திரையுலகில் தனது பின்னணி பாடும் திறமையால் சிகரம் தொட்ட முதல் பின்னணிப் பாடகி பி.சுசீலா .
சுமார் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , இந்தி பல மொழிகளில் பாடி வருபவர்.
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்த பி.சுசீலா. பள்ளியில் படிக்கும்போதே இசையில் ஏற்பட்ட ஆர்வத்தால் ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் இசை பயின்றார்.
ஆந்திர பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் டிப்ளமோ முடித்தார்.
பதினைந்து வயதில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். இவரது இசைத் திறமையால் கவரப்பட்ட இயக்குனர் கே.எஸ்.பிரகாஷ்ராவ் ,
தனது படத்தில் இவரை முதன் முதலாக பின்னணி பாட வைத்தார்.
தமிழில் ‘பெற்ற தாய்’ என்ற படத்தில் ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு என்ற பாடலை முதன் முதலில் பாடினார் .
1955ல் இவர் பாடிய ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்..’, ‘உன்னை கண் தேடுதே…’ பாடல்களால் பிரபலமடைந்தார்.
1955 முதல் 1985 வரை வெளிவந்த கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் இவர் பின்னணி பாடியுள்ளார். தமிழில் டி.எம்.சவுந்திரராஜன்,தெலுங்கில் கண்டசாலா, கன்னடத்தில் பி.பி.நிவாஸ் ஆகியோருடன்,
இவர் பாடிய டூயட் பாடல்கள் தென்னிந்திய திரையிசை உலகில் சரித்திரம் படைத்தன. குறிப்பாக, டி.எம்.சவுந்திரராஜனுடன் தமிழில் நூற்றுக்கணக்கான டூயட் பாடல்களைப் பாடியுள்ளார்.

தாய் மொழி தெலுங்கு என்றாலும் இவரது தமிழ் உச்சரிப்பு தனித்தன்மையுடன் விளங்கியது.
விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இருவரும் பிரிந்த பின் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் தொடங்கி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என ஏராளமான இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.
உயர்ந்த மனிதன் படத்தில் இடம்பெற்ற ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ பாடலுக்காக முதன் முதலில் தேசிய விருது பெற்றார் .
சவாலே சமாளி படத்தில் இடம்பெற்ற ‘சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு’ பாடலுக்காக மீண்டும் தேசிய விருது பெற்றார்
5 முறை தேசிய விருதுகள், பத்மபூஷன் விருது, 10க்கும் மேற்பட்ட மாநில விருதுகள், கலைமாமணி பட்டம்….!
2005 வரை சினிமாவில் நிறைய பாடிய பி சுசீலா தற்போது பக்திப் பாடல்கள், மெல்லிசை பாடல்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.
பல்வேறு ஆடியோ நிறுவனங்களுக்காக 1000க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.
பி சுசீலாவின் ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் சிலர் சுசீலா பாடிய அனைத்து மொழிப் பாடல்களையும் பல்வேறு சிரமங்களுக்கு இடையே தொகுக்க ஆரம்பித்தனர் .
அந்த தொகுப்பு கின்னசின் கதவு வரை தட்டியது .
உலகிலேயே அதிகம் பாடல்கள் பின்னணி பாடிய பாடகி என்ற விவரத்தை பதிவு செய்து அதற்கான சான்றிதழையும் பி சுசீலாவுக்கு வழங்கி இருக்கிறது கின்னஸ் புக்
1960 முதல் இன்றுவரை பி.சுசீலா 17,695 பாடல்களைப் பாடியுள்ளதாக அந்த பதிவில் அறிவித்துள்ளது கின்னஸ் .
ஆனால் ஆசியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ் இன்னும் ஒரு படி மேலே போய் பி.சுசீலா 18 330 பாடல்களை பாடியுள்ளதாக பதிவு செய்கிறது .
“ஆனால் அவர் பாடிய பல பாடல்கள் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை . எல்லாம் சேர்த்தால் 25000 வரை வரும் என்கிறார்கள்”பாடல்களை தேடும் பணியில் இருப்பவர்கள் .
இவற்றில் 70 சதவீதம் பாடல்கள் எந்த ஒரு தொழில் நுட்ப வளர்ச்சியும் இல்லாத காலத்தில் மிகுந்த சிரமத்துடன் பாடிய பாடல்கள் என்பதை உணர்ந்தால்தான் சுசீலாவின் உழைப்பான் வீரியத்தை புரிந்து கொள்ள முடியும்.
எஸ் பி பால சுப்ரமணியத்துடன் சேர்ந்து சுமார் 1300 பாடல்களை படி உள்ளார் பி.சுசீலா . அந்த வகையில் ஒரு பின்னணிப் பாடகருடன் சேர்ந்து அதிக பாடல்கள் பாடியவர் என்ற சாதனையையும் செய்தவர் அவரே
கின்னஸ் தன்னை அங்கீகரித்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் பி.சுசீலா .
” எனது இசை குருநாதர்கள், என்னை பாட வைத்த இசையமைப்பாளர்கள் , உடன் பாடிய கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. ரசிகர்களுக்கு நன்றி .எனக்கு ஒண்ணும் தெரியாது .
மியூசிக் டைரக்டர் சொன்ன வேலைய செஞ்சேன் .
ரேடியோவுல நான் பாடினத கேட்ட ஏ வி மெய்யப்பச் செட்டியார் என்னை ஸ்டுடியோவுக்கு அழைத்து ஒப்பந்தம் போட்டார் . அவர்தான் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார்
நான் பாடிய பாடல்களை திரையில் பார்க்கும்போது என்னையே மறந்துடுவேன் . அப்படியே அந்த நடிகைக்குள் கரைஞ்சுடுவேன் . இந்தப் பாடலை எல்லாம் நாமதான் பாடினோமான்னு ஆச்சர்யமா இருக்கும்.
”கண்ணா .. கருமை நிறக் கண்ணா…” ன்னு நான் பாடினத இப்போ பார்த்தா அப்படியே நான் அந்த ஆர்ட்டிஸ்ட்டுகுள்ள போய்டுவேன் .
‘நாளை இந்த வேளை பார்த்து….’ பாடலை நான் பாடி முடிந்த போதே எம் எஸ் விசுவநாதன் சொன்னார், ‘ இந்த பாட்டுக்கு உனக்கு தேசிய விருது கிடைக்கும்’ என்று!
அப்படியே கிடைத்தது . ஆனால் அப்போது நான் பெரிதாக சந்தோஷம்கூட படவில்லை . அப்போ நான் ரொம்ப சின்னப் பொண்ணு . அதோட வேல்யூ கூட எனக்கு தெரியாது .
இப்போ கொஞ்சம் விவரம் தெரியுது கின்னஸ் கிடைச்சது சந்தோஷமா இருக்கு . ‘ என்றார் .
‘இப்போ எதாவது பாட்டுப் பாடுங்க…’ என்று கேட்டபோது அந்த இசையரசி பாடிய பாடல் .
“உன்னை ஒன்று கேட்பேன்.
உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாடச் சொன்னால்
என்ன பாடத் தோன்றும் ?”