திருக்குமரன் என்டர்பிரைசஸ் சார்பில் சி.வி.குமார் மற்றும் ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இணைந்து தயாரிக்க, விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் நடிக்க அறிமுக இயக்குனர் ரவிக்குமார் இயக்கி இருக்கும் படம் இன்று நேற்று நாளை. (என்னது? படத்தின் பெயரை தப்பா சொல்றோமா? இல்லீங்க படத்தின் பெயரே அதுதான் )இன்று காதல் நட்பு என்று வாழும் சிலர் டைம் மெஷின் ஏறி, நேற்றுக்கும் அதாவது பழைய காலத்துக்கும், நாளைக்கும் அதாவது இன்னும் பல வருடங்களுக்கு பிறகு இருக்கப் போகிற எதிர்காலத்துக்கும் போகும்போது என்ன நடக்கிறது என்ற அடிப்படையில், முன்னும் பின்னும் கதை பாயும் படம் இது .

அப்படி ஒருவர் டைம் மெஷின் ஏறி போகும்போது அந்த பழைய காலத்திலும் எதிர்காலத்திலும் இருக்கும் தன்னை (அதாவது பயணப்படுகிற மனிதர் அந்தக் கால கட்டத்தில் அங்கே இருக்கும் அதே மனிதரை) உரசி விடக் கூடாது என்பது ஒரு ஃபேண்டசியான விதி . அப்படி உரசும்போது என்ன நடக்கும் என்பதை சொல்வதே படம் கொடுக்கும் எதிர்பார்ப்பு .பழைய காலம் என்பதை சுதந்திரத்துக்கு முந்தைய கால கட்டம் என்றும் எதிர்காலம் என்பதை 2065 என்றும் ஃபிக்ஸ் செய்து கொண்டு குயிக்ஃபிக்ஸாக படத்தை எடுத்து அசத்தி இருக்கிறார்கள் .
அதற்கேற்ப படத்தின் முன்னோட்டம் வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது.

பழைய காலத்தில் சென்னையில் டிராம் வண்டி ஓடிய பாதை தெரிகிறது . காந்தி தாத்தா கையில் தடியோடு நடக்கிறார் . டைம் மெஷின் மூலம் அந்தக் காலக்கட்டத்தில் நுழைந்து விடும் விஷ்ணுவும் கருணாகரனும் தங்கள் நகையை ஒரு லேவாதேவிக்காரரிடம் (புரியல? பான் புரோக்கர் அதாவது அடகுக்கடைக்காரருக்கு அப்போதைய பெயர் அதுதான் ) அடகு வைக்கப் போகிறார்கள். நகையை எடை போட்டுக் கொண்டே பேசும் கடைக்காரர் “உங்களுக்கு புடிச்ச நடிகர் யாரு ? பாகவதரா ? சின்னப்பவா ?” என்று கேட்க, ” கருணாகரன் தன்னை மறந்து “எங்களுக்கு எப்பவுமே புடிச்சது ரஜினிதான் ” என்கிறார் . குழப்பமாக விழிக்கும் கடைக்காரர் “ரஜினியா ? அது யாரு? ஆங்கில நடிகரோ?” என்று வியக்கிறார்.
படத்தில் இந்த டைம் மெஷின் விஷயத்தை விளக்கும் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார் ஆர்யா .
படத்தின் இசை மற்றும் முன்னோட்ட விழாவில் இது பற்றிப் பேசிய நாயகன் விஷ்ணு ” இந்த மாதிரி ஒரு கெஸ்ட் ரோல்னு சொன்ன உடனே சம்மதிச்சு வந்து நடித்துக் கொடுத்தார் என் நண்பர் ஆர்யா ” என்று சந்தோஷப்பட்டார் .
“ஆரம்பத்தில் டைம் மெஷின் எப்படி இருக்கும் என்ன வடிவம்னே முடிவாகல , அந்த சீன்ல எல்லாம் ஃபிரேமில் இல்லாத டைம் மெஷினை, இருப்பது போல கற்பனை செய்து கொண்டு நடித்தது வித்தியாசமான அனுபவம் ” என்றார் .
“இந்தப் படம் எனக்கு முக்கியமான பாடம் . அதிக சிரத்தி எடுத்து டைம் மெஷினை வடிவமைத்தோம் ” — இது, கலை இயக்குனர் விஜய் ஆதிநாதன்
“இது எனக்கு மிக முக்கியமான படம் . நல்ல கேரக்டர் . நல்ல கதை . இதில் நடித்தது ரொம்ப சந்தோஷமான விஷயம் ” என்றார் மியா ஜார்ஜ்.
“டைம் மெஷின் பற்றிய படங்கள் நமக்கு புதிதல்ல . ஆங்கிலத்தில் நிறைய வந்துள்ளது . இந்தியப் படங்களிலும் வந்துள்ளது . ஆனால் அதை வைத்து எனக்குரிய பாணியில் கதை அமைத்து இயக்கி இருக்கிறேன் ” என்றார் இயக்குனர் ரவிகுமார் .
தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசும்போது “கதை பிடித்து இருந்தது . ஒரு நாள் கூட நான் படப்பிடிப்புக்குப் போனது இல்லை . முழு சுதந்திரம் கொடுத்தேன் . ” என்றார்.
என்றும் பெருமை தரும்படி வெல்லட்டும், இன்று நேற்று நாளை !