தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ். தங்கராஜ் தயாரிக்க,
கவுதம் கார்த்திக், நிக்கி கல்ரானி, நான் கடவுள் ராஜேந்திரன், கருணாகரன், ரவி மரியா, சதீஷ், பால சரவணன் , ஆர் கே சுரேஷ், மனோபாலா , மயில்சாமி நடிப்பில்,
கதை திரைக்கதை வசனம் எழுதி சன்தோஷ் குமார் இயக்கி இருக்கும் படம் ஹர ஹர மகா தேவகி . ஹர ஹர வா ? அரோஹராவா ? பார்க்கலாம் .
தன் கட்சி சார்பாக பொது மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லாப் பொருள் பைகளில் ஒன்றில் டைம் பாம் பொருத்தி வெடிக்கச் செய்து , மக்களைக் கொன்று ,
தேர்தலின் வெற்றி பெற முயல்கிறார் ஓர் அரசியல்வாதி (ரவிமரியா)
அதற்காக தன் நம்பிக்கைக்குரிய அல்லக்கை ஒருவன் (நமோ நாராயணன் ) மூலம் , இரண்டு நபர்களை (கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன்) பிடித்து ,
அவர்களிடம் டைம் பாமை ஒப்படைக்கிறான் .
பயந்து போன அல்லக்கை சம்மந்தப்பட்ட தினத்தன்று ஹரஹர மகாதேவகி என்ற ரிசார்ட்டுக்கு குடும்பத்தோடு போகிறான்
காதல் ஜோடி ஒன்று (கவுதம் கார்த்திக்- நிக்கி கல்ரானி ) கருத்து வேறுபாட்டால் காதலை முறித்துக் கொள்ள முடிவு செய்து,
ஒருவருக்கொருவர் கொடுத்த பொருட்களை மேற்படி ரிசார்ட்டில் வைத்து கை மாற்றிக் கொண்டு பிரிய முடிவு செய்கிறது .
காதலனின் நண்பன் (சதீஷ் ) துணைக்கு வருகிறான். காதலிக்கும் ஒரு தோழி துணைக்கு வருகிறாள் .
கள்ள நோட்டு மாற்றுவதில் கை தேர்ந்த ஒருவன் (பால சரவணன்) கொண்டு வரும் ஒரு கோடி ரூபாய் கள்ள நோட்டு அடங்கிய பையும் ,
பாம் உள்ள பையும் , காதலன் கொண்டு வரும் பையும் ஒரே மாதிரி இருப்பதால் (விலை இல்லாப் பொருட்கள் வழங்க உதவிய அதே கட்சிப் பைகள் !) ,
சில சூழல்களில் ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு இடம் மாறுகிறது .
ரிசார்ட்டுக்கு வந்த ஒரு தம்பதியின் குழந்தையை கடத்தும் ஒருவன் அங்கேயே இருந்து கொண்டு ஒரு கோடி ரூபாய் பிணையத் தொகை கேட்கிறான் .
குற்றவாளியைக் கண்டு பிடிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் (ஆர் கே சுரேஷ்)
தான் அனுப்பிய வெடிகுண்டு பை கை மாறியதை அறிந்த அரசியல்வாதியும் ரிசார்ட்டுக்கு வருகிறான்.
எல்லாம் ஒன்றாகிக் கலந்து குழம்பும் போது என்ன ஆனது என்பதே படம் .
தமிழ் சினிமாவில் இரட்டை அர்த்தக் காமெடி படம் என்று கேட்டு இருப்போம் . ஆனால் இதில் இரண்டு அர்த்தம் எல்லாம் கிடையாது .
நேரிடியாக ஒரே அர்த்தம் . அதுவும் ஆணின் இடுப்புக் கீழே நோக்கும் ஒரே விஷயம் ! அதுவும் கொஞ்ச நஞ்சமல்ல .
கேட்டால் ”இது அடல்ட் காமெடி . A படம் . இது இப்படித்தான் இருக்கும் , இது மாதிரி படங்கள் அமெரிக்காவில் வருது . அன்டார்ட்டிகாவில் வருது .
பம்பாயில் கூட வருது . தார்ப்பாயில் உருட்டி வருது. பதினெட்டு வயசு ஆனவங்க மட்டும் வாங்க . பிடிச்சவங்க மட்டும் வாங்க” என்கிறார்கள் .
சமூக அக்கறையுடன் உண்மைகளை சொன்னால் மட்டும் இறையாண்மை என்று குறையாண்மையோடு குதிக்கும் .
என்னத்த சொல்ல !
செல்வகுமாரின் ஒளிப்பதிவு ரம்மியமாக ஜொலிக்கிறது . சுப்பிரமணிய சுரேஷின் கலை இயக்கமும் அப்படியே . உடைகள் தேர்வும் அருமை .
யbbbbbbப்பா ….. !
– என்ற அந்த எக்ஸ்பிரஷனை என்னமா கொடுக்கிறார் நிக்கி கல்ரானி (சரியா படிங்க) !
மற்ற எல்ல்லாரும் வண்டி வண்டியாக அந்த அர்த்த வசனங்களை அள்ளிக் கொட்டுகிறார்கள் .
அடல்ட் காமெடி என்றாலும் ஆரம்பத்தில் முக்கால் மணி நேரம் ஆர்டினரியாகவும் அடல்டாகவும் மட்ட்ட்டும் போகும் படம் ,
அப்புறம்தான் அடல்ட் காமெடியாகவே வருகிறது . அப்படியே இரண்டாம் பகுதியிலும் தொடர்கிறது .
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க செய்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் இன்ஸ்பெக்டர் ,
பணியாற்றும் கம்பெனியின் லுங்கியோடு எங்கும் போகும் — ஹீரோவின் நண்பன் இப்படி குணச்சித்திரங்களில் சில அட !
டாஸ் மாக் வேண்டாம் என்று சொல்லும் மக்களை அடிக்கும் போலீஸ், குடிக்க வரும் குடிமகன்களை சலாம் போட்டு உள்ளே கொண்டு போவதை காமெடியாக சொல்வது ,
மத வெறிக் கூட்டங்களில் திடீர் பக்தி வந்தது போலவும் , பேய் பிடித்ததுபோலவும் , இன்ஸ்டன்ட் குணம் ஆவது போலவும் நடக்கும்,
கோமாளிக் கூத்துகளை மத வேறுபாடின்றி ஓட்டி இருப்பது …..
இப்படி படத்தில் வரும் ஒரு சில காமெடிகள் , இந்த புண்ணாக்கு அடல்ட் காமெடிகளை விடவும் நன்றாகவே இருக்கின்றன .
அப்படியே ஒரு அட்டகாசமான காமெடி படம் எடுத்து குடும்பம் குழந்தை குட்டி என்று எல்லா தரப்பு மக்களையும் கவரலாமே ? இந்த அடல்ட் காமெடிதான் வேணுமா ?
அதாவது பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா ?
இந்த… அகல் விளக்கு , குத்து விளக்கு, மெழுகுவர்த்தி, தீப்பந்தம் , கரண்ட் லைட் , மின்மினிப்பூச்சி – நிலா வெளிச்சம் இதெல்லாம் வேணாமா ?