இஞ்சி இடுப்பழகி @ விமர்சனம்

inji 1

பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் அனுஷ்கா ஆர்யா இணைந்து நடிக்க, கே எஸ் பிரகாஷ்ராவ் இயக்கி இருக்கும் படம் இஞ்சி இடுப்பழகி . (நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  வாணி ஸ்ரீ நடித்து மாபெரும் வெற்றி பெற வசந்த மாளிகை படத்தை இயக்கிய கே எஸ் பிரகாஷ்ராவ் அவர்களின் பேரன்தான் இந்த பிரகாஷ் ராவ் . ஆம் ! இருவருக்கும் ஒரே பெயர்) இஞ்சி எப்படி ? இடுப்பு எப்படி ? பார்க்கலாம் .

சின்ன வயசு முதலே  ஜாங்கிரி உள்ளிட்ட பல ஸ்வீட் பிரியையாக வளர்க்கப்பட்டு,  பிரம்மாண்ட உருவத்தோடு இருக்கும் இளம்பெண்  ஸ்வீட்டி (அனுஷ்கா) !   தனது குண்டான உருவம் காரணமாக சமூகத்தால் பல புறக்கணிப்புகளுக்கு ஆளாகும் ஸ்வீட்டிக்கு,  கல்யாண விசயத்திலும் குண்டு உடல் ஒரு குறையாகவே இருக்கிறது . 
ஸ்வீட்டியின் அப்பா சிறு வயதிலேயே இறந்து விட்ட நிலையில் மகளுக்கு திருமணம் செய்து வைக்க போராடும் அம்மா ராஜேஸ்வரிக்கு (ஊர்வசி) , மகளின் கல்யாணம் தள்ளிப் போவது,  பெரும் கவலையாக இருக்கிறது. 
அந்த சமயத்தில் அழகான இளைஞன் அபி (ஆர்யா, ) தன் குடும்பத்தாரோடு ஸ்வீட்டியைப் பெண் பார்க்க வருகிறான். ஸ்வீட்டிக்கு அவனை மிகவும் பிடிக்கிறது . ஆனால் ‘எப்படியும் அவன் பெண் பிடிக்கவில்லை என்றுதான் சொல்லப் போகிறான்’ என்று எண்ணி , முந்திக் கொண்டு ”மாப்பிள்ளை பிடிக்கவில்லை” என்று அவளே சொல்லி விடுகிறாள் .
inji4
திருமணம் தடைபடுகிறது. எனினும் ஆங்காங்கே இருவரும் சந்தித்துக் கொள்ளும் சூழல் அமைகிறது. 
ஸ்வீட்டியின் தோழி ஒருத்தி நவீன முறையில் உடலை குறைக்கும் ஒரு சிகிச்சையில் பெரும் பணம் கட்டி சேர்கிறாள். ஆனால்  சிகிச்சை முறையால் தோழியின் சிறுநீரகம் பாதிப்படைகிறது . அந்த சிகிச்சை நிறுவன உரிமையாளரிடம் ( பிரகாஷ் ராஜ்) நியாயம் கேட்டுப் போகும் ஸ்வீட்டி  அவமானப் படுத்தப்படுகிறாள் . 
எனினும் தோழியின் சிகிச்சைக்கு பணம் சேர்க்கும்,  அதே நேரம் அந்த ஆபத்தான அந்த சிகிச்சை முறையையும் அம்பலப்படுத்தும் வகையில்,  விழிப்புணர்வுத் தொடர் நிகழ்ச்சி ஒன்றை ஸ்வீட்டியும் அபியும் சேர்ந்து நடத்துகிறார்கள் . அபியின் தோழியான சிம்ரனும் (சோனல் சவ்ஹான் ) அதற்கு உதவுகிறாள் 
ஒரு நிலையில் அபியும் சிம்ரனும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள் . அது ஸ்வீட்டிக்கு பிடிக்கவில்லை . 
இந்த நிலையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்யும் ஒரு தொழில் அதிபர் இளைஞன்,  ஸ்வீட்டியை காதலிக்கிறான் . அதை  ஸ்வீட்டியும் ஏற்கிறாள். ஆனாலும் சிம்ரனோடு அபியும் , தொழில் அதிபர் காதலனோடு ஸ்வீட்டியும் இயல்பாக பழக முடியவில்லை .
இந்த நிலையில் ஸ்வீட்டிக்கும் தொழில் அதிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ,  தாலி காட்டும் நாளும் வருகிறது . ஸ்வீட்டியால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. அபிக்கும் நிம்மதி இல்லை . 
inji 2
யாரோடு யார் ஜோடி சேர்ந்தார்கள்? கிட்னி பாதிக்கப்பட்ட தோழி காப்பாற்றப் பட்டாளா?  தவறான உடல் குறைப்பு சிகிச்சை செய்யும் அயோக்கியன் அம்பலப்படுத்தப் பட்டானா என்பதே … இந்த இஞ்சி இடுப்பழகி . 
உருவத்திலும் நடிப்பிலும் பிரம்மாண்டமாகக் கவர்கிறார் அனுஷ்கா .சபாஷ்கா . பல காட்சிகளில் உண்மையான குண்டு உடலோடும் சில காட்சிகளில் எக்ஸ்டிரா துணி சுற்றியும் அனுஷ்காவை  ஃபிரேமுக்குத்  தயார் செய்து இருக்கிறார்கள்.
ஆனால் குண்டுப் பெண் என்பதற்காக பின்புறத்தை அவ்வளவு பெரிதாகவா காட்ட வேண்டும் . அதுவும் சில காட்சிகளில் அதற்காகவே பக்கவாட்டில் நிற்க வைத்துப் பதை பதைக்க வைக்கிறார்கள் (என்ன ரசனையோ! இதற்கெல்லாம் ஒத்துக் கொண்ட அனுஷ்காவின் தைரியத்தை வேண்டுமானால் பாராட்டலாம் )
ஆர்யா , சோனல் இருவரும் ஒகே . அம்மாவாக வரும் ஊர்வசி நடிப்பில் கவர்கிறார். 
படத்தின் ரிச்னெஸ் கண்ணுக்கு குளிர்ச்சி !
இன்னொருவன் தாலி கட்டப் போகும் முன்னாள் காதலியை தாலி,  கட்டப் போவதற்கு கொஞ்ச நேரம் முன்பு கதாநாயகன் போய் முழு அலங்காரக் கோலத்தில் பார்க்கிற மாதிரி காட்சி வைப்பது,  இந்தக் குடும்பத்து இயக்குனர்களின் குல வழக்கம் போல . தாத்தா வசந்த மாளிகை படத்தில் வைத்த காட்சியை, பேரன் இந்தப் படத்தில் வைத்து இருக்கிறார் . 
inji 3
அடிப்படையில் இது தெலுங்குப் படம். எனினும் பல காட்சிகளை நேரடியாக தமிழிலும் எடுத்துள்ளனர் அது கூட ஒகே . 
ஆனால்  டைலர் கடையில்,  அனுஷ்காவின் பரந்த வெற்று முதுகில் கை வைத்து அழுத்தி,  டைலரே  ஜாக்கெட் போட்டு விடுவதும் (ஓரிரு நாட்களில் தைத்து முடிப்பதற்குள் ஸ்வீட்டி  குண்டாகி விட்டதால் ஜாக்கெட்டை போட முடியலியாம் . இதான் சீன்!) ஸ்வீட்டியின் அம்மா அதற்கு ஒத்தாசை செய்வதும் … இது பக்கா தெலுங்குப் படம் என்பதை சொல்லாமல் சொல்லிடுச்சு . முடியலீங்க .
சைக்கிளில் வரும் மகா குண்டுப் பையன் அனுஷ்காவிடம் ஐ லவ் யூ சொல்லும் காட்சியும் அப்படியே 
குண்டான பெண்ணின் பிரச்னையை சொல்வதா?  தவறான உடல் குறைப்பு சிகிச்சை பற்றிப் பேசுவதா ? காதல் குழப்பங்களைச்  சொல்வதா என்பதில் இயக்குனருக்கு ஏகக் குழப்பம் . 
இஞ்சி இடுப்பழகி … ஆஹா காரம் இல்லை . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →