ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்க , ஆர்யா , சாயீஷா , கருணாகரன், ஆடுகளம் நரேன், சம்பத் , ஆகியோர் நடிப்பில் ,
சன்தோஷ் ஜெயகுமார் இயக்கி இருக்கும் படம் கஜினிகாந்த் . காந்தமா ? கட்டையா ? பார்க்கலாம்
தீவிர ரஜினி ரசிகர் ஒருவர் (ஆடுகளம் நரேன்) , தன் கர்ப்பிணி மனைவியோடு (உமா பத்மநாபன்) தர்மத்தின் தலைவன் படம் பார்த்துக் கொண்டு இருக்கையில்,
அதில் வரும் ஞாபக மறதிப் பேராசிரியர் ரஜினிகாந்த் சாகும் அதே நொடியில் , தியேட்டரிலேயே பிறக்கும்,
சிறுவன் ரஜினிகாந்த் , வளர , வளர ஞாபக மறதியின் உச்சம் தொடுகிறான் (ஆர்யா).
எனவே வெறுத்துப் போன அப்பா அவனுக்கு கஜினிகாந்த் என்று பெயர் வைக்கிறார் .
பெண் பார்க்கும் காலத்தில் பெண்ணின் அப்பாவை (சம்பத்) அடுத்தடுத்து இரண்டு முறை சந்திக்க நேரம் கொடுத்து மறந்து போக ,
பொறுமை இழந்த அந்த பர்ஃபக்ட் மனிதர் வெறுத்துப் போவதோடு கொலை வெறியாகி விடுகிறார் .
இந்நிலையில் தொடர்ந்த தன் மறதிகளின் நிகழ்வுகளால் ஓர் பெண் (சாயீஷா ) மீது காதல் கொள்கிறான் .
அவளுக்கும் காதல் வர, தொடர் மறதியால் அவளுக்கும் சிக்கல் வந்தாலும் ஒவ்வொரு முறையும் மறதிக்கு உருக்கமான நெகிழ்வான காரணங்கள் கூறி அவள் மனதில் மேலும் மேலும் உயர்கிறான் .
ஒரு நிலையில் அவள் தன் தந்தையை சந்திக்கச் சொல்ல ,போனால் அந்த தந்தை வேறு யாருமல்ல . ஆரம்பத்தில் பொறுமை இழந்து கொலை வெறியான மனிதரே .
எனவே தன் நண்பனை (சதீஷ்) அந்த மனிதரிடம் நடிக்க வைக்கிறான் .
இடையில் நாயகியை பெண் கேட்டு வந்து நாயகியால் மறுக்கப்பட்ட ஓர் இன்ஸ்பெக்டர் நாயகியை பின் தொடர்கிறான் .
நாடகம் முடிவுக்கு வரும் வேளையில் நடப்பது என்ன என்பதுதான் இந்த கஜினி காந்த் .
நானி நடித்து தெலுங்கில் ஹிட் அடித்த ஒரு தெலுங்குப் படத்தில் ஒரிஜினல் காமெடிகளை அப்படியே வைத்துக் கொண்டு,
அதில் தமிழுக்காக தர்மத்தின் தலைவன் பட ஞாபக மறதிப் பேராசிரியர் கேரக்டரை மிக்ஸ் செய்து காமெடியில் பின்னிப் பெடல் எடுத்து இருக்கிறார் இயக்குனர் சன்தோஷ் ஜெயகுமார்.
ஞாபக மறதியால் ஹீரோ செய்யும் பல நிகழ்வுகள் படத்தில் காமெடி அணுகுண்டாக வெடிக்கின்றன .
வசன காமெடி, சிச்சுவேஷன் காமெடி , ஆக்ஷன் காமெடி , சைலன்ட் காமெடி , ஸ்லாப்ஸ்டிக், இன்டலக்சுவல் காமெடி (அந்த திருப்பதி கிருஷ்ணகிரி பெங்களூர் போர்டு !) என்று முழுக்க முழுக்க காமெடி .
முதல் பாதியை விட இரண்டாம் பகுதி அசத்துகிறது .
அதுதான் காமெடி இருக்கே அப்புறம் என்ன என்று நினைக்காமல் மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் இயக்குனர் சன்தோஷ் ஜெயகுமார் அதுதான் ஆசம் ஆசம்!
கேரக்டருக்கு பொருத்தமாக ஆர்யா ! பாஸ் என்கிற பாஸ்கரனுக்கு பிறகு நல்ல நடிப்பு. கிளைமாக்சுக்கு முன்பு வரும் சோகக் காட்சியில் கூட சமாளிக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் .
மிக அழகாக இருக்கிறார் , ஆடுகிறார் , சிரிக்கிறார் , நடிக்கிறார் சாயீஷா . குறிப்பாக ஆர்யாவின் மறதி காமெடிகளை சேவையாக எண்ணி சிலிர்ப்பதும் வழிவதும் அருமை
சதீஷ் நடிப்பில் அதிகம் சிரிக்க முடிந்தது இந்தப் படத்தில்தான் . வேலை கம்மி என்றாலும் கருணாகரனும் சிறப்பு .
ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு ரன்னிங் ரோலில் அசத்தி இருக்கிறார் ஆடுகளம் நரேன் .
ஸ்ட்ரிக்ட் அண்ட் நல்ல அப்பாவாக கைதட்டல் வாங்குகிறார் சம்பத் .
அவரது மனைவியாக வரும் உமா பத்மநாபன் , கொஞ்ச நேரம் வந்தாலும் குழம்பி காமெடி செய்யும் காளி வெங்கட்டும் , நான் கடவுள் ராஜேந்திரனும் சிரிக்க வைக்கிறார்கள்
சிறுசிறு கதாபாத்திரங்களில் வருபவர்களும் சிறப்பு .
நடிகர்களிடம் இயக்குனர் வேலை வாங்கிய விதம் அபாரம் .
பல்லுவின் கேமரா கண்களை கட்டிப் பிடித்து கானம் பாடிக் காதலிக்கிறது . மிக அருமை . முதல் பாதியை சுமப்பதில் இவருக்கும் சாயிஷாவுகும் சம பங்கு .
பால முரளி பாலுவின் இசையில் பாடல்கள் இனிமை .
காமெடி படம் என்பதால் சாத்த்யமற்ற , இயல்பில்லாத , இமாலய லாஜிக் மீறல்கள் கூட குறையாக தோன்றவில்லை .
(அந்த கிளைமாக்ஸ் பைட் மட்டும் அந்த ஸ்டைலும் ரொம்பப் பழைய புளிச்ச மாவு )
ஹரஹர மகாதேவகி, இருட்டோரையில் முரட்டு குத்து போன்ற வில்லங்கமான படங்களை இயக்கியவரிடம் இருந்து,
இப்படி ஓர் அட்டகாசமான காமெடி படமா என்று பிரம்மித்து பேஸ்த் அடித்து வியக்க வேண்டி இருக்கிறது.
தயவு செஞ்சு இந்தப் படத்தை ஓட வச்சிடுங்க மக்களே .!
“இந்தப் படம் ஓடலைன்னா மறுபடியும் ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து மாதிரி படங்களை எடுக்க போயிடுவேன்”னு மிரட்டி இருக்கார் இயக்குனர் சன்தோஷ் குமார்
எனவே நாடு நலம் பெற , கலாச்சாரம் காப்பற்றப் பட , கண்ணியத்தின் கண் குருடாகாமல் இருக்க ஆதரிப்பீர்… கஜினிகாந்த் !
கஜினி காந்த் .. கலகல கலக்கல் காமெடி திருவிழா .