முகவை பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் அங்கயற்கண்ணன் தயாரித்துக் நாயகனாக நடிக்க, உடன் குட்டிப் புலி சரவண சக்தி, ப்ராணா, மயில்சாமி, டி எம் கார்த்திக்,சாம்ஸ், முத்துப்பாண்டி நடிப்பில் குட்டிப்புலி சரவண சக்தி எழுதி இயக்கி இருக்கும் படம்.
கார் டிரைவர் ஒருவன் (அங்கயற்கண்ணன் ) , மனைவியை வேலைக்கு அனுப்பி விட்டு சொகுசாக இருக்கும் ஒருவன் (குட்டிப் புலி சரவண சக்தி) இருவரும் மகா குடிகாரர்கள் . இருவரின் உறவினரும் குடிப் பழக்கம் இல்லதவருமான ஒருவரின் ( மயில்சாமி) மகள் (அபி நட்சத்திரா) ஐ ஏ எஸ் படிக்க ஆசைப்படுகிறாள் . அதில் எல்லோருக்கும் பெருமை .
வேலைக்குப் போகும் மனைவியின் சக ஊழியன் ஒருவன் தன் வீட்டுக்கு நிரோத் பாக்கெட்டோடு மனைவியைப் பார்க்க வந்திருப்பதை அறிந்து மனம் உடைக்கிறான் சொகுசுப் பேர்வழி . குடி போதையில் ஒரு விபச்சார புரோக்கரின் காரில் இருக்கும் பெண்ணை தன் மனைவி என்று நினைத்து வீட்டுக்கு வந்து , கர்ப்பிணி மனைவியின் மண்டையை உடைக்கிறான் டிரைவர்
இது தவிர , குடி நோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒரு டாக்டர் (கார்த்திக்) , நல்ல பிள்ளையாக வெளிநாடு போய் சம்பாதித்து வந்த ஒருவன்( சாம்ஸ்) ஆகியோர் இவனது குடி தோழர்கள்.
குடிகாரக் கணவனின் தொல்லை தாங்க முடியாமல், கர்ப்பிணி மனைவி அவள் பிறந்த வீட்டுக்குப் போய் விடுகிறாள் .
ஐ எஸ் படிக்க ஆசைப்படும் பெண்ணின் தகப்பனை இவர்கள் குடிக்க வைக்க, போதையில் டிரைவர் வண்டி ஓட்டி வரும்போது விபத்து ஏற்பட்டு , பெண்ணின் தகப்பன் இறக்கிறான் .
அவளால் நடக்க முடியாமல் போவது மட்டுமல்ல .. ஜீரணிக்க முடியாத ஒரு சம்பவமும் நிகழ்கிறது .
இவர்கள் திருந்தினார்களா இல்லையா என்பதே படம்
சின்னதும் பெரிதும் , இயல்பும் செயற்கையுமாய் ஏகப்பட்ட கேரக்டர்கள் . நிறைய கிராமத்து முகங்கள் சிறப்பு.
கேப் விடாமல் பேசிக் கொண்டே இருந்தாலும் ஆங்காங்கே வசனம் நன்றாக இருக்கிறது
சில இடங்களில் நகைச்சுவை சிரிக்க வைக்கிறது .
என்னதான் குடிகாரர்கள் கதை என்றாலும் இவ்வளவு டாஸ்மாக் காட்சிகள் அநியாயம்.
சாதாரணமாகப் போகும் படம் கடைசியில் ஒரு எதிர்பாராத திருப்பத்தோடு அதிர வைத்து நெகிழ்வாக முடிகிறது .
ஆரம்பம் முதல் இந்த நேர்த்தி இருந்திருந்தாலும் குடியால் ஏற்படும் மற்ற பிரச்னைகளைப் பேசி இருந்தாலும் படம் சிறப்பாக இருந்திருக்கும். எனினும் குடியின் கொடுமை சொல்வதால் பாராட்டலாம் .