சிம்புதேவனைக் குறிப்பிடாமல் புலியைப் பாராட்டிய ரஜினி : நியாயமா?

chimbu three

வெளியான ஆரம்பத்தில் புலி படம் நன்றாக இல்லை என்ற அதிர்ச்சிக்கு,  படம் பார்த்தவர்கள் ஆளானது உண்மைதான் . 

ஆனால் அந்த ஆரம்ப அலை முடிந்த பிறகு ஒரு தரப்பு , ”படம் ஃபேண்டசியா … நல்லாத்தானப்பே   இருக்கூ…” என்று சொல்ல ஆரம்பித்தார்கள் . இதற்கிடையில் புலி படத்தைப் பாராட்டி ரஜினியும் அறிக்கை விட்டார் 

“புலி படம் பார்த்தேன்.  எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது மிகவும் பாராட்ட வேண்டிய முயற்சி. படத்தில் வரும் பிரம்மாண்ட செட்டுகள் என்னை ரசிக்க வைத்தன. படத்தில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தன.  புலி படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக தயாரித்த புலி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.

விஜய்யின் நடிப்பு என்ன ஈர்த்தது. விஜய்யின் இந்த முயற்சியை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பு அற்புதமாக இருந்தது. ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இந்த படம் இருக்கிறது.  படம் ஆரம்பம் முதல் இறுதிவரை த்ரில்லிங்காக இருந்தது.

rajini vijay 2

குழந்தைகளுக்கான அத்தனை அம்சங்களும் உள்ள படம் குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டிய படம் புலி. Hats Off to the Puli Team.”என்பது அந்த அறிக்கையின் வரிகள் . 

பொதுவாக பெரிய நடிகர்கள் ஒரு சிறிய படத்தைப் பாராட்டும்போது இயக்குனரின் பெயரைக் குறிப்பிட்டுப் பாராட்டுவார்கள். குறிப்பாக ரஜினி அது போன்ற விசயங்களில் கவனமாக இருப்பார் . ஆனால் அப்பேர்ப்பட்ட ரஜினியின் இந்தப் பாராட்டில் இயக்குனர் சிம்புதேவன் பெயர் இல்லை . ஏன் ?

படத்தில் சிம்பு தேவன் சரியாக தனது பங்களிப்பைத் தரவில்லை என்று ரஜினி நினைத்து இருக்கலாம் . கதை திரைக்கதை வசனம் இயக்கம் போன்றவை நன்றாக இல்லை என்று எண்ணி,   சிம்புதேவன் பெயரை  ரஜினி தவிர்த்து இருக்கலாம் . 

அல்லது…….

 அவருக்காக எழுதித் தரப்பட்ட அந்தக் கடிதத்தை  ஜஸ்ட் ஒரு நிமிடம் பார்த்துவிட்டு,  ‘பாராட்டுக் கடிதம்தானே’  என்று கள்ளங் கபடில்லாமல் கூட கையெழுத்துப் போட்டு இருக்கலாம் 

rajini vijay

ஆனால் பெயரே தவிர்க்கப்பட வேண்டிய அளவுக்கு சிம்புதேவன் அவ்வளவு மோசமான படைப்பாளியா ? whom so ever it may concern. 

சிம்புதேவனின் இதுவரைக்குமான ஹிஸ்டரி என்ன ?

அவரது முதல் படமான இம்சை அரசன் 23 மூன்றாம் புலிகேசி,  உலக அளவில் இதுவரை எந்த இயக்குனரும் யோசித்துப் பார்க்காத ஒரு சப்ஜெக்ட் . வடிவேலுவுக்கே அவ்வளவு சிறப்பான காட்சிகள் வைத்த சிம்புதேவன்,  காமெடியிலும் கலக்கும் ஆக்ஷன் மாஸ் ஹீரோவான விஜய்க்கு எவ்வளவு யோசித்து இருப்பார் ? 

‘இல்லை இல்லை…… சிம்புதேவன் காமெடி ஹீரோவுக்குதான் லாயக்கு’  என்று வாதாடுகிறீர்களா?

  தப்பு !  

இம்சை அரசன் படத்திலேயே இன்னொரு  வடிவேலு கதாபாத்திரத்தை ஒரு நல்ல ஹீரோ கதாபாத்திரமாக உருவாக்கி அப்போதே ரசிகர்களை ஒத்துக் கொள்ள வைத்தவர் அவர் . கொஞ்சம் சொதப்பி இருந்தாலும் அந்தக் கேரக்டர் கோமாளிக் கூத்தாகப் போய் இருக்கும் . ஆனால் அதை அட்டகாசமாக உருவாக்கி வடிவேலுவை நல்ல ஹீரோவாக அந்தப் படத்திலேயே ஏற்றுக் கொள்ள வைத்தவர் சிம்புதேவன் . 

chimbu vijay 2

சிம்பு தேவனின் அடுத்த படம் அறை  என் 305 இல் கடவுள் . அந்த கதையின் தனித்தன்மை ஆகட்டும்…. அதில் ராஜேஷும் பிரகாஷ் ராஜும் விவாதிக்கும் கடவுள் பற்றிய கருத்துக்கள் ஆகட்டும்…. அட்டகாசமானவை . அவர்காளுக்கே அப்படி யோசித்தவர் விஜய்க்கும் ஸ்ரீதேவிக்கும் எப்படி எல்லாம் யோசித்து இருப்பார். ? 

அதே போல இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் லாரன்ஸையும் குதிரையையும் வைத்து எவ்வளவு வித்தியாசமான காட்சிகள் ஷாட்கள் …. !எவ்வளவு ஆழமான சட்டயர்கள் …..! ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படத்தின் நுண்மான் நுழைபுலங்கள் நிறைந்த படமாக்கல்… !

அவர்களுக்கே அவ்வளவு செய்தவர் விஜய்க்கு எவ்வளவு யோசித்து இருப்பார்.? ஆனால் புலி படத்தில் அப்படி எல்லாம் எதுவும் வரவில்லையே,  ஏன் ?

பொதுவாக தனித் தன்மை வாய்ந்த இயக்குனர்களும் மாஸ் ஹீரோக்களும் இணையும்போது, அந்தப் படம்  இயக்குனர் பாணிப் படமாக வர வேண்டுமா?அல்லது ஹீரோவின் ஸ்டைல் படமாக இருக்க வேண்டுமா என்ற தெளிவு வேண்டும் . புலியில் அது இல்லை.

chimbu vijay 3

ஆரம்பத்தில் அடியாளின் காலைப் பிடித்து விஜய் தொங்கும் காட்சி சிம்புதேவன் ஸ்டைல் காட்சி . ஆனால் அடுத்த காட்சியிலேயே அது திடீர் என்று விஜய் படம் ஆகிறது . அடியாளின் காலை விஜய் பிடிப்பது போல விஜய் படத்துக்கு காட்சி வைக்கலாமா என்று கேட்கலாம் .

அப்படி ஆரம்பிக்கும் படம் சிம்புதேவனின் ஸ்டைலிலேயே போனால்  எப்படி முடிந்திருக்கும்  என்பதைப் பொறுத்தே அது தவறா சரியா என்று  சொல்ல முடியும் . அது நடக்காத போது இப்போது அதைக் குறை சொல்வது மடமை . 

இப்படி,  துவக்கம் துவங்கி துவளும் வரை,  படம் யாருடைய பாணிப் படமாக வருவது என்பதில் குழப்பம் இருக்கிறது .அதுதான் படத்துக்கு எதிர்மறை விமர்சனங்களைக் கொடுத்து விட்டது. 

இந்த புரிதலோடு என்ன நடந்தது என்று விசாரித்தால்….  சிம்பு தேவனின்  கைகள் பெரிதாகக் கட்டப்பட்டன என்கிறார்கள், விஷயம் தெரிந்தவர்கள்.  

chimbu vijay

அவருக்கு விருப்பமில்லாத காட்சிகள் வசனங்கள் வலிந்து எடுக்க வைக்கப்பட்டன என்கிறார்கள்.  டப்பிங்கில் கூட இப்படி வசனங்கள் சம்மந்தமில்லாமல் சேர்க்கப்பட்டு இருக்கின்றன . (கத்தி படத்தை சம்மந்தப்படுத்தி வரும் வசனம் இதற்கு சாட்சி ).

”அப்படி ஹீரோயிசம் வேண்டும் . இப்படி காட்சி வேண்டும் . புகழ்மாலை வசனங்கள் வேண்டும்” என்று .. படத்துக்கான ‘மறைமுக டைரக்டர்கள்’ தொல்லை சிம்புதேவனுக்கு இருந்ததாம் . 

 இதுவரை இரண்டாம் நிலை ஹீரோக்களை வைத்து சிம்புதேவன் எடுத்த எந்தப் படத்திலும் கூட இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தது இல்லை . அதை வைத்துதான் சிரிக்க வைக்க வேண்டும் என்ற அளவுக்கு நகைச்சுவை பஞ்சம் கொண்டவர் இல்லை அவர் . 

ஆனால் மாஸ் ஹீரோ விஜய் நடிக்கும் இந்தப் படத்தில் – ‘குழந்தைகளுக்கான அத்தனை அம்சங்களும் உள்ள படம் குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டிய படம் ‘ என்று ரஜினியே பாராட்டி இருக்கும் புலி படத்தில் — அந்த இரட்டை அர்த்த வசன அதிர்ச்சி நமக்கு இருந்தது . சிம்பு தேவன் இதை விரும்பி இருப்பாரா ?

rajini vijay 3

டப்பிங்கில் கூட சரியான ஒத்துழைப்பு கொடுக்கப்படவில்லையாம் . படத்தில் வரும் ஒற்றைக் கண் அரக்கனுக்கு ‘மா முழியன்’ என்று நகைச்சுவைத் தமிழில் ஒரு பெயரை வைத்து இருப்பார். ஆனால் அதை யாருமே சரியாக உச்சரிக்காததால் பலருக்கும் புரியாமல் போய் விட்டது . 

இப்படி பல காரணங்களால் சிம்புதேவன் நினைத்தபடி படத்தை எடுக்க முடியாததுதான்  படத்தின் எதிர்மறை விமர்சனங்களுக்கு காரணம் என்கிறார்கள். 

விஜய் எந்தப் படத்துக்காக  நிறைய இழந்திருக்கிறார். பெரும்பணத்துக்கு பொறுப்பேற்று இருக்கிறார் . தவிர தயாரிப்பாளர் ஏ எம் ரத்னமும் படத்தின் வெளியீட்டுக்கு பண உதவி செய்து இருக்கிறார் . அதற்காக ரத்னத்துக்கு கால்ஷீட் தந்தும் இருக்கிறார் விஜய் . மறுப்பதற்கு இல்லை .. ஆனால் நிலைமைக்கு சிம்புதேவன்தான் காரணமா ? 

chimbu vijay 1

ரஜினி போன்ற ஒரு மாபெரும் சீனியர் நடிகர் ஒரு படத்துக்குக் கொடுக்கும் பாராட்டில் இயக்குனரின் பெயரையே குறிப்பிடாமல் இருக்கும்போது ஏதோ படத்தின் தோல்விக்கு இயக்குனர் மட்டுமே காரணம் என்பது போன்ற ஒரு தவறான கருத்து உருவாகும். 

ஒரு படம் கொண்டாடப்பட்டால் அந்த வெற்றியை  குதறிக் குதறி எல்லோரும் பங்கிட்டுக் கொள்வதும்  விமர்சிக்கப்பட்டால் யாராவது ஒரு அப்பாவியின் தலையில் கட்டிவிட்டு அவனை சிலுவையில் ஏற்றி விட்டு மற்றவர்கள் தப்பித்துக் கொள்வதும்….

 இனியாவது மாறவேண்டும் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →