இன்று நேற்று நாளை@ விமர்சனம்

indru 3
திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் மற்றும் ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இருவரும் தயாரிக்க, விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் நடிப்பில், அறிமுக இயக்குனர்  ரவிக்குமார் இயக்கி இருக்கும் படம் ‘இன்று நேற்று நாளை’ .

 ரசிகர்கள் மனதில் நாளை நிலைக்குமா இந்தப் படம் ? பார்க்கலாம்.

கி.பி. 2065 ஆவது வருடம் !

அப்போதைய (அதாவது வருங்காலச் ) சென்னை .

அதி நவீன டைம் மெஷின் ஒன்றை (இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் பயணிக்க முடிகிற –நான்காவது பரிமாணமான –கால இயந்திரம் ) கண்டு பிடிக்கும் இளம் விஞ்ஞானி ஒருவர் (கவுரவத் தோற்றம் ஆர்யா), அதை பரிசோதிக்கும் முயற்சியாக  , நாம் இப்போது வாழும் 2015 ஆம் ஆண்டுக்கு– அதாவது அவரைப் பொறுத்தவரை இறந்த காலத்துக்கு — ஒரு குறிப்பிட்ட தேதி , மணி, நிமிடம் நொடியை செட் பண்ணி,  அனுப்பி வைக்கிறார் .

இந்த கி.பி 2015 ஆம் வருடம் !

வித்தியாசமான கண்டு பிடிப்புகள் , அதன் மூலம் புதிய தொழில்கள்…. இப்படி ஏதாவது சாதிக்கும் லட்சியம் கொண்ட இளைஞன்  இளங்கோ  (விஷ்ணு விஷால்) .   தொழில் தொடங்கும் அவன் முயற்சிகளுக்கு வங்கிகள் உட்பட யாரிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காத நிலையில்,

ஏதாவது ஒரு வேலை,  எதோ ஒரு மாத வருமானம்,  வழக்கமான வாழ்க்கை என்பதில் விருப்பம் இல்லாத அவனுக்கு,  வாழ்க்கையே போராட்டக் களமாக இருக்கிறது .

 இளங்கோவின் நெருங்கிய நண்பன் , ஜோசியர் என்ற பெயரில் குப்பை கொட்டிக் கொண்டு இருக்கும் புலிவெட்டி ஆறுமுகம் (கருணாகரன்) . இளங்கோவுக்கும் அனு என்ற கோடீஸ்வர இளம்பெண்ணுக்கும் (மியா ஜார்ஜ் ) காதல். காதல் விஷயம் பெண்ணின் அப்பாவான ராஜத்னத்துக்கு (ஜெயப்பிரகாஷ்) தெரிய வருகிறது .

தனது காதலன் வேலை இல்லாதவான் என்று சொன்னால் அப்பா சம்மதிக்க மாட்டார் என்ற நிலையில் , அவனை ஒரு பெரிய ஷேர் மார்க்கெட் நிபுணன் என்று சொல்கிறாள் அனு .

அவனை சந்திக்க வேண்டும் என்று சொல்லும் ராஜரத்தினம் ஒரு பெரிய ஷேர் மார்க்கெட் பற்றிய விவாதக் கூட்டத்துக்கு , விஷயத்தை சொல்லாமல் வரவழைத்து, ஷேர் மார்க்கெட் திறமைசாலிகளை வைத்து சரமாரியாக கேள்வி கேட்க  வைத்து அவமானப்படுத்தி அனுப்புகிறார். நொந்து போகும் அனு , ”என்னை திருமணம் செய்து கொள்ள ஒரே வழி நீ உடனே ஒரு வேலைக்குப் போவதுதான்” என்று சொல்லி அனுப்புகிறாள்.

அந்த சோகத்தில் தண்ணி அடித்து விட்டு , புலி வெட்டி ஆறுமுகத்தோடு இளங்கோ வரும்போது , அவர்கள் வந்த காரும் , பொன் புதிர் தோட்டம் பார்த்தசாரதி (டி எம் கார்த்திக் ) என்ற அங்கீகாரம் இல்லாத விஞ்ஞானி வரும் வாகனமும் மோதி விபத்து  ஏற்படுகிறது . அப்போது அங்கு,  2065 ஆவது வருட விஞ்ஞானி அனுப்பி வைத்த டைம் மெஷின் வந்து சேர்கிறது .

பார்த்தசாரதியின் உதவியோடு,  அது டைம் மெஷின் என்பதை அறிகிறது இளங்கோ – ஆறுமுகம் கூட்டணி . இந்த இருவரையும் ஏமாற்றி விட்டு டைம் மெஷினை இருவருக்கும் தெரியாமல் திருட முயலும் பார்த்தசாரதி , எதிர்பாராத வகையில் வலுவான கரண்ட் ஷாக் அடித்து கோமா நிலைக்கு போகிறான் .

டைம் மெஷினில் ஏறும் இளங்கோவும் ஆறுமுகமும் ,  பார்த்தசாரதிக்கு ஷாக் அடித்த நிமிடத்துக்கு போய் , அவன் தன்னை ஏமாற்ற முயன்றதை அறிகிறார்கள் .

டைம் மெஷினை வைத்து எப்படி சம்பாதிப்பது என்று திட்டமிடுகிறார்கள். சுதந்திரத்துக்கு முன்பு தங்கம் விலை சவரனுக்கு பதினாறு  ரூபாய் என்பதை அறிந்து கொண்டு , இன்றைய பணம் சுமார் ஐயாயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு டைம் மெஷின் ஏறி 1940களுக்கு முந்தைய சென்னைக்கு போகிறார்கள் . அங்கு மகாத்மா காந்தியைப் பார்கிறார்கள். ஒரு நகைக்கடையில் சுமார் எண்ணூறு பவுன் நகை வாங்குகிறார்கள் .

அதை இப்போது இந்த 2015க்கு கொண்டு வந்து விற்றால் சுமார் இரண்டு கோடி ரூபாய் கிடைக்குமே . ஆனால் நகை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்கும்போது , இப்போது உள்ள நோட்டை பார்க்கும் நகைக்கடை அதிபர் , அது கள்ள நோட்டு என்று எண்ணி போலீசுக்கு தகவல் சொல்ல, அங்கிருந்து தப்பித்து வந்து விடுகிறார்கள். அந்தப் பயணத்தால் பலன் இல்லாமல் போகிறது .

indru 1

ராஜ ரத்னத்துக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தின் விற்பனை விசயத்தில் தலையிடும் தாதாவான குழந்தை வேலுவை (ரவி ஷங்கர்),  போலீசில் சிக்க வைக்க ராஜரத்தினம் முயல்கிறார் .

அந்த முயற்சியில் குழந்தை வேலு தப்பித்து ஓட , அவனுக்கு துணையாக எப்போதும் வருகிற — அவன் சைகையிடும் ஆட்களை கடித்துக் குதறும்- ஒரு  நாயின் சங்கிலி,  வழியில் ஒரு கம்பியில் சிக்கிக் கொள்கிறது . எனவே நாயால் குழந்தை வேலுவுக்கு உதவமுடியாமல் போக,  தாதா குழந்தை வேலு போலீசால் சுடப்பட்டு மரணம் அடைகிறான் .

இந்த நிலையில் டைம் மெஷினையும் ஜோசியத்தையும் ஒன்றிணைக்கிறார்கள் இளங்கோவும் ஆறுமுகமும்!

முக்கியமான பொருட்களை தொலைத்த யாராவது இவர்களிடம் வந்து,  எப்போது எங்கே தொலைந்தது என்று சொன்னால் போதும் . அவர்கள் புலிவெட்டி ஆறுமுகத்திடம் சொல்வது பக்கத்து அறையில் மறைந்து இருக்கும் இளங்கோ காதில் விழும் . அவன் உடனே டைம் மெஷின் ஏறி அந்த நேரத்துக்குப் போய் அவர்கள் எங்கே எப்படி தொலைக்கிறார்கள் என்பதை பார்த்து வந்து போன் மூலம் ஆறுமுகத்திடம் சொல்வான் .

காதுக்குள் போனை வைத்து தலைப்பாகை கட்டி மறைத்து இருக்கும் ஆறுமுகம் , ஏதோ அருள்வாக்கு போல அதை தொலைத்த நபருக்கு சொல்ல, அவருக்கு பொருள் கிடைக்க .. இருவருக்கும் காணிக்கை குவிகிறது.

கோடி கோடியாக இருவரும் பணம் சேர்க்கிறார்கள் .

ஒரு குறிப்பிட்ட தினத்தின் முடிவில் பங்குச் சந்தைக் குறியீடு , தசமப் புள்ளி வரைக்குமான அட்சர சுத்தமாக எவ்வளவு இருக்கும் என்பது,  யாராலும் கணிக்க முடியாத ஒன்று .

ஆனால் கால இயந்திரம் ஏறி முன்னோக்கி வருங்காலத்தில் பயணிக்கும் இளங்கோ அந்த நாளின் இரவுக்கு முன் கூட்டியே போய் , பங்குச் சந்தை இறுதிக் குறியீட்டுப் புள்ளிகளைப் பார்த்து , குறித்துக் கொண்டு மீண்டும் நிகழ்காலத்துக்கு வந்து ,  அதை முன்கூட்டியே சொல்கிறான் .

அனைவரும் அவனை நம்பாமல் பார்க்க, அவன் சொன்னது அப்படியே மாலையில் நடக்க, எல்லோரும் அவனை ஜீனியஸ் என்று கொண்டாடுகிறார்கள் .

அப்புறம் என்ன? அவனை தனது மருமகன் ஆக்கிக் கொள்ள சம்மதிக்கிறார் ராஜ ரத்னம் .

இந்த சூழ்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் ஐ என் ஏ ராணுவத்தின் பணியாற்றிய பெரியவர் ஒருவர் (வி எஸ் ராகவன் ) , தனக்கு ”நேதாஜி அணிவித்த பதக்கம் காணாமல் போய்விட்டது . அதைக் கண்டு பிடித்துத் தர வேண்டும்” என்று கூற , அவருக்காக டைம் மெஷினில் பயணிக்கும்  இளங்கோவும் கருணாகரனும் பதக்கம் தொலைந்த நேரத்துக்கு பயணிக்கிறார்கள்.

அந்தப் பதக்கம் தொலைந்த ந்த நிமிடத்தை  வைத்து அது தவறி விழும் யாடத்தை பார்த்து அதை எடுக்க முயல, அந்த பதக்கம் நழுவி …

குழந்தை வேலுவின் நாயின் சங்கிலி கம்பியில் மாட்டிக் கொண்ட இடத்தில் விழுகிறது. , பதக்கத்தை எடுக்கும் ஆவலில் ஆறுமுகம் நாயின் சங்கிலியை சிக்கலில் இருந்து எடுத்து விடுகிறான் .

கால நிகழ்வில் எல்லாம் மாறுகிறது . அதாவது இவர்களுக்கு பதக்கம் கிடைக்கும் அதே நேரம் , நாய் தனது எஜமானன் குழந்தை வேலுவுக்கு உதவ பாய்ந்து போகிறது . அங்கே குழந்தை வேலுவை கொல்ல வரும் போலீஸ் அதிகாரி மீது நாய் பாய்கிறது . போலீஸ் அதிகாரி இறக்கிறார் . குழந்தை வேலு பிழைக்கிறான் .

இது தெரியாத இளங்கோவும் ஆறு முகமும் கால இயந்திரம் ஏறி நிகழ் காலத்துக்கு வந்து விட , இப்போது உயிரோடு வரும் குழந்தை வேலு, தன்னை போலீசில் மாட்டி விட முயன்ற ராஜரத்தினத்தை கொலை செய்ய முயல்கிறான் . அதை தடுக்கும் முயற்சி காரணமாக இளங்கோவும் குழந்தை வேலுவுக்கு எதிரி ஆகிறான் .

இதனால் இளங்கோ – அனு திருமணம் தள்ளிப் போகிறது.

இப்போது பிரச்னை தீர ஒரே வழி … மீண்டும் கால இயந்திரம் ஏறி குழந்தை வேலுவை போலீஸ் துரத்திய அந்த நாளுக்கு போய் , அந்த நாயை  கட்டிப் போடுவதுதான் . எப்படியாவது நாயை தடுத்து அது குழந்தை வேலுவுக்கு உதவி செய்ய முடியாமல் போய் விட்டால்,  குழந்தை வேலு செத்து விடுவான் . யாருக்கும் ஆபத்து இல்லை . கல்யாணம் நல்லபடியாக நடக்கும் .

அதை செய்வதற்காக இளங்கோ , ஆறுமுகம் இருவரும் கால இயந்திரத்தில் ஏற …

அய்யகோ ! அந்தோ ! அம்மவோ ! கால இயந்திரம் ரிப்பேர் ஆகி விடுகிறது . அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்தப் படம் .

indru 4

ஒரு திரைப்பட  விமர்சனத்தில்….

கதையை மட்டும் இவ்வளவு நேரம் படித்தும் , உங்களுக்கு பெரிதாக எந்த குழப்பமும் இல்லையா ? ரொம்ப ஆர்வமாக இருக்கிறதா ? வாழ்த்துகள்!  இந்தப் படம் உங்கள் ரசனைக்கு ஒரு தலைவாழை இலை விருந்து என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தப் படத்தில் ஹீரோ ஹீரோயின் எல்லாமே,  படத்தின் அதி அற்புதமான வெகு அட்டகாசமான திரைக்கதையும் அதில் வரும் படு சுவாரஸ்யமான டுவிஸ்ட்களும்தான் .

இப்படி ஒரு கதையிலும்,  படம் முழுக்க அட்டகாசமான நகைச்சுவை வெடிகளை வெடித்து ரசிக்க வைப்பதில் ஜொலிக்கிறார் இயக்குனர் ரவிகுமார் .

ஒரு கதாபாத்திரத்துக்கு பொன்புதிர் தோட்டம் பார்த்தசாரதி என்று பெயர் வைத்திருப்பது …

2065 ஆம் ஆண்டு சென்னையில் எல் ஐ சி கட்டிடம் இன்னும் உயரமாக இருக்கும் . அதன் அருகில் அதற்கு இணையான உயரத்துடன் டாஸ்மாக் கடை இருக்கும் என்று காட்டுவது ….   இது போன்ற  விசயங்களில் எல்லாம் இயக்குனரின் ரசனைக் குறும்பு,  கொடிகட்டிப் பறக்கிறது .

இதற்கு மேல் விமர்சனம் செய்வதற்காகக் கூட,   கதை திரைக்கதையில் எந்த விசயத்தையும் பாராட்டுவதற்காகக் குறிப்பிட்டாலும்  கூட , படம் பார்க்கப் போகும் உங்களுக்கு சுவாரஸ்யம் போய்விடும் . 

எனவே இயக்குனர் ரவிக்குமாருக்கு ஜோராக ஒரு முறை கைதட்டி விசில் அடிப்பதோடு நிறுத்திக் கொள்வோம் .

கேரக்டருக்குப் பொருந்தி இருக்கிறார் விஷ்ணு விஷால் .

அழகாக இருக்கிறார் ; இயல்பாக நடிக்கிறார் மியா ஜார்ஜ்.

 காமெடியில் கலக்குவதொடு சில பல புதிய எக்ஸ்பிரஷன்களிலும் அசத்துகிறார்  கருணாகரன் .

indru 2அந்த டைம் மெஷினின் வடிவம்,  உருவம்,  அது இயங்கும் முறை எல்லாம் அட்டகாசம் . கலை இயக்குனர் விஜய் ஆதி நாதனுக்கும் கிராபிக்ஸ் டீமுக்கும் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

ஹிப்ஹாப் தமிழாவின் இசையில்  பாடல்களும் பின்னணி இசையும் அருமை . குறிப்பாக டைம் மெஷின் தொடர்பான காட்சிகளில் பின்னணி இசை ஹாலிவுட் தரம் .

இவ்வளவு திருப்பங்கள் உள்ள கதையில்,  காட்சி அயர்ச்சி வராமல் பார்த்துக் கொள்வதில் வெற்றிகரமாக  விளையாடுகிறது வசந்தின் அழகிய ஒளிப்பதிவு . முடிந்தவரை குழப்பம் இல்லாமல் படத்தை வழங்கியதில்,  இயக்குனருக்கு மாபெரும் தொண்டாற்றி இருக்கிறது லியோ ஜான் பாலின் கூர்மையான படத் தொகுப்பு.

படத்தில் இயக்குனர் எடுத்துக் கொள்ளும் ஃபான்டசி சலுகைகளுக்கு அப்பாற்பட்டும்….. லாஜிக் தவறுகள் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் “நிகழ்காலம் மட்டுமல்ல , இறந்த காலமும் , எதிர்காலமும் கூட இப்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது ” என்ற,  அறிவியல் அறிஞர் ஒருவரின் கருத்தை படத்தின் ஆரம்பத்திலேயே போட்டு, எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வைத்து விடுகிறார் இயக்குனர் ரவிக்குமார் .

இந்தப் படம் பலாப் பழம் மாதிரி .

மேலோட்டமாகப் பார்த்தால் முள் மட்டும்தான் தெரியும்.

டைம் மெஷின் பற்றிய புரிதல் என்ற கத்தியால் அதை அறுத்துப் பிளந்து  …

 நிகழ்தகவு (PROBABILITY) பற்றிய புரிதல் எனும் எண்ணையை கையில் பூசிக் கொண்டு சவ்வுகளையும் பிரித்து….

 உள்ளே போனால்,  ‘அற்புத ரசனை அனுபவம்’ என்னும் பலாச்சுளை காத்திருக்கிறது . அதையும் தேனில் ஊற வைத்து , பரிமாறி வைத்திருக்கிறார் இயக்குனர் ரவிகுமார் .

மொத்தத்தில் ..
இன்று நேற்று நாளை …. என்றும் நன்றே !

மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————–

ரவிகுமார் , விஜய் ஆதிநாதன் , லியோ ஜான் பால், ஹிப் ஹாப் தமிழா , வசந்த்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →