தமிழின் முதல் வண்ணப்படம் எது ? சினிமாஸ்கோப் எது? 70 எம் எம் எது ? என்ற கேள்விகளுக்கு முறையே அலிபாபாவும் நாற்பது திருடர்களும், ராஜ ராஜ சோழன், மாவீரன் என்று பதில்கள் இருக்கிறது அல்லவா?
அதுபோல தமிழின் முதல் 3டி படம் எது என்ற கேள்விக்கு அம்புலி என்ற பதிலை உருவாக்கிய படைப்பாளிகளே அடுத்து தமிழின் முதல் திகில் கதைத் தொகுப்புப் படம் (ஹாரர் ஆந்தாலாஜி) எது என்ற கேள்விக்கு பதிலாக உருவாக்கிக் கொண்டிருக்கும் படத்தின் பெயர் ஆ .
ஓர் இரவு, அம்புலி ஆகிய படங்களை இயக்கிய ஹரி மற்றும் ஹரீஷ் இரட்டை இயக்குனர்கள் (முழுப் பெயர்கள் முறையே ஹரி ஷங்கர் மற்றும் ஹரீஷ் நாராயணன்) அம்புலி படத்தை தயாரித்த அதே என்ஜினியர் வி.லோகநாதன், டாக்டர் வி.ஜனநாதன், என்ஜினீயர் ஸ்ரீனிவாஸ் லோகநாதன் ஆகியோரின் தயாரிப்பில் உருவாக்கிக் கொண்டு இருக்கும் படம் ஆ .
அம்புலி படத்தில் விஞ்ஞானத்தையும் அமானுஷ்யத்தையும் கலந்து ஒரு வித்தியாசமான உருவத்தைக் காட்டி வீறிட வைத்தவர்கள் இதில் ஐவகைப் பேய்களின் உதவியோடு அலற வைக்க வருகிறாகள் .
”பேய் இருக்கு”.. ”பேய் இல்லை” என்று இரண்டு எதிர் துருவங்களில் நின்று விவாதிக்கும் ஒரு குழுவின் பயண அனுபவங்களாக வரும் இந்தப் படத்தில்…
தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் பொது ஒரு பேய் வருகிறது .
பெர்முடா முக்கோணம் என்ற இடத்தில் பயணிக்கும் கப்பல்கள் மேலே பறக்கும் விமானங்கள் கடலுக்குள் இருந்து வரும் சக்தியால் ஈர்க்கப்பட்டு கடலில் மூழ்கி விடுவதாக கூறப்படுகிறது அல்லவா? அதே போல சென்னை அருகே வங்காள வளைகுடாவில் இருக்கிற மந்திக் குழி என்ற இடத்தில் ஒரு படகு பயணிக்கும்போது அங்கே ஒரு பேய் வந்து அதனால் என்ன ஆகும் என்பது ஒரு கதை .
நெடுஞ்சாலையில் உள்ள ஏ டி எம் மில் இரவில் தன்னந்தனியாக இருக்கும் ஒரு காவலாளி ஒரு பேயிடம் மாட்டிக் கொண்டு படும் பாடு என்ன என்பதை இன்னொரு கதை சொல்கிறது .
இப்படிப்பட்ட உள்ளூர் பேய்களோடு ஜப்பான் நாட்டுப் பேய் ஒன்றும் வருகிறது இதற்கான படப்பிடிப்பை ஜப்பான் டோக்கியோவில் உள்ள கிரியேச்சர் என்ற ஸ்டுடியோவில் நடத்தி உள்ளார்கள்.
இதுதவிர அரேபியாவில் ஜின்னி, ஜினிரி , ஜினியா என்று விதம் விதமான பேய்கள் உண்டாம். அவற்றில் ஒரு பேய் சம்மந்தப்பட்ட காட்சிகளை துபாயில் படமாக்கி இருக்கிறார்கள்.
இப்படி ஒரு வித்தியாசமான படத்துக்கான டிரைலர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லத் தேவை இல்லை. அப்படியே இருந்தது ஆ படத்தின் டிரைலர்
அடக்கத்தோடும் அதே நேரம் உற்சாகமாகவும் பேசுகிறார்கள், ஹரி மற்றும் ஹரீஷ் இரட்டை இயக்குனர்கள்
“அம்புலி படத்தில் அம்புலியாக வரும் கோகுலின் நிஜ முகம் கடைசிவரை படத்தில் வராது . அதை சொல்லி அவரை நடிக்கக் கேட்டபோது அவர் உடனே ஒத்துக் கொண்டார். ஆனால் படம் பார்த்த அவரது அம்மாதான் ‘கடைசி வரை என் புள்ள முகத்தை காட்டாம விட்டுட்டீங்களே’ன்னு திட்டினார். இந்தப் படத்தில் அவர்தான் ஹீரோ .
அதே போல ஏ டி எம் பேய் கதைப் பகுதியில் இருபது நிமிடம் வரை ஒரே நடிகர் நடிக்க வேண்டிய இடம் அது. அதற்கு மிகப் பொருத்தமானவர் என்று எம் எஸ் பாஸ்கர் அவர்களை முடிவு செய்து நடிக்க அழைத்தோம் . அவரும் பிரம்மாதமாக நடித்து இருக்கிறார் ” என்கிறார் ஹரீஷ் நாராயண்
“அம்புலி படத்தை 3டி யில் எடுத்திருந்தோம் . இதற்கு புதுமையாக என்ன செய்யலாம் என்று யோசித்து சிறப்பான ஒலி கொடுக்கலாம் என்று இதை ஆரோ 3 டி சவுண்டு சிஸ்டத்தில் எடுத்து இருக்கிறோம் ” என்கிறார் ஹரி ஷங்கர்)
படத்தின் தான் நடித்த பகுதி பற்றி பேசிய எம் எஸ் பாஸ்கர் மேற்கொண்டு “ஒரு தடவை நான் நாடு இரவில் காரில் பயணிக்கும்போது ஆள் உருவில் வெண்ணிறப் புகை போல ஒன்று சாலையில் காருக்கு முன்னாள் மிதந்து போனது . நான் அதை டிரைவரிடம் காட்டியபோது ”அதெல்லாம் நிறைய இருக்கு சார்” என்றார். அது நிஜமான உருவமா இல்லை புகையான்னு உறுதியா சொல்ல முடியல” என்று முன்னோட்ட விழாவிலேயே ‘மூட் கிரியேட்’ பண்ணிவிட்டுப் போனார்.
படத்தின் தயாரிப்பாளர் லோகநாதன் “முந்தைய படத்துக்கு பேரு அம்புலி . அது அ என்ற எழுத்தில் துவங்கியது . இந்த படத்துக்கு அ வுக்கு அடுத்த எழுத்தான ஆ ன்னு பேரு சொன்னாங்க . நல்லா இருந்தது. அதையே பெயரா வச்சோம்” என்றார் ( அடுத்து எடுக்கப் போற படத்துக்கு ‘இ…ருட்டு’ன்னு பேர் வைக்கலாமா டைரக்டர்ஸ் ?’)
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கே ஆர் பேசும்போது ” ஒரு படத்தை முடிச்சு ரிலீஸ் பண்ணிட்டு அடுத்த படத்திலும் அதே இயக்குனர்களும் தயாரிப்பாளரும் சேர்ந்து வேலை செஞ்சு படத்தையும் நல்லபடியா முடிச்சுட்டாங்கன்னா என்ன அர்த்தம் ? அந்த டைரக்டர்கள்கிட்ட நேர்மை இருக்குன்னு அர்த்தம் ” என்று படைப்பாளிகளை பாராட்டியதோடு
“நான் இந்தப் படத்தின் பல பகுதிகளை பார்த்துட்டேன் . கண்டிப்பாக படம் வெறி பெரும் ” என்று படத்தையும் பாராட்டி விட்டுப் போனார் .
ஆ..ஹா என்று வெற்றி பெற வாழ்த்துகள் !