நடிகர் சந்தானம் தனது ஹேண்ட் மேட் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, ஆஸ்னா சவேரி, அகிலா கோவிந்த் உடன் நடிக்க, முருகானந்தம் இயக்கி இருக்கும் படம் இனிமே இப்படிதான்.
ரசிகர்கள் எப்படிச் சொல்வார்கள்? பார்க்கலாம் .
ஜாதகப்படி குருபலம் இன்னும் மூணு மாதங்கள்தான் இருக்கும் என்ற நிலையில், சீக்கிரம் தன் மகனுக்கு (சந்தானம்) விரைவில் ஒரு பெண்ணைப் பார்த்து சட்டு புட்டுன்னு கல்யாணம் முடிக்க துடிக்கிறார்கள் அந்த அப்பா அம்மா (நரேன்- பிரகதி)
“பெற்றோர் வசதியான இடத்துக்கு ஆசைப்பட்டு சுமாரான பெண்ணை தலையில் கட்டி வைத்து விடுவார்கள்” என்று அவனை பயமுறுத்தும் டைலர் ரவிக்கை சந்திரன் (வி டி வி கணேஷ், ) சூப்பர் பிகரை லவ் செய்து கரெக்ட் செய்த மொக்கை பார்ட்டி!. எனவே டைலர் சொல்வதை நம்புகிறான் .
அப்பா அம்மா பெண் பார்ப்பதற்குள் ஒரு பெண்ணை லவ் பண்ணி கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்து களம் இறங்குகிறான் . அப்படியே ஒரு பெண்ணை (ஆஸ்னா) பார்த்து காதல் கொள்கிறான். ஆனால் படு கோபக்காரியான அவள், பதிலுக்கு காதலை சொல்லாததால் நாயகனால் பெற்றோரிடம் பேச முடியவில்லை.
இதற்கிடையில் பெற்றோரும் ஒரு கோபக்கார மிலிட்டரி ஆபிசரின்(பெப்சி விஜயன்) மகளை (அகிலா கோவிந்த்) பெண் பார்த்து நிச்சயம் வரை போகின்றனர். காதலி நம்மை ஏற்க மாட்டாள் என்று நொந்து, நிச்சயத்துக்கு சம்மதிக்க, நிச்சயம் முடிந்த பிறகுதான் காதலி தன்னை காதலிப்பது நாயகனுக்கு தெரிகிறது
அம்மாவின் அண்ணனான தாய்மாமன்( தம்பி ராமையா) , ஊரில் தங்கைக்கும் தனக்கும் பொதுவாக உள்ள வீட்டை தன் பெயருக்கு மட்டும் எழுதி வாங்க தங்கையின் கையெழுத்தை எதிர்பார்த்து வந்திருக்கிறான் . பையன் கல்யாணம் நல்லபடியாக முடிந்த பிறகு பார்க்கலாம் என்று தங்கை கூற, எப்படியாவது தங்கை ஆசைப்படும் பெண்ணை அவளது மகனுக்கு கட்டி வைத்து விட்டால் சொத்து நமக்கு வந்து விடும் என்று அவன் செயல்படுகிறான் .
தான் காதலிப்பதை சொல்லி நிச்சயித்த திருமணத்தை நிறுத்த நாயகன் முயற்சி செய்ய , அந்தத் தாய்மாமனோ “உடனே ஏதாவது பேசி பிரச்னையை வளர்த்துக் கொள்ளாதே . மெதுவாக பிளான் செய்து நீ காதலிக்கும் பெண்ணையே திருமணம் செய்து கொள்ளலாம்” என்று சொல்கிறான் .
சமயம் பார்த்து பிரச்னையை சொல்லலாம் என்று நினைக்கும் நாயகன், தாய் மாமன் சொல்கிறபடி காதலியுடனும் சந்தோஷமாக இருக்கிறான். மென்மையான குணம் கொண்ட அந்த நிச்சயித்த பெண்ணோடும் பழகியபடி அவளிடம் உண்மையை சொல்ல சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்.
இந்த நிலையில் இரண்டு பெண்களுக்கும் விஷயம் தெரிய வர , அப்புறம் என்ன ஆனது என்பதே , இந்த இனிமே இப்படித்தான் .
படத்தின் துவக்கம் முதல் கடைசி வரை காமெடி திருவிழா நடத்துகிறார் சந்தானம் . அவர் பேசும் பெரும்பாலான வசனங்கள் சிரிப்பையோ கைதட்டலையோ பெற்று விடுகின்றன. குறை சொல்ல முடியாதபடி நடனம் ஆடுகிறார் . ஒண்ணே ஒண்ணு என்றாலும் அந்த சண்டைக் காட்சியும் சிறப்பு . கடைசியில் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு மனம் கலங்க வைக்கும் காட்சியிலும் சிறப்பாக செய்து இருக்கிறார் .
ஆஸ்னா சவேரி அழகு, கோபம் , கவர்ச்சி , அதிரடி எல்லாவற்றுக்கும் பொருத்தமாக நடித்துள்ளார். அகிலா கோவிந்த் குடும்பக் குத்து விளக்காக ஈர்க்கும்படி நடித்துள்ளார் . காட்சிகள் கம்மி என்றாலும் லவவரை விட இந்த பொண்ணுதான் நல்லா இருக்கு என்றும் சொல்லும் அளவுக்கு ஜமாய்க்கிறார்.
தொடர்ந்து வெடிக்கும் சந்தானத்தின் காமெடி வெடிகளுக்கு மத்தியிலும் அட்டகாசமாக காமெடி ராக்கெட் விட்டு தன்னை அழகாக தக்க வைத்துக் கொள்கிறார் தம்பி ராமையா . சூப்பர் சார் .
வழக்கமாக நன்றாக நடிக்கும் நரேன் இதில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங். என்னாச்சு சார்?
கதைப்படியும் கேரக்டர்படியும் கலப்பே இல்லாத தமிழ்ப் பையன் கேரக்டர்களுக்கு அம்மாவாக….
மலையாள வாசனையுடனோ இல்லை தெலுங்கு வாசனையுடனோ அல்லது அரபி, குஜராத்தி, போஜ்புரி, பெங்காலி , அசாமி. வாசனையுடனோ தமிழைக் கொலை செய்து பேசும் அம்மா நடிகைகளை நடிக்க வைக்கும் அநியாயத்தை…
இனியாவது இயக்குனர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் . இதில் பிரகதி தெலுங்கு வாசனையில் தமிழ் பேசுகிறார் . பின்னணிக் குரலையாவது பேச வைங்கய்யா யோவ் !(இதை சந்தானம் பாணியில் பேசியபடி படிக்கவும்)
கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு, ஏ. ஆர் . மோகனின் கலை இயக்கம் இரண்டும் சிறப்பு. சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் இனிமையாக இருக்கின்றன. செழுமையாக படமாக்கப்பட்டு இருக்கின்றன . தீம் மியூசிக் சூப்பர் .
கொடுக்கப்படுகிற பாமாவா இல்லை எடுத்துக் கொள்கிற ருக்மணியா என்ற ரீதியில் பழக்கமான முதல் பாதிதான் . ஆனால் அதை வெகு சுவாரஸ்யமாக கொண்டு செல்வதில் இயக்குனர்களின் சுவையான காட்சிகள்,சந்தானத்தின் காமெடி அதிரடிகள், ரூபனின் படத் தொகுப்பு மூன்றும் அனாயாசமாக ஜெயிக்கின்றன
அது கூட பெரிய விஷயம் இல்லை . இதுவரை தமிழ் சினிமாவில் இது போன்ற கதைகளில் சிவாஜி, ஜெமினி , சிவகுமார், மோகன் நடித்த படங்களில் பாதிகப்பட்ட இரண்டு பெண்களும் இரண்டாவது பகுதியில் பரிதாபமாக அநியாயமாக நிற்பார்கள்.
இதுவரை வந்த படங்களில் இருக்கும் அதுபோன்ற கிளிஷேக்களை எல்லாம் அடித்து உடைத்து நொறுக்கி அள்ளிக் கொட்டிய விதத்தில் ஓ போட வைக்கிறார்கள் இயக்குனர்கள் . அதை ஒத்துக் கொண்ட சந்தானத்தையும் பாராட்ட வேண்டும் . சபாஷ் !
நாயகன் வித்தியாசமான முறையில் கிஃப்ட் கொடுக்க , அதன் தொடர்ச்சியாக காதலி ஒரு காரியம் செய்ய, அதன் தொடர்ச்சியாக ஏற்படும் அந்த அச்சச்சோ திருப்பம்தான் இந்த திரைக்கதையின் நிஜமான அப்பா டக்கர் .
அதே போல வேறு பெண்ணுடனான திருமணம் விஷயம் காதலிக்கு தெரிந்து விட்டதை நாயகன் தெரிந்து கொள்ளும் காட்சி… அடுத்து காதலி நாயகனை வர வைத்து பேசும் காட்சி… இரண்டையும் படமாக்கிய விதம், இந்த படத்தின் டைரக்ஷனின் நிஜமான அப்பா டக்கர் .
அதன் பிறகு மொட்டை மாடியில் நாயகனிடம் மணப்பெண் கதாபாத்திரம் பேசும் விதம்.. படத்தில் உள்ள அனைத்து கேரக்டரைசேஷன்களிலும் மிக சிறப்பான அப்பா டக்கர் .
‘வெயிட்’டான அந்த கிளைமாக்ஸ் படம் பார்க்கும் யார் மனசிலும் சின்ன குடிசையாவது போட்டு உட்காரும் . அந்த அளவுக்கு நிஜமாகவே மனதை நெகிழ வைக்கிறது .
இனிமே இப்படிதான் … ஸ்கிரிப்ட் டக்கர்
மகுடம் சூடும் கலைஞர்கள்
—————————————————-
முருகானந்தம், சந்தானம் , கோபி ஜெகதீஸ்வரன், சந்தோஷ் தயாநிதி, ரூபன், அகிலா கோவிந்த்,