சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தரும் பசங்க புரடக்ஷன்ஸ் சார்பில் பாண்டிராஜும் தயாரிக்க, சிம்பு , நயன்தாரா , சூரி மற்றும் கவுரவத் தோற்றத்தில் சந்தானம் ஆகியோர் நடிக்க ,
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி வெளியிட , ஆர் பாண்டிராஜ் எழுதி இயக்கி இருக்கும் படம் இது நம்ம ஆளு .
டி. ராஜேந்தரின் இளைய மகனும் சிம்புவின் தம்பியுமான குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகும் இந்தப் படத்தின் ஒலி நாடா உரிமை ஒன்றரை கோடிக்கு விலை போயிருக்கிறது என்று சொல்கிறார்கள் .
படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வரும் நிலையில், படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை,
சிம்புவின் பிறந்த நாளான மூன்றாம் தேதி மாலை டி ராஜேந்தர், மற்றும் குறளரசன் இருவரும் நடத்தினர் .
நிகழ்ச்சியில் புலி படத் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், இது நம்ம ஆளு படத்தின் விநியோகஸ்தர் காஸ்மோஸ் சிவகுமார், தயாரிப்பாளர் மன்னன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
சிம்புவின் பிறந்த நாளை ஒட்டி ராஜேந்தர் , குறளரசன் இருவரும் கேக் வெட்டினார்கள் .
நிகழ்ச்சியில் பேசிய டி ராஜேந்தர் ,” சிம்பு பிறந்தநாளில் ‘இது நம்ம ஆளு’ படத்தின் பாடல்களை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இப் படத்தில் யுகபாரதி, மதன் கார்க்கி , சிம்பு ,குறளரசன் ஆகியோர் பாடல்களை எழுத
சிலம்பரசன் , யுவன் ஷங்கர் ராஜா , .ஸ்ருதிஹாசன் , குறளரசன் ஆகியோர் பாட ஐந்து பாடல்களை குறளரசன் தன் இசையில் வழங்கி இருக்கிறார். நானும் ஒரு பாடல் பாடியிருக்கிறேன்.
எனது ஒருதலை ராகம் படம் , ஐ யாம் எ லிட்டில் ஸ்டார் என்று சிம்பு ஆடிப் பாடிய சம்சார சங்கீதம் படம் , ஏ ஆர் ரகுமான் அறிமுகமான ரோஜா ஆகிய படங்களின் பாடல் உரிமையைப் பெற்ற,
கைராசி மிக்க லகரி நிறுவனம்தான், இந்தப் படத்தின் பாடல்களையும் நல்ல விலைக்கு வாங்கி இருக்கிறது.
சிம்புவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய போதும், கதாநாயகனாக அறிமுகப்படுத்திய போதும் நீங்கள் கொடுத்த ஆதரவை போல,
இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் குறளரசனுக்கும் ஆதரவு தரவேண்டும்.
இப்படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட இருக்கிறது. ஒரு பாடலை ஆண்ட்ரியாவை வைத்தும் மற்றொரு பாடலை பிரம்மாண்டமாகவும் படமாக்க இருக்கிறோம்.
மார்ச் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். சமீபத்தில் வந்திருக்கும் பிரச்சினைகள் எல்லாவற்றையும் சட்டப்படி எதிர் கொளவோம் .இறைவன் அருளால் வெல்வோம்.’
விரைவில் படம் சம்மந்தமான ஒரு நிகழ்ச்சியில் சிலம்பரசன் உங்கள் அனைவரையும் சந்திப்பார் ” என்றார் .
கன்னிப் பேச்சை நிகழ்த்திய குறளரசன் ” கடவுளுக்கு நன்றி . நான் இந்தப் படத்தின் இசை அமைப்பாளராகக் காரணமாக இருந்து ஆதரவையும் வழங்கிய என் அம்மா அப்பா அண்ணன் அனைவருக்கும் நன்றி .
பாடிக் கொடுத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி . இதன் இசைக் கோர்ப்பில் பங்கு பெற்ற அனைவருக்கும் உரிய அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளேன் .
இப்படத்திற்காக நிறைய டியூன்களை தயார் செய்தேன். அதில் சிறந்ததை தேர்வு செய்து இசையமைத்திருக்கிறேன்.
படப்பிடிப்புக்காக இந்தப் படத்தின் பாடல்களை நான் எப்போதோ இயக்குனர் பாண்டிராஜிடம் கொடுத்து விட்டேன். தாமதம் எல்லாம் செய்யவில்லை .
மற்றபடி அதன் பின்னர் நான் பாடல்களை மேம்படுத்திக் கொண்டுதான் இருந்தேன் .
அதற்குத்தான் ஒன்றரை வருடம் ஆனது . ஏனென்றால் டியூன் போடுவது பத்து நிமிடத்தில் போட்டு விடலாம் .
ஆனால் அதை முழுமையான பாட்டாக உருவாக்க பெரிய உழைப்பு வேண்டும் .
எனவே நான் தாமதம் செய்வதாக கூறுவது தவறு . என்ன இருந்தாலும் என்னை இசை அமைப்பாளராக ஏ பாண்டிராஜ் சாருக்கு நன்றி ” என்றார் .
படத்தில் சிம்பு எழுதி பாடிய ”பாட்டாக…..” என்ற பாடலை நிகழ்ச்சியில் ஒலிக்கச் செய்தார்கள் . மிக பிரம்மாதமாக இருந்தது .