அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில், , அதர்வா, சூரி, நான் கடவுள் ராஜேந்திரன் , ரெஜினா கசன்ட்ரா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணிதா, அறிமுகம் அதிதி போஹங்கர் நடிப்பில்,
ஓடம் இளவரசு என்பவர் இயக்கி இருக்கும் படம் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் . காம்பினேஷன் தேறுமா? பார்க்கலாம் .
கல்லூரிக் காலத்தில் தான் வாடகைக்குக் குடியிருந்த வீட்டின் தரைத்தளத்தில் குடி இருந்த லாவண்யா என்ற பெண்ணுக்கு (ரெஜினா கசன்ட்ரா) ,
தன் கல்யாணப் பத்திரிக்கையை கொடுக்க, மீண்டும் மதுரைக்கு வருகிறான் ஜெமினி கணேசன் என்ற இளைஞன் (அதர்வா).
இப்போது அங்கே குடி இருக்கும் வெட்டி உதார் ரவுடியான சுருளிராஜன் (சூரி) அவனுக்கு உதவ, லாவண்யாவின் இப்போதைய இருப்பிடம் தேடுகிறார்கள் .
உடன் சுருளிராஜனின் மாமாவான சுல்தான் கட்டப்பா (நான் கடவுள் ராஜேந்திரன்) . போகும் வழியில் ஜெமினி கணேசன் தான் லாவண்யாவை காதலித்ததை சொல்கிறான் .
தவிர லாவண்யாவை காதலித்த அதே சமயம், அந்த வீட்டின் இரண்டாவது தளத்தில் குடி இருந்த தேவி என்ற பெண்ணையும் (அதிதி போஹங்கர்) காதலித்ததை அடுத்து சொல்கிறான்.
ஒரு நாள் லாவண்யாவின் அப்பாவும் தேவியின் அப்பாவும் ஜெமினியின் அப்பாவிடம் ஏதோ சொல்ல உடனே குடும்பத்தோடு வீட்டை காலி செய்கிறார் ஜெமினியின் அப்பா (சிவா)
பிளாஷ்பேக் முடிந்து இப்போது முகவரி தேடிப் போகும் வழியில் சுருளி ராஜனுக்கு சொந்தமான பிரியா என்ற பெண்ணை சந்திக்க , அவளையும் (பிரணிதா) தான் காதலித்ததை ஜெமினி சொல்கிறான் .
அவளைக் காதலிக்கும்போதே பூஜா என்ற பெண்ணும் (ஐஸ்வர்யா ராஜேஷ்) அவனைக் காதலித்திருக்கிறாள். .
லாவண்யா, தேவி இருவரையும் ஜெமினி காதலித்த கதையை ,
ஜெமினியின் அப்பா பிரியாவின் அப்பாவிடம் (மயில்சாமி) சொல்ல ,அதை பிரியாவின் அப்பா பிரியாவிடம் சொல்ல, ஜெமினியின் காதலைத் தூக்கி எறிகிறாள் பிரியா .
ஒரு நிலையில் மனம் மாறி பிரியா வர, அதற்குள்அவன் பூஜாவோடு தொற்றிக் கொள்வதைப் பார்த்து விடும் பிரியா, அவனைப் பிரிகிறாள் .
இப்போது, பூஜா ஜெமினியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருமணம் நிச்சயம் ஆன நிலையில் , தன் பழைய காதலிகளுக்கு பத்திரிகை கொடுக்க வந்திருக்கும் ஜெமினிக்கு நடக்கும் சம்பவங்களே இந்தப் படம் .
லாவண்யாவை ஜெமினி நல்ல பிள்ளையாக காதலிப்பது போல் பயணிக்கும் படம் , ஒரு நிலையில் அவன் அதே நேரம் தேவியையும் காதலித்தான் என்று சொல்லும்போது, இது பிளேபாய் கதை என்று தெரிய வருகிறது .
இந்த இரண்டு காதலையும் மாறி மாறி சொல்லி , பிரியாவை காட்டும்போது இடைவேளை வந்து விடுகிறது . பார்த்த உடன் பிரியா கொடுக்கும் ஷாக்கிலேயே,
அவளையும் காதலித்து இருப்பான் என்பது சொல்லாமல் புரிகிறது . இரண்டாம் பாதியில் ஊட்டியில் பிரியாவின் காதல் எபிசோட் விரிகிறது .
இப்படி நகரும் கதையில் , இமான் இசையில் அமைந்த ஆதாம் ஏவாள் பாடலும் அது எடுக்கப்பட்ட விதமும்தான் விருந்தாக அமைகிறது .
பிரியாவின் காதல் கதை முடிந்து அதர்வாவும் சூரியும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பிறகு காமெடியில் கலக்கும் நிலைக்கு வருகிறது படம் .
ஆரம்ப காட்சிகளில் தேவை இல்லாத பில்டப்புகள் . ஜூரி நீங்ஹ ஜோக்குனு நினஜ்சு இப்படி பேஜறத நிறுத்தறது நழ்ழது . ராஜேந்திரன் அவர் மட்டும் சிரிக்கிறார் .
கிளைமாக்சில் கையில் தாலி உள்ள மன நிலை சரியில்லாத பெண்ணின் காட்சியும் டுவிஸ்டும் நச்
”ஆண்களுக்கு காதல் ஒரு விளையாட்டு . ஆனா பொண்ணுங்க இன்னும் காதலுக்கு உண்மையாதான் இருக்கறாங்க .”
நீ பல பேரை காதலிச்சு இருக்கலாம் . ஆனா அவங்க எல்லோருக்கும் உன்னுடனான காதல்தான் முதல் காதல் ”
என்ற ஒரு சில இடங்களில் வசனங்கள் அருமை
விஜய் டி வியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் ஆட்டோ கிராப் படத்தை கலாய்த்தால் எப்படி இருக்குமோ அப்படி திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள் .
ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ….. காதல் கொஞ்சம் காமெடி கொஞ்சம் !