ஏற்கனவே இருக்கிற தொழில்களில் ஈடுபட்டு அதில் தன்னை தக்கவைத்துக் கொள்கிறவர்கள் பாராட்டுக்குள்ளாகிறார்கள். சாதனை படைப்பவர்களாக போற்றப்படுகிறார்கள்.
முன்னரே போடப்பட்ட சாலைகளில், பந்தயப் பயணத்தில் வெல்வது போன்ற இறுமாப்பு அது .
ஆனால் தன் பாதத்தை பதித்துப் பதித்தே ஒரு பாதையை உருவாக்கி , அந்த ஒற்றையடிப் பாதையை அகலமாக்கி, மண் பாதையாக்கி உள்ளூர் சாலையாக்கி மாநில நெடுஞ்சாலையாக்கி ,
அதை தேசிய நெடுஞ்சாலையாகவும் வளர்த்து விட்டு அதில் கடைசிவரை கம்பீரப் பயணம் செய்ததோடு ,
பலரும் அந்தப் பாதை மூலம் தன் வாழ்க்கைப் பாதையை வளமாக்கிக் கொள்ள காரணமாக இருப்பது எப்பேர்ப்பட்ட ஒரு சாதனை மற்றும் சேவை !
அப்பேர்ப்பட்ட சாதனைக்கு சொந்தக்காரர் மறைந்த கலை மாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன் .
ஆம் ! திரைப்படத் துறையில் பி.ஆர்.ஓ. என்கிற மக்கள் தொடர்பாளர் பணியை உருவாக்கி ஈடுபட்டு வழி நடத்தி வரலாறு படைத்த வரலாறாக விளங்கியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன்.
இவர் பிரபல பத்திரிகை தொடர்பாளர் டைமன்ட் பாபுவின் தகப்பனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்த்திரைப்படத்துறையின் வரலாற்றை அரும்பாடுபட்டு ஆவணப்படுத்தி வைத்தவர் அவர் .
பள்ளி நாட்களில் நாடகங்களில் நடிப்பது கதை வசனம் எழுதுவது என்றிருந்த இவருக்கு சிறுவயது முதல் புகைப்படம் எடுக்கும் ஆர்வம் அதிகம் .
அந்த வகையில் இவரே திட்டமிட்டு இரட்டைவேடப் புகைப் படம் ஒன்றை பாக்ஸ் கேமிராவில் எடுக்க,
இதைக்கண்ட கலைவாணர் என்.எஸ்.கே.யின் ஒளிப்பதிவாளர் சி.ஜெ.மோகன், ஒளிப்பதிவு செய்யும் கலையை ஆனந்தனுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.
அவர் கூறிய யோசனைப்படி விலையுயர்ந்த ஸ்டில் கேமிராவை வாங்கி படங்கள் எடுக்க ஆரம்பித்தார் ஆனந்தன்
இதன் வளர்ச்சியாக 1954ல் பிலிம்சேம்பர் பத்திரிகைக்காக ஸ்டுடியோவில் நடக்கும் படப்பிடிப்பை பற்றிப் செய்தி சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்டு திரைக்கலைஞர்களை கேமராவில் படம் பிடித்தார்
பராசக்தி படத்துக்கு நடிக்க வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனை முதன் முதலில் பேட்டி எடுத்து பிரசுரித்த பெருமைக்குரியவர் இவர்
கல்லூரித் தோழன் சி.டி.தேவராஜன் நடத்தி வந்த பிலிம் நியூஸ் என்ற பத்திரிகையில் இவர் எடுத்த படங்கள் வெளிவந்தன. இதனால் ஆனந்தன், பிலிம் நியூஸ் ஆனந்தனாக மாறினார்
அடுத்து நடிகர் சங்கத்தின் நடிகன் குரல் பத்திரிகையின் போட்டோ – ஜர்னலிஸ்ட் – ஆக மாறினார். .
அதன் ஆசிரியர் வித்வான் வே.லட்சுமணன், நடிகன் குரலின் பதிப்பாளர் என்ற முறையில் எம்.ஜி.ஆர். அவர்களை தினமும் சந்திப்பார். அவருடன் ஆனந்தனும் போவார்
1958 எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் படம் தயாரித்துக் கொண்டிருந்த நேரம் . அப்போது அலுவலக மேளாளராக இருந்தவர் திரு. ஆர்.எம்.வீரப்பன் அவரது மேஜையில் நாடோடி மன்னன் பட ஸ்டில்கள் இருந்தன.
பத்திரிகைகளுக்கு விளம்பர ஏஜெண்ட் மூலமாகத்தான் ஸ்டில்கள் அனுப்புவது அந்நாளைய வழக்கம்
“ஐயா, பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா” – என்று ஆனந்தன் கேட்க
“பத்திரிகைகளில் ஸ்டில் வரவேண்டும், இதை யார் கொடுத்தால் என்ன? நீங்களே கொடுங்களேன்” – எனக் கூறி ஸ்டில்களை ஆனந்தனிடம் கொடுத்தார்.ஆர் எம் வி
அடுத்த வாரமே எல்லா பத்திரிகைகளிலும் நாடோடி மன்னன் ஸ்டில்கள் ஜொலிக்க ஆரம்பித்தன. ஆனந்தனை எம்.ஜி.ஆர். சந்தோஷமாகப் பாராட்டினார்.
பத்திரிகை/ பொதுஜன தொடர்பாளர்கள் – அதாவது press /public relations officer — P.R.O. –என்ற புதிய தொழில் ஆரம்பமாவதற்கு காரணமானது இந்த சம்பவம் தான்.
இப்படியாக இவர் உருவாக்கிய பி ஆர் ஓ என்ற தொழில் இன்று, இந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு தொழிலாக விளங்குகிறது .
புகைப்படக் கலையில் இவருக்கு இருந்தது ஆர்வம் . பத்திரிக்கையாளராகப் போனது தொழில் . பி ஆர் ஓ தொழிலை உருவாக்கியது சாதனை.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட , ஒட்டு மொத்த தமிழ் சினிமா பற்றிய தகவல்களை புகைப்படங்களை அவனப் படுத்தினரே அதுதான் இவரது கலைக் காதலின் சிகரம் .
இன்று இருக்கிற வசதிகளுக்கு ஒரு புகைப்படத்தையோ தகவல்களையோ ஆவணப்படுத்த ஆயிரம் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் உண்டு . ஆனால் எழுபது ஆண்டுகளுக்கு முன் அப்படி அல்ல .
டிரங்குப் பெட்டியில் போட்டு பூட்டி வைத்தலும் கொட்டும் மழை காலத்தில் காற்றில் கலக்கும் ஈரம் இரும்புப் பெட்டியையும் குளிர்ச்சியாக ஊடுருவி மீண்டும் நீர்த்திவலையாகி இறங்கி,
உள்ளே உள்ள புகைப்படங்களை பதம் பார்க்கும் .
எங்கிருந்து உருவகித் தொலைக்கிறதோ என்று தெரியாத கரையான் எல்லாவற்றையும் செதில் செதிலாய் செல்லரிக்கும் .
அப்படிப்பட்ட அந்தக் காலத்தில் தமிழ் சினிமா பற்றிய புகைப்படங்களை , இதழ்களை , விவரக் குறிப்புகளை , ஒரு தவம் போல ஆவணப்படுத்தினாரே, அதுதான் மாபெரும் சாதனை.
அவரை அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்கும் நினைவுண் கூறும் சாதனை .
திரைப்பட நிகழ்ச்சிகளில் அவரை சந்திக்கும்போது, குறிப்பிட்ட படம் பற்றிய விவரமும் புகைப்படங்களும் வேண்டும் என்று ஒரு முறை சொல்லிவிட்டால் போதும் . சொன்னபடி எடுத்து வைப்பார் .
அது செல்போன் , இன்டர்நெட் இல்லாத காலம். மெயில், மெசேஜ் வாட்ஸ் அப் என்று நினைவூட்டல் அனுப்ப முடியாத காலம் . போனிலும் காலர் ஐ டி இல்லாத காலம் .
நாம் போன் செய்யும் நேரம் அதை எடுத்துப் பேச முடியாமல் போனால் போச்சு.! யார் என்ன விவரத்துக்காக அழைத்தார்கள் என்று அவருக்கு தெரிய வாய்ப்பு இல்லை .
மறுபடி மறுபடி அழைக்க நமக்கும் சங்கடமாக இருக்கும் . அது போன்ற சமயங்களில் அவர் வீட்டுக்கு நம்பிப் போகலாம். கண்டிப்பாக நாம் கேட்டதை எடுத்து வைத்து இருப்பார் .
எப்படி ?
ஒரு வாரம் முன்பு எங்கோ அவரை சந்தித்தபோது சொன்னோமே… அன்று இரவே எடுத்து வைத்து விட்டுத்தான் படுக்கப் போயிருப்பார். அதுதான் ஆனந்தன் .
மழைக்காலம் முடிந்து வரும் குளிர் வெய்யில் காலங்களில் அவர் வீட்டுக்குப் போனால் வாசல் எங்கும் புகைப்படங்களை, தகவல் தாள்களை, பத்திரிகை பிரதிகளை, இளம் வெயிலில் காய வைத்துக் கொண்டு,
காதலோடு அமர்ந்திருப்பார் . ‘இது எல்லாம் வீணா அழிஞ்சிடுமோன்னு பயமா இருக்கு சார் ‘ என்று பதட்டப்படுவார்.
அவர் முகத்தில் ஒரு புண்னகை எப்போதும் உறைந்து இருக்கும் . வாங்கிச் சென்ற போட்டோக்களை சொன்னபடி திருப்பித் தராதவர்களைத் திட்டும்போதும்,
வார்த்தைகளுக்கு இடையே அமைதி வரும்போது, அந்த புன்னகை சரியாக அங்கு வந்து உட்காரும் .
முதுமை தன்னை முழுசாக ஆக்கிரமிக்கும்வரை அந்தப் பணியை காதலோடு செய்தவர் அவர் .
ஒவ்வொரு வருடத் துவக்கத்தின் போதும் , முந்தைய ஆண்டு வந்த படங்களின் பட்டியலை சேகரித்து தன் சொந்த செலவில் சிறு கையேடாக அச்சடித்து,
அதைக் கொண்டு வந்து பத்திரிக்கையாளர்களுக்கு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் . சென்ற ஆண்டுவரை அதை செய்தார் .
அதை விநியோகிக்கும்போது அவர் முகத்தில் இருக்கும் மகிழ்வும் பெருமிதமும் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒன்று .
ஏனென்றால் , பி ஆர் ஓ தொழில் என்பது அவர் பெற்ற முதல் குழந்தை . அவருக்கு டைமண்ட் பாபு எல்லாம் அப்புறம்தான் .
மாண்புமிகு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழக அரசின் முழு நிதி உதவியுடன் “சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு” நூல் தயாரித்தார்
சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது வழங்கப்பட்ட போது “சாதனை மலர்” தயாரித்தார் (1995).
திரைக்கலைஞர்கள் விலாசங்கள் கொண்ட ‘திரைக்கலை தொகுப்பு’ – நூல் தயாரித்தார் (1978).
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதி அன்று ‘திரைப்பட புள்ளி விபரம்’ – என்ற பெயரில் திரைஉலகினருக்கும்,
பத்திரிகைகளுக்கு உபயோகப்படும் வகையில், 1954 முதல் ஆண்டு அறிக்கை நூல் இலவசமாக தொடர்ந்து வழங்கி வந்தார்
திரை நட்சத்திரங்களின் 100-வது படம் வெளிவரும்போது, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, கமல்ஹாசன் சிவக்குமார் ஆகியோருக்கு ஆல்பம் தயாரித்தார்
கமலின் 200வது படமான ஆளவந்தான் படம் வெளியிட்ட அன்று பட ஆல்பம் நூல் தயாரித்தார் (2001).
சிவாஜியின் 150 படமான சவாலே சமாளி படம் வெளியான போது மலர் வெளியிட்டார் (1971).
கலைஞர் சின்ன அண்ணாமலை அவர்களுக்காக ‘நடிகர் திலகம்’ – என்ற பெயரில் புகைப்பட ஆல்பம் நூல் தயாரித்தார் . இது பெருந்தலைவர் காமராஜரால் 1969ஆண்டு வெளியிடப்பட்டது .
“நெஞ்சில் நிலைத்து நின்று, நினைவை விட்டு அகலாத கவிஞர்களின் திரை இசைப்பாடல்கள்” – என்ற பெயரில் கவிஞர்களின் ஒரு பாடல் தொகுப்பு நூல் ஒன்றை தயாரித்தார் (2008).
திரை உலகம் 50 ஆண்டை முன்னிட்டு, இவரது புகைப்படக் கண்காட்சி 10 நாட்கள் நடத்தப்பட்டது. சாதனைகள் செய்த கலைஞர் 10 பேரை கௌரவப்படுத்தப்பட்டனர்.அதில் ஐவரும் ஒருவர் (1981)
தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சியில், இவரது தொகுப்புகளின் சினிமா உலக கண்காட்சி தொடர்ந்து மூன்று முறை சென்னையில் நடத்தப்பட்டு மூன்றாண்டும் சிறந்த அரங்குக்கான விருது கிடைத்தது.
மதுரை சுற்றுலா பொருட்காட்சியில் இவர் சினிமா உலக கண்காட்சி நடத்தி, அங்கும் சிறந்த அரங்குக்கான விருது கிடைத்தது.
உலகப் படவிழாவின் போது இவர் தந்த ஆவணனகழலி வைத்து தெலுங்கு, மலையாளப்பட கண்காட்சி முறையே ஹைதராபாத்திலும் திருவனந்தபுரத்திலும் நடத்தப்பட்டது.
இவர் தந்த படங்களை மட்டுமே வைத்து என்.டி.ஆரின் படக் கண்காட்சி ஹைதராபத்தில் ஆந்திரா பிலிம் சேம்பர் சார்பாக நடத்தப்பட்டது.
கமல்ஹாசன் பிறந்த நாளில் இவர் தந்த விவரங்களின் மூலம் மூன்று முறை கண்காட்சி நடத்தப்பட்டது.
தெலுங்கு திரைப்பட வைர விழாவின் போது தெலுங்கு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக சென்னையில் கண்காட்சி நடத்தப்பட்டதும் அப்படியே .
திரைப்பட நடிகைகள் அஞ்சலி தேவி, ஜமுனா-வாணிஸ்ரீ ஆகியோரில் வெள்ளி விழாவின் போது ஹைதராபாத்தில் இவர் மூலம் புகைப்படக் கண்காட்சிகள் நடத்தப்பட்டன.
CINEMA TODAY சார்பில் “78 ஆண்டு தமிழ் சினிமா கண்காட்சியை நடத்தினர்
இவர் வாங்கிய பட்டங்கள்
1) ‘கலைமாமணி – தமிழக அரசு (1991)
2) ‘கலைச் செல்வம் – நடிகர் சங்கம்(1997)
3) ‘திரைத்துறை அகராதி’ – கண்ணதாசன் மையம்
4) ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ – ராஜபாளையம் ரசிகர் மன்றம்
5) ‘1997- ம் ஆண்டின் சிறந்த மனிதர்’விருது அமெரிக்காவில், வடக்கு கெரோலினா சர்வகலாசாலை வாழ்க்கை வரலாறு கழகம் – வழங்கியது.
6) தெலுங்கு தயாரிப்பாளர் வெங்கண்ணசௌத்ரி “கலா பீடம்” விருது(1986)
7) காமராஜர் தேசிய சங்கம் “செய்தி சிகரம்”
8) “கலை மூதறிஞர்” – விருது (ராஜ்கதிரின் கலாலயா)
9) தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கம் “கௌரவ இயக்குனர்” விருதினை வழங்கி கௌரவித்தனர் (1989).
10) ‘நடமாடும் திரையுலகக் கலைக்களஞ்சியம்’ – சிவக்குமார்
11) ‘சினிமா செய்தி தந்தை’ – மௌலி
12) திரையுலக உ.வே.சா. – யூகி சேது
இவர் பெற்ற விருதுகள்
1. அஞ்சலி தேவியை தலைவராகக் கொண்ட வி.நாகையா நினைவு சாதனையாளர் விருது(2008).
2. லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் விருது
3. சென்னை மவுண்ட் ரோட்டரி கிளப் சிவாஜி விருது
4. புதுக்கோட்டை ரோட்டரி கிளப்
“Vocational Award ”2003
5. எனது 61-வது பிறந்த நாளை திரைஉலகம் சிறப்பாக நடத்தியது (1990)
6. தமிழக அரசு நடத்திய “நட்சத்திர இரவு” சிறப்பாக நடைபெற உதவியதற்காக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களால் மோதிரம் அணிவிக்கப்பட்டது.
7. சிறந்த பி.ஆர்..ஓ விருது – தமிழ்நாடு டி.வி.பார்வையாளர் சங்கம்.
* 1989 -ல் திரைஉலக 75 ஆண்டு வைர விழவில் “அகில இந்திய சாதனை புரிந்தவர்கள் ” என்ற முறையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை 75 பேரில் ஒருவராக தேர்ந்தெடுத்து கௌரவித்தது.
* 2002 -ல் பிலிம்நியூஸ் ஆனந்தன் 52 ஆண்டுகளாக சேகரித்து வைத்திருந்த திரைசம்மந்தப்பட்ட கலை பொக்கிஷங்களை தமிழக அரசு அரசுடமை ஆக்கிக் கொண்டது,
அவைகளை வைத்து நிரந்தர கண்காட்சி ஒன்றினை அமைக்க திட்டம் வகுத்துள்ளது.
சாதனையாளர் விருதுகள்
1. எஸ்.எஸ்.வாசன் விருது – எல்.வி.பிரசாத் விருது
2. சிவாஜி விருது – எம்.ஜி.ஆர்.சிவாஜி அகாடமி விருது(2003)
3. மெகா பைன் ஆர்ட்ஸ் எம்.ஜி.ஆர் விருது
4. மதி ஆர்ட்ஸ் அகாடமி காமராஜர் விருது
5. ஃttN விருது(2004)
6. வெரைட்டி பிலிம் விருது(2008)
7. சினிமா ரசிகர் சங்கம்- விருது மூன்று முறை 1980; 1988; பொன் விழாவில் 1995.
8. வல்லமை தாராயோ- இயக்குனர் மதுமிதா நடத்திய பாராட்டு விழா(2008)
9. ஸ்ரீ ராமானுஜர் டிரஸ்ட் விருது (2008)
10. வி.4 விருது
11. ஓம் சக்தி அகாடமி (பொன் விழாவில் விருது)
12. தமிழக அரசின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்ட “சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு ”தயாரித்தற்காக, சென்னை சினிமாரசிகர்கள் சங்கமும், தமிழ்நாடு திரைப்பட வரலாறு” தயாரித்தற்காக,
சென்னை சினிமா ரசிகர்கள் சங்கமும், தமிழ்நாடு டி.வி.பார்வையாளர் சங்கமும் இணைந்து, விழா எடுத்து கௌரவித்தது.
13. ஜெய்சங்கர் அவர்களால் கீழ்பாக்கம் உடல் ஊனமுற்றவர்கள் இல்லத்தில் கௌரவிக்கப்பட்டார்.
14. வி.ஜி.பி.- தம்ஸ் அப் – அஜந்தா
15 அம்பத்தூர் கலைக்கழகம்
16. ரைசிங் ஸ்டார் பிலிம் விருது(2008).
17. சிவாஜி – பிரபு அறக்கட்டளை சார்பில் சிவாஜி கணேசன் பிறந்த நாளில் கௌரவிக்கப்பட்டார் (2008).
18. CINEMA TODAY சார்பாக விருது (2007)
பத்திரிகைகள் விருது
1. சினிமா எக்ஸ்பிரஸ் விருது
2. தமிழ் மூவிஸ் விருது
3 தினகரன் விருது
4. விக்டரி சினிமா டைரி விருது
5. ரைசிங் ஸ்டார் விருது
6. ஹதராபாத் பிலிம் கிளப் வெள்ளி விழா ஆண்டு விருது
7. தமிழக அரசின் “கலைமாமணி” விருது பெற்றதர்க்கு பாராட்டு விழா
8. சென்னையில் 75 ஆண்டு தெலுங்கு சினிமா கண்காட்சி நடத்தியமைக்கு, தெலுங்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் பாராட்டு விழா
9 சூப்பர் சினிமா – வெரைட்டி சினிமா விருது(2008).
டி.வி.சேனல் விருது
1) விஜய் டி.வி.(சாதனையாளர் விருது) (2008)
2) ராஜ் டி.வி.“75 ஆண்டு திரை உலகம் விருது (2008)
3) இந்து டி.வி.(2008)
அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய www.nammatamilcinema.in பிரார்த்திக்கிறது