ஸ்ரீ சாய் பிலிம்ஸ் சர்கியூட் தயாரிப்பில், பிரசாத், நரேஷ், தமிழ், தீப்தி ஷெட்டி, சந்தோஷ், கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய் நடிப்பில் மனோகரன், இயக்கி இருக்கும் படம் கில்லி பம்பரம் கோலி.
சிறுவயதில் கில்லி , பம்பரம் , கோலி போன்ற ஆட்டங்களில் திறமையுடன் விளங்கிய மூன்று இளைஞர்களும் , நடனத்தில் ஆர்வம் உள்ள ஒரு பெண்ணும் விளையாட்டுகள் பயன்தராமல் நடனமும் கற்றுக் கொள்ள முடியாத நிலையில் படிக்கவும் முடியாமல் , ஒரு நிலைக்குப் பிறகு மலேசியாவில் வேலைக்கு வருகிறார்கள். அவர்களது முதலாளிகள் கசக்கிப் பிழிகிறார்கள் .
தவிர சந்திரா என்ற ரவுடியின் கோபத்துக்கும் ஆளாகிறார்கள் . ஒரு நிலையில் அனைவரும் நண்பர்கள் ஆகிறார்கள் . எல்லோரும் சந்திராவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இணைந்து எதிர்க்க முயல்கிறார்கள் . ஆனால் சந்திரா அவர்களை அடித்து துவைப்பதோடு இளம்பெண்ணை சீரழிக்கவும் முயல்கிறான்.

ஒரு நிலையில் அவர்கள் ஒன்று சேர்ந்து , ”நமக்கு தெரிஞ்ச கலையில் அடுத்தவங்களை வீழ்த்துவது வீரம் இல்லை . அவர்களுக்கு தெரிந்த கலையில் அவர்களை வீழ்த்துவதுதான் வீரம்.
எங்களுக்கு சண்டை போட தெரியாது . அதனால கில்லி , பம்பரம் , கோலி இதில் ஏதாவதில் எங்களை வீழ்த்து” என்கிறார்கள் .
சந்திரா கில்லி ஆட கற்றுக் கொள்ள , அப்புறம் என்ன நடந்தது என்பதே படம் . மலேசியாவில் எடுக்கப்பட்ட படம் . பத்துமலை முருகன் கோவிலை எழிலாக காட்டுகிறார்கள் . சந்தோசம் .
நாக கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் இரவு நேரத்தில் மலேசிய டுவின் டவர்ஸ் சும்மா தகதகக்கிறது. அருமை.

நகைச்சுவை என்று காட்சிகள் இருக்கின்றன . பேசுகிறார்கள் . ஆடுகிறார்கள் . பாடுகிறார்கள். ஓடுகிறார்கள் . படமும் போகிறது . உப கதாபாத்திரங்களில் பலரது நடிப்பும் படு செயற்கை .
முக்கிய நடிகர்களும் பாராட்டும்படி செய்யவில்லை. நடிக்கும் பலருக்கு உதடுகள் மட்டுமே அசைகிறது . சந்திரா அணி இந்த அப்பாவிகளை பார்க்கும் இடம் எல்லாம் அடித்து துவைக்கிறது . மலேசியாவில் போலீஸ் என்று யாருமே இல்லை .
லாஜிக் மருந்துக்கும் இல்லாத கிளைமாக்ஸ் ஏரியா நகைச்சுவையாகவும் இல்லை .
மலேசியாவில் வேலைக்கு போய் கஷ்டப்படும் நம்மவர்கள் என்ற விஷயத்தை எடுத்தவர்கள் அதை வைத்து இன்னும் நல்ல கதை திரைக்கதை வசனம் இயக்கம் எல்லாம் செய்து இருக்கலாம் .