பொதுவாக சினிமாவில் நடிக்கும்போது கேரக்டராகவே வாழ்ந்தார் என்று சொல்வது உண்டு . ஆனால் நடிகர்களை கேட்டால் கமுக்கமாக சிரிப்பார்கள் . கேரக்டராக வாழ்கிறோம் பேர்வழி என்ற பெயரில் கற்பழிப்புக் காட்சியில் நடிக்கும் நடிகரோ , கொலை , தற்கொலைக் காட்சிகளில் நடிப்பவர்களோ களம் இறங்கி விட்டால் என்ன ஆவது ?
ஆக, நடிக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் யாரும் நடிக்க முடியாது . இதுதான் நிஜம் . இது பொதுவாக சினிமா உலகம் அறிந்த விஷயம்தான் .
ஆனால் படைப்பாளி ஒரு கேரக்டரை படைக்க அப்படியே ஆகிப் பார்க்கிறான் என்று வைத்து கதை பண்ணினால் எப்படி இருக்கும் ?
இயக்குனர் மிஸ்கினிடம் உதவியாளராக இருந்தவரும் பத்திரிக்கையாளருமான ஜெ. வடிவேல் இயக்க, இறைவன் பிலிம்ஸ் சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் தயாரித்திருக்கும் ‘கள்ளப் படம்’ படத்தின் விதை, இப்படி ஒரு கேள்வியில் விழுந்திருக்கலாம் ….
என்பது படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தபோது தெரிந்தது .
இது மட்டுமல்ல . சினிமா எடுப்பதைக் கதையாகக் கொண்ட இந்தப் படத்தின் முதன்மைத் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் அந்த பணிக்குரிய கதாபாத்திரத்திலேயே படத்தில் நடித்து இருக்கிறார்கள் . அதாவது படத்தின் இயக்குனர் வடிவேலு படத்திலும் இயக்குனராக நடித்து இருக்கிறார் . இது போலவே படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், படத்தொகுப்பாளர் வெங்கட் என்கிற காகின், இசையமைப்பாளர் கே ஆகியோர் படத்தில் முறையே ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர் , இசையமைப்பாளராக நடித்து இருக்கிறார்கள் .
படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் ஆடுகளம் நரேன் கூறுவது போல, உலகிலேயே இப்படி ஒரு அமைப்பு கொண்ட முதல் படம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் .
வடிவேல் விகடனில் பத்திரிக்கையாளராக இருக்கும்போது அங்கே புகைப்படக்காரராக இருந்தவர் ஸ்ரீராம் சந்தோஷ் . ஒரே அறையில் ஒன்றாக உடன் வசித்த நண்பர் கூட. வடிவேலு மிஸ்கினிடம் உதவியாளராக , ஸ்ரீராம் சந்தோஷ் பி.சி.ஸ்ரீராமிடம் ஒளிப்பதிவு உதவியாளராகப் பணியாற்றினார். இருவரும் இப்போது இணைந்து தத்தமது முதல் படம் காண்கிறார்கள். .
பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் வடிவேலு “நான் மிஸ்கின் சாரிடம் பணி புரிந்த படங்களில் நரேன் சார் நடித்தார் . அப்போது முதலே பழக்கம் . இந்தப் படத்தில் வரும் ஒரு தயாரிப்பாளர் கேரக்டருக்கு அவரை விட பொருத்தமான ஆளே கிடையாது. அப்படி சிறப்பாக நடித்து இருக்கிறார் .
அதே போல தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தலைவர் கவிதா பாரதியின் போட்டோக்கள் பார்த்து அவரை ஒரு கொடூரமான கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்தேன். நேரில் பார்த்தால் அவ்வளவு மென்மையான இனிய மனிதராக இருந்தார் . ஆனால் நடிக்கும்போது நான் எதிர்பார்த்ததை விட அசத்தி விட்டார் . நாயகி லக்ஷ்மி பிரியா ‘எவ்வளவு கான்ட்ரவர்சியான கேரக்டராக இருந்தாலும் நடிக்க தயார்’ என்றார் .
படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த் ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் நம்மூர்த் தமிழர் . படம் எடுக்க வந்த அவர் நினைத்தால், பெரிய நடிகர்கள் இயக்குனர்களிடம் போயிருக்க முடியும் . ஆனால் புதியவர்களான எங்களை நம்பிப் படம் தந்ததோடு நாங்களே நடிக்கும் புதிய முயற்சிக்கும் ஒத்துழைப்பு கொடுத்தார். அதை மறக்க முடியாது ” என்றார்.
ஆடுகளம் நரேன் ” என்னை படத் தயாரிப்பாளர் கேரக்டருக்கு வடிவேல் கேட்ட போது , ‘நான் முன்பே இந்தக் கேரக்டரில் சில முறைகள் நடித்த பின் மீண்டும் அதே கேரக்டரில் நடிக்க வேண்டுமா?’ என்று கேட்டேன் . ஆனால் அவர் கதையை சொன்ன பிறகு அசந்து போனேன். இந்த கேரக்டரை விடக் கூடாது என்று ரசித்து நடித்தேன் ” என்று லயித்துப் போய் பேசினார் .
கவிதா பாரதி தனது பேச்சில் ” இந்தப் படத்தில் நடித்தது மிகச் சிறந்த அனுபவம் . நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி சிறப்பாக எடுத்தார்கள் . அதே நேரம் ஒட்டு மொத்த யூனிட்டும் ஒரு குடும்பம் போல பாசாங்கு இல்லாமல் பழகியது அற்புதமான விஷயம் ” என்றார் .
“இந்த கேரக்டரை நான் ரசித்து ரசித்து எழுதினேன் ‘ என்று இயக்குனர் சொன்னது என்னை உற்சாகமாக தன்னமபிக்கையோடு நடிக்க வைத்தது” என்றார் லக்ஷ்மி பிரியா .
” நான் வடிவேலுக்கு இயக்குனராக வாய்ப்புக் கொடுத்தேன் என்பதை விட , அவர் எனக்கு தயாரிப்பாளராக வாய்ப்புக் கொடுத்தார் என்பதே சரி ” என்று தயாரிப்பாளர் ஆனந்த் பொன்னிறைவன் பேசியது பண்பின் உச்சம் !
படத்தில் வரும் ” வெள்ளைக்கார ராணி .. கொல்லி மலைத் தேனீ ” என்ற பாடல் மிஸ்கின் இயக்கத்தில் யுத்தம் செய் படத்தில் வந்த ” கன்னித் தீவு பொண்ணா ..” பாடல் போலவே எடுக்கப்பட்டு இருக்க, அது பற்றிக் கூறிய வடிவேலு ” என் குருநாதர் மிஸ்கின் இனி தனது படங்களில் பாடலே இருக்காது என்று கூறிவிட்டார் . ஆனால் அவரது இசை அறிவு அபாரமானது . எனவே ‘அவர் விட்டதை நாம் பிடித்துக் கொள்வோம் ‘ என்று அவருக்கு வணக்கம் செலுத்துவது போல அந்தப் பாடலை உருவாக்கி இருக்கிறேன் ” என்கிறார் .
படத்தில் ஒரு நிமிடம் மட்டுமே வரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்து இருக்கிறார் நடிகர் செந்தில் . அது என்ன கேரக்டர் என்பது சஸ்பென்சாம் !
பாடல்களையும் சிறப்பாக எடுத்து இருக்கும் வடிவேலு, முன்னோட்டத்தின் கடைசியில் கேமரா வழியே சமூகம் பார்த்து இப்படி சொல்கிறார் ” “சினிமாவுல எப்படி ஜெயிக்கறோம்னு எவன் பாக்குறானுங்க . ஜெயிக்கறமான்னுதான் பாக்குறானுங்க’
அந்த விஷயம் , அதில் வரும் வார்த்தைகள் , பயன்படுத்தப்பட்டிருக்கும் எழுத்துக்கள் சொல்கின்றன….. வடிவேலுவுக்குள் இருக்கும் தில்லும் தைரியமும் நல்ல கோபமும் கொண்டதொரு பத்திரிக்கையாளன் டூ திரைப் படைப்பாளியை !
விளைவு ? இருபதாம் தேதி வெளி வர இருக்கும் இந்தப் படத்துக்கு இப்போதே நல்ல எதிர்பார்ப்பு !