கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, கலையரசன், ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், நடன இயக்குனர் சாண்டி , அம்மு அபிராமி, ஜனனி , சுபாஷ், சோபியா ஆகியோர் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் .
திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரிடம் ( படத்தின் தயாரிப்பாளர் பாலாமணி மார்பனே ) இயக்குனர் ஒருவர் ( இயக்குனர் கார்த்திக் விக்னேஷே) கதை சொல்ல வருகிறார் . பத்து நிமிடம் மட்டுமே கொடுக்கிறார் தயாரிப்பாளர் . எனவே இம்ப்ரெஸ் செய்வதற்காக , காதல் ஜோடி ஒன்று ( ஆதித்யா பாஸ்கர் – கவுரி கிஷன்) கல்யாணம் செய்து கொள்ள வரும் நிலையில் ஆண் பெண் கழுத்தில் தாலி கட்டுவதற்குப் பதில் , பெண் ஆண் கழுத்தில் தாலி கட்டுகிறது . அதன் பின்னர் பெண் செய்யும் வேலைகளை எல்லாம் ஆண்கள் செய்வது போல அந்தக் கதை விரிகிறது .
அடிமைத்தனத்தில் இருந்து விடுபடத் தவிக்கும் பெண்களின் மனக் குமுறலுக்கு மருந்தாக இந்தக் கதை இருக்க, மேற்கொண்டு தயாரிப்பாளர் கதை சொல்லச் சொல்கிறார்.
அங்கேதான் ஆரம்பிக்கிறது படத்துக்கும் படம் பார்ப்பவருக்கும் ஒரு வில்லங்கம்.
சாண்டி மாஸ்டர் – அம்மு அபிராமி இடையே வரும் இரண்டாவது கதை சகோதர சகோதரிக்குள் காதல் , பாலியல் உறவு பற்றிய சிந்தனை என்ற அதிர வைக்கும் பாதையில் போகிறது . வீண் பரபரப்புக்காகவே சொல்லக் கூடாத ஒன்றை சொல்லும் கதை என்பதால் , அந்தக் கதையை படத்தில் முடிக்காமலே விடுகிறார்கள் . இந்தக் கதையாவது பேச்சு என்ற ரீதியில் மட்டும் போகிறது
ஆனால் அடுத்த கதை படு கேவலம் .
அலுவலகத்தில் டாய்லெட்டில் சுய இன்பம் செய்யும் இளைஞன் ஒருவனுக்கு ( சுபாஷ்) விஷயம் வெளியே தெரிந்ததால் வேலை போகிறதாம். வேறு வேலையே கிடைக்கவில்லையாம். அதனால் அவன் ஆண் பாலியல் தொழிலாளி ஆகிறானாம். . அவன் காதலிக்கு (ஜனனி) அது தெரிய வர, “சேச்சே.. அது வேலை .ஆனால் காதல் எப்போதும் உன்னிடம்தான் “என்று அவன் கூற, காதலி பதிலடியாக எடுக்கும் முடிவு …
என்ற ரீதியில் இந்தக் கதை முடிந்து இருந்தால் கூட போனால் போகுது என்று விட்டிருக்கலாம் .
மேற்படி நபர் புதிய பெண் கஸ்டமருக்காக பாலியல் தொழிலுக்குப் போக, அங்கே அறையில் அவன் அம்மாவே….! நல்லவேளை அந்த இடத்தில் ஒரு காரணம் சொல்லி மாற்றி விட்டாலும் அந்த சூழலை வைத்து … இருவரும் பேசும் விஷயங்கள்…. அந்த அம்மா மகனை இணைத்து மற்றோரால் பேசப்படும் வசனங்கள் ஆபாசம் ,அருவருப்பு , கேவலத்தின் உச்சம் .
பொதுவாக ஒரு நல்ல படைப்பாளியின் படத்தை அவனது வீட்டில் உள்ள அக்கா, தங்கை , அம்மா எல்லாம் சேர்ந்து பார்ப்பதும் அந்த படைப்பாளியின் திறமையில் பெருமைப் படுவதும் ஒரு சிறந்த அனுபவம் . ஆனால்.. சரி, அதைநம் வாயால் சொல்ல வேண்டாம்.
ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி முடிந்த ஒருவன் கடைசியில் போலிக் கண்ணீர் விட்டு வேடம் போடுவது போல, நான்காவது கதையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் காட்சிகள், வயதுக்கு மீறி அவர்கள் பேசும் பேச்சுகள், போடும் ஆட்டங்கள் , வயதுக்கு மீறிய விஷயங்கள் அவர்களுக்குத் தெரிய வருவது உட்பட – அவர்களுக்கு நடக்கும் மனம் மற்றும் உடல் ரீதியான சித்திரவதைகளை விபரீதங்களைச் சொல்கிறது .

அதிலும் அவர்கள் காட்டும் ரியாலிட்டி ஷோ அடப் போங்கப்பா என்றுதான் சொல்ல வைக்கிறது.
எனினும் குழந்தைத் தொழிலாளிகளை வேலைக்கு வைப்பது குற்றம் எனில் , இவை குற்றம் இல்லையா? வயதுக்கு ஒவ்வாத காட்சிகளில் குழந்தைகளை பேசவும் நடிக்கவும் வைப்பது என்ன நியாயம்? என்ற சிறப்பான கேள்வியைக இந்தக் கதை கேட்கிறது . இந்த அளவுக்காவது இவர்களுக்கு மனசாட்சி இருக்கிறதே என்ற உணர்வு ஏற்படுகிறது .
உண்மையில் இந்த நான்காவது கதை மட்டுமே முழுக்க முழுக்க பாராட்டுக்குரியது . முதல் கதையின் முதல் நோக்கம் பரபரப்பு என்றாலும் அது கூட நல்லபடியாகவே முடிகிறது .
ஆனால் ஒரு படத்தில் பரபரப்புக்காகவே அண்ணன் தங்கை காதல், குரங்குகளில் சகோதர சகோதரிக் குரங்குகளே செக்ஸ் வைத்துக் கொள்ளுமாம் என்ற உலக மகா முக்கியத் தகவல், தாய்க்கும் மகனுக்குமான பாலியல் தொடர்பான நிகழ்வுகள், இதை எல்லாம் ஒருவர் காட்சிப்படுத்துகிறார் என்றால் என்ன அர்த்தம்?
முறையற்ற – அருவருப்பான – கேவலமான விசயங்களை கொஞ்ச கொஞ்சமாகப் பொது வெளியில் பேசிப் பேசி , (”அதான் ஒன்னும் நடக்கல இல்ல.. பேசத்தானே செஞ்சாங்க” என்ற கேடுகெட்ட வாதம் வேறு வரும்) ஒரு நிலையில் அதை சகஜமாக்கி, பின்னர் அப்படி நடப்பது ஒன்றும் குற்றமில்லை என்ற மன நிலையை ஏற்படுத்தும் கேடுகெட்டத்தனம் அன்றி ஒரு வேறென்ன? இதற்கு எதற்கு சினிமா எடுக்க வேண்டும்?
சதீஷ் ரகுநாதன் , வான் இவர்களின் பின்னணி இசை பாடல் இசை இரண்டும் நன்றாக இருந்தும், கோகுல் பினாயின் ஒளிப்பதிவு ஒவ்வொரு கதைக்கும் வேறு வேறு மாதிரி வித்தியாசப்பட்டு இருந்தாலும் , ஒரே மாதிரி வடிவத்தில் ஆரம்பம் முடிவு என்று போகும் கதைகளும் நீளமான காட்சிகளும் சோதனைதான் .
சாப்பாடு விற்க நினைத்தால்தானே தரம் பற்றி யோசிக்க வேண்டும். சாராயம் விற்கிறோம் என்று ஆனபிறகு எப்படி இருந்தா என்ன? எப்படி இருந்தாலும் குடிக்க வருவான் என்று நினைத்து இருப்பார்கள் போல .
விசத்தை இனிப்பில் கலந்து குடிக்க வைத்துக் கொல்வதுதான் வஞ்சகத்தின் உச்சம் . இந்தப் படமும் அப்படி ஒரு வஞ்சக உச்சம்தான் . முதல் கதையும் நான்காவது கதையும் இனிப்பு . இரண்டாவது மூன்றாவது கதைகள், பக்குவமும் தெளிவும் இல்லாத இளம் ரசிகர்களின் மனதையும் அவர்களது குடும்பத்தின் வருங்கால நிம்மதியையும் துடிக்கத் துடிக்கக் கொல்லும் ஆலகால விஷம் .
இது போன்ற படங்களை ஆந்தாலாஜி என்று சொல்வதை விட அருவருப்பான வாந்தியாலஜி என்று சொல்வதே சரி
ஹாட் ஸ்பாட்… கேன்சர் ட்ரேஸ்.