென்ட் அதற்காக ஒரு கைதேர்ந்த கொலைகாரனை (விக்ராந்த் ) ஏற்பாடு செய்கிறது.
அப்துல் கமால் தனது அக்னி இறகுகள் புத்தகத்தில் தனது ‘ஆசிரியர் ஜான் மேத்யூ’ பற்றிக் குறிப்பிட்டு , ‘குடும்பத்தினர் யாரும் இன்றி தனியாக வாழும் ஜான் மேத்யூவின் மறைவுக்குப் பின், அவருக்கு ஒரு மகனின் ஸ்தானத்தில் இருந்து இறுதிச் சடங்குகளை செய்வேன்” என்று எழுதி இருக்கிறார் .
தென் தமிழ் நாட்டில் கம்பம் பள்ளத்தாக்கில் கூடலூர் பகுதியில் வாழும் ஜான் மேத்யூவைக் கொன்றால் அவருக்கான இறுதிச் சடங்குக்கு அப்துல் கமால் வருவார் ; அங்கே வைத்து அவரைக் கொல்லலாம் என்று திட்டமிடும் கொலைகாரன் அங்கே வருகிறான் . திட்டங்களை தீட்டுகிறான் .
அந்த ஊர்ப் பள்ளியின் பி.ஈ.டி ஆசிரியர் ஒருவர் (சத்யராஜ்) மிக நேர்மையானவர் . அங்கு டாஸ்மாக் பார் நடத்தும் நபர் (மைம் கோபி) தனது பாரை பள்ளி அருகில் அமைக்க , அதனால் குடிகாரர்கள் பள்ளி மைதானத்தில் தள்ளாட , பாரை தடை செய்ய வேண்டும் என்று ஆசிரியர் போலீசில் புகார் கொடுக்க, அவரை பார் உரிமையாளர் அடிக்கிறான் .
பதிலுக்கு ஆசிரியரின் மகன் (உதயநிதி ஸ்டாலின் ) பார் உரிமையாளரை அடித்து வெளுக்கிறான் . ‘இனியும் பார் இருந்தால் உன்னை கொன்னுடுவேன்’ என்று ஆசிரியர் மிரட்ட , பார் உரிமையாளர் பாரை அடுத்த நாள் திறக்க , பார் உரிமையாளர் கொல்லப்படுகிறார் .
ஆசிரியர் மேல் கொலைப் பலி விழுகிறது .
ஆசிரியரின் மகன், போலீஸ் துறையில் உள்ள நண்பன் ஒருவனுடன் (கருணாகரன்) சேர்ந்து நிஜக் குற்றவாளியை தேட , அதே சமயம் அந்நிய சக்தி அனுப்பிய இன்டர்நேஷனல் கொலையாளி பேராசிரியர் ஜான் மேத்யூவைக் கொன்று முடிக்க , அவருக்கு அஞ்சலி செலுத்த அக்னி இறகுகள் எழுதிய விஞ்ஞானி ஜனாதிபதி அப்துல் கமால் வர …
அப்புறம் இந்த இரண்டு டிராக்கும் எந்தப் புள்ளியில் இணைகிறது. என்ன நடக்கிறது என்பதே கெத்து.
படத்தின் டைட்டிலில் சத்யராஜின் பெயரை முதலில் போட்டு பிறகு தனது பெயரை இரண்டாவதாகப் போட்டுக் கொள்ளும் உதயநிதியின் பணிவுக்குப் பாராட்டுக்ள் .
உதயநிதி நன்றாக ஆடுகிறார் . சண்டை போடுகிறார் .
ஜான் மேத்யூ நடத்தும் கர்னல் பென்னி குக் நூலகத்தில், புத்தகம் திருடும் பெண்ணாக வந்து அங்கு வேலை செய்யும் உதயநிதியிடம் சிக்கி அப்புறம் லவ் பண்ணும் பெண்ணாக ஏமி ஜாக்சன் . ஒரு காட்சியில் ” நான் வேற வெள்ளைக்காரி மாதிரி இருக்கேன்ல..?” என்று வசனம் பேச வைத்து, ஏமி ஜாக்சனை போட்டதை நியாயப்படுத்துகிறார்கள் .
சத்யராஜ் வழக்கம் போல நல்ல நடிப்பு . விக்ராந்த சைலண்டாக கொஞ்சம் மிரட்டுகிறார்
முதல் பாதியில் கருணாகரனின் காமெடி ஓரிரு இடங்களில் லேசான தூறல் போல சிரிக்க வைக்கிறது .
ஆனாலும் படத்தின் நிஜ ஹீரோ ஒளிப்பதிவாளர் சுகுமாரின் கேமராதான் . என்ன ஒரு வண்ணங்கள் . என்ன ஒளி ஆளுமை… என்ன ஒரு கேமரா நகர்வுகள் …. இயற்கை வெளிச்சத்தை பனிக்கு இடையே பாய்ச்சி அழகூட்டுவதிலும் … இயற்கை இருளை பனியோடு குழைத்து பிசைந்து மிரட்டுவதிலும் ஜமாய்த்திருக்கிறார் மனுஷன் .
அப்போ ஹீரோயின்? பல காட்சிகளில் ரகஸியா….ரகஸியா…. ரகஸியா…. என்று மீண்டும் மீண்டும் கூச்சல் போடும் ஒரே இசையைக் கொடுத்து லூப் அடிப்பது போல இருந்தாலும் கூட ஹாரீஸ் ஜெயராஜின் பின்னணி இசைதான் நிஜ ஹீரோயின் . முடிந்தவரை பரபரப்பு ஏற்றுகிறார்.
அடுத்த இடத்தில் இயக்குனர் திருக்குமரனின் மேக்கிங்.
ஆனால் மேட்டர் ?
திருட்டுக் கதாநாயகி , டிடியில் நியூஸ் வாசிக்கும் அவளது ஆசை , சாராய ரவுடிகள், கதைக்கு தேவையே இல்லாமல் வரும் ஒரு ஸோ கால்டு சொர்ணக்கா, இரண்டு வளர்ந்த பிள்ளைகள் இருந்தும் மூணாவது பெத்துக்கலாமா என்று, பொண்டாட்டியிடம் சிவாஜி கால வசனம் பேசும் ஆசிரியர்…
படம் துவங்கும்போதே புரிந்து விடும் கிளைமாக்ஸ் , கடைசியில் கிளைமாக்ஸ் சம்பவத்தை கதாநாயகியே நியூசாக வாசிக்கும் க்ளிஷே , அப்புறம் தேவையே இல்லாமல் குறியீடாக அவர்கள் சொல்லும் அப்துல் கமாலின் ஒரிஜினல், நிஜத்திலேயே இறந்து விட்ட நிலையில், மிஸ் ஆகும் சுவாரசியம் ,
படம் முழுக்க தொடரும் லாஜிக் குளறுபடிகள் எல்லாம் சேர்ந்து , பெருத்த ஏமாற்றமே தருகின்றன .
காசு இருக்கிறது என்பதற்காக படத்தில் நான்கு காட்சியில் வரும் ஒரு தங்கை கேரக்டருக்காக நிஜமான தடகள வீராங்கனை பிரகதியை கொண்டு வந்தீர்கள். சரி . சும்மா ஒரு காட்சியில் அவர் தடை ஓட்டம் ஓடுவதைக் காட்டினால் போதுமா ? கதைக்குள் அந்த தடை ஓட்டம் வர வேண்டாமா ?
குறைந்த பட்சம், ஆளரவமற்ற பாதையில் சைக்கிளில் தனியாக வரும் அவரை பார் ஓனரின் உறவினன் காரில் எதிர்ப்பட்டு மறித்து கொலை வெறியோடு பார்க்கும் இடததில், அந்தப் புள்ளை தடை ஓட்ட பாணியில் காரையே தாண்டிக் குதித்து ஓடியது என்று காட்டி, கைதட்டல் வாங்கக் கூடவா உங்களுக்கெல்லாம் கசக்குது ? அட போங்கப்பா !
இப்பவே முல்லைப் பெரியாறுக்குள் அநியாயமாக கேரளா அரசு வந்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்கிறது . அதை தட்டிக் கேட்க ஒருத்தனுக்கும் வக்கில்லை .
இந்த நிலையில் இந்தப் படத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் ஒரு நேர்மையான மலையாளியை (முரண் தொடர்) இரண்டு தமிழர்கள் அநியாயமாக கொள்வதாக ஒரு காட்சி . “பாருங்க தமிழ் படத்துலயே என்ன சீன இருக்கு” என்று இதையும் உதாரணமாக எடுத்துக் கொண்டு நாளைக்கு கேரளாக்காரன் கம்பத்துலையே வந்து கம்பு ஊணனுமா?
உங்க தத்துவங்களே புரிய மாட்டேங்குதுப்பா . அந்த ஆளை மலையாளியாகக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?
சம்மந்தா சம்மந்தமில்லாமல் பாட்டு போடும் நோயில் இருந்து தமிழ் சினிமா குணமாகி வரும் நிலையில் இந்தப் படத்தில் அந்த நோயின் தாக்கம் ரொம்பவே அதிகம் .
சுகுமாரும் ஹாரீஸ் ஜெயராஜும் இல்லாவிட்டால் நிலைமை ரொம்ப விபரீதமாகி இருக்கும் .
கெத்து…. குமுளிப் பக்கம் ஒரு கூத்து .
மகுடம் சூடும் கலைஞர்
—————————— —
ஒளிப்பதிவாளர் சுகுமார் .