மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் எர்நேனி , ரவிசங்கர் ஆகியோர் தயாரிக்க, அஜித்குமார், திரிஷா , அர்ஜுன் தாஸ் , பிரபு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் கதை எழுதி , ஹரி கிருஷ்ணா, அர்ஜுன், ரவி கந்தசாமி, ஹரிஷ் மணிகண்டன், ராஜா, பாலசுப்ரமணியம் ஆகியோருடன் சேர்ந்து திரைக்கதை எழுதி, இயக்கி இருக்கும் படம்
ஏ கே எனும் பிரபல டான் ஒருவர் (அஜித் குமார்) கல்யாணம் , திருமணம் என்று ஆகி, பிறந்த முதல் குழந்தையை ஆவலோடு பார்க்கப் போக, ஒரு தாதாவின் பிள்ளையாக என் மகன் வளரக் கூடாது என்று சொல்லி கணவனை ஒதுக்குகிறார் மனைவி ( திரிஷா)
செய்த தவறுகளுக்காக ஜெயிலில் இருந்தாலும் அநியாயம் செய்யாமல், போலீசுக்கு உதவும் தாதாவாக இருக்கிறார் ஏ கே .
தன் அப்பா ஜெயிலில் இருப்பது தெரியாமல் வளர்கிறான் மகன் .
தண்டனை முடிந்து மகன் மனைவியுடன் வாழ அப்பா வரும்போது, மகன் போதைப் பொருள் வழக்கில் சிக்கி ஜெயிலுக்குப் போகிறான். மகனுக்காக மீண்டும் ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார் டான். நடந்தது என்ன என்பதே படம் .
அஜித்தின் அதி தீவிர ரசிகர்களுக்கான படம்.
அஜித் நடித்த தீனா படம் முதற்கொண்டு எல்லா படத்தில் ரெஃபரன்சையும் சொல்லி ஏ கே கேரக்டருக்கு பலம் ஏற்றுகிறார்கள் . விதவிதமான கெட்டப்களில் அதிரடி பில்டப்களில் வளைய வருகிறார் அஜித் .
அபிநந்தன ராமானுஜத்தின் அடர்த்தியான ஒளிப்பதிவு, கலர்புல்லான அரங்குகள், வண்ணமயமான ஆடைகள், அயல்நாட்டு லொக்கேஷன், கடல்புரம் என்று படம் ரிச்சாகத் தோன்றுகிறது .
ஒத்த ரூபா தாரேன் பாட்டைப் பயன்படுத்திய விதம், இளமை இதோ இதோ பாட்டின் ரிதமுக்கு ஏற்ப பஞ்ச சவுண்டுகளை சேர்த்து பைட் வைத்தது போன்ற விஷயங்கள் அட போட வைக்கின்றன .
அஜித்தின் அறிமுகப்பாடலுக்கு ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை பாட்டையும் அப்படியே போட்டு இருக்கலாம் . ஆனால் ஏன் அதை பாதி ரீமிக்ஸ் செய்து ஜி வி பிரகாஷ் குமார் போட்டார் என்று தெரியவில்லை.
கதாபாத்திரங்களுக்கு ஆப்பாற்பட்டு நீளும் சிம்ரனின் சினிமா ரெஃபரன்ஸ்கள் எரிச்சல்.
இதுவரை தமிழில் வந்த பல டான் படங்களில் இருந்து கொஞ்ச கொஞ்சம் எடுத்து காட்சி அமைத்து நோகாமல் நோன்பு கும்பிட்டு இருக்கிறார் இயக்குனர் .
பேரு பெருசா வைத்த அளவுக்கு சோறும் கொஞ்சம் நன்றாக வைத்திருக்கலாம் .
எனினும் அஜித்தின் முந்தைய படங்களின் வணிக ரீதியான தோல்வியில் துவண்டு கிடந்த ரசிகர்களுக்கு இலுப்பைப் பூவாக இனிக்கிறது இந்த குட் பேட் அக்லி
குட் பேட் அக்லி … ரசிகர் ஸ்பெஷல் ஷோ