கலர்ஃபுல் பீட்டா மூவ்மென்ட், படிகாரம் பிக்சர்ஸ், தீனா புரடக்சன்ஸ் சார்பில் என் ஏ ராமு, சரவணன் பொன்ராஜ் அரவிந்த் தர்மராஜ், தீனா ஆகியோர் தயாரிப்பில் ராம் அருண் காஸ்ட்ரோ, காளி வெங்கட், கவுதமி சவுத்ரி, பிச்சைக்காரன் மூர்த்தி, ஜெயபிரகாஷ் ராதா கிருஷ்ணன் நடிப்பில் ராம் அருண் காஸ்ட்ரோ எழுதி இயக்கி இருக்கும் படம்.
மலையுச்சிக் கிராமம் ஒன்றில் போஸ்ட் மேனாக இருக்கும் காளி (காலி வெங்கட்) அங்குள்ள மக்களின் வெள்ளந்தி குணம் காரணமாக வரும் தொல்லைகள், அங்கே இருக்க முடியாத மன நிலை ஆகியவை காரணமாக மேலதிகாரிகளிடம் பணி மாற்றல் கேட்கிறார்.
அஞ்சல்துறை மேலதிகாரி மறுத்து விட்ட நிலையில் , அந்த ஊரில் இருக்கும் போஸ்ட் ஆபீசையே தூக்கி விட்டால் தனக்கு சமநிலப் பகுதியில் மாற்றம் கிடைக்கும் என்றெண்ணி ,
‘போஸ்ட் ஆபீசுக்குப் பதில் கூட்டுறவு வங்கி வேண்டும்’ என்று அந்த மக்கள் கேட்பது போல போலி மனு தயார் செய்து அந்த ஊர் மக்களை ஏமாற்றிக் கையெழுத்து வாங்குகிறார் .
அதை கொடுக்கப் போகும் நிலையில், மலை உச்சியில் உள்ள ஒரு பெண்ணுக்கு கடிதம் கொண்டு போகும்போது , வழியில் வரும் ஒரு நபர் (பிச்சைக்காரன் மூர்த்தி) மூலம், ஒரு காலத்தில் அங்கு போஸ்ட் மேனாக இருந்த ஒரு நபர் ( ராம் அருண் காஸ்ட்ரோ) அந்த மக்களின் நலனுக்காக வெள்ளைக்காரனை எதிர்த்து போராடி தியாகம செய்த கதையைக் கேட்கிறார்.
அதன் பின்னர் அவருக்குள் ஏற்பட்ட மாற்றம் என்ன ? அவர் அனுப்பி வைத்த மனு என்ன ஆனது என்பதே படம்
அது என்ன ஹர்காரா என்று கேட்கக் கூடாது . முதன் முதலில் வட இந்தியாவில் போஸ்ட்மேன் வேலை பார்த்த நபரின் பெயரோ குழுவின் பெயரோ என்று என்னவோ சொல்கிறார்கள்.
படத்தின் மிகப் பெரிய பலம் இரண்டரை மணி நேரமும் ஈர்க்கும் காடும் மலையும் அருவியும் குருவியுமான் லொக்கேஷன். ஏரியல் ஷாட்களில் ஈர்க்கிரரர்கள் ஒளிப்பதிவாளர்கள் பிலிப் ஆர் சுந்தரும் லோகேஷ் மணிவண்ணனும்.
வி ஆர் கே ரமேசின் கலை இயக்கமும் பாராட்டும்படி இருக்கிறது
படம் முழுக்க வரும் பழங்குடி மண்ணின் மக்கள் முகங்கள் உள்ளம் கொள்ளை கொள்ளும் கவிதை
இஷ்டப்பட்டு கஷ்டப் பட்டு படம் எடுத்து இருக்கிறார்கள் . ஆனால் நேர்த்திக்கும் ரசனைக்கும் நஷ்டமோ நஷ்டம்
மாதேஸ்வரன் மலை வாழ் மனிதனுக்கு ஹர்காரா என்ற பெயர் எதுக்கு ? கேட்க ஏதோ இந்திப் படம் மாதிரி இருக்கே. புரியாமல் பேர் வைத்தால் அது என்ன என்று ஆராய்ச்சி பண்ணிக் கண்டுபிடித்து தியேட்டருக்கு வரும் அளவுக்கு மக்கள் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார்களா?
யாருக்குமே புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்தும் வியாதி தமிழ் சினிமாவில் பாடல் வரிகளில் இருந்து படத் தலைப்பு வரை படர்ந்து கொண்டிருப்பது கவலைக்குரிய விஷயம் .
போஸ்ட் ஆபீசுக்குப் பதில் கூட்டுறவு வங்கி கேட்பது அந்த ஊருக்கு செய்யும் உதவி அல்லவா என்பது போன்ற கேள்விகளில் ஆரம்பித்து ஆரம்பம் முதலே தகராறுதான் .
எந்த தொழில் நுட்ப வசதிகளும் இல்லாத காலத்தில் போஸ்ட்மேன்கள் செய்த சேவையும் சாகசமும் மறக்க முடியாத ஒன்று .
உதாரணமாக கொடைக்கானல் மலைக்கு நடுவில் பள்ளத்தில் இருக்கும் பள்ளங்கி என்ற கிராம மக்கள் ஒரு உதவி கேட்டு மதுரைக்குத் தகவல் அனுப்ப இன்றைக்கு ஒரு வாட்ஸ் அப் போதும் .
ஆனால்வசதிகள் இல்லாத காலத்தில் தகவலைக் கொண்டு செல்லவும் உதவிகளை கொண்டு சேர்க்கவும் அந்தக் காலத்தில் போஸ்ட் மேன்கள் பட்ட கஷ்டங்கள் சாகசங்கள் அதனால் அவர்கள் இழந்தவைகள் என்று அல்லவா திரைக்கதை இருக்க வேண்டும்?
அவன் வெள்ளைக்காரனுடன் சண்டை போட்டான்; கழுமரத்தில் சொருகப்பட்டான் ;கழுகு வந்து கொத்தித் தின்னுச்சு என்ற பம்மாத்துகள் எதுக்கு?
அன்றைய போஸ்ட்மேன்கள் கடிதங்களை கொண்டு சேர்க்க பட்ட கஷ்டங்கள், இழப்புகள் , அதே நேரம் அவர்களின் சேவையால் மலர்ந்த பலரின் வாழ்வு , போற்றப்படாத அந்த போஸ்ட்மேன்களின் தியாகங்கள் என்று இந்தியா முழுக்க எத்தனை நெகிழ்ச்சிக் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன! அந்தப் பக்கமே எட்டிக் கூடப் பார்க்காமல் கூத்தடித்தால் எப்படி ?
சரி.. அந்தக் காலகட்டம் என்ற பின்னணியிலாவது எதாவது சுவாரஸ்யமாக சொல்வார்கள் என்று பார்த்தல் சிலம்பத்துக்கும் ஈட்டி எறிதலுக்கும் படம் முழுக்க விளக்கம் கொடுக்கிறார்கள் .
பிச்சைக்காரன் மூர்த்தி வேறு தேவை இல்லாத இடத்தில் எல்லாம் பின்னணியில் பேசிக் கொண்டே இருக்கிறார் .
பிளாஷ்பேக்கில் நாயகனின் அண்ணனாக நடிக்கும் ஒருவர், அடிவாங்கி அழ வேண்டிய காட்சியில் எல்லாம் அப்பட்டமாக சிரிக்கிறார் .
காளி வெங்கட் சம்மந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் யூ கே ஜி பிள்ளைகளும் யூகித்து விடும் ரகம்
அப்படி ஒரு வில்லங்கமான ரகசிய மனுவை காளி வெங்கட் தானே எடுத்துக் கொண்டு போகாமல் அதே ஊரைச் சேர்ந்த படிக்கத் தெரிந்த நபரிடமே கொடுத்து அனுப்புவதும் , அதை கவரில் போட்டு ஒட்டிக் கூடக் கொடுக்காமல் அன் ரூல்டு பேப்பரை அப்படியே கொடுத்து அனுப்புவதும் போஜ்பூரி சினிமா கூட கொடுக்காத சோழா பூரி … இல்லை இல்லை பீலா பூரி
உற்சாகம் பாராட்டுக்குரியது .
ஆனால் உள்ளீடும் உருவாக்கமும் முக்கியம் இல்லையா ?