‘ஆஸ்கார் ரவிச்சந்திரனை ஏன்தான் ஐ படத்தக்கு தயாரிப்பாளர் ஆக்கினோமோ..’ என்ற சங்கடத்தில் ஷங்கரும் விசனத்தில் விக்ரமும் சிக்கித் தவிக்கிறார்கள் .
அந்த அளவுக்கு தனது உட்டாலக்கடி வேலைகளால் எல்லோரையும் ஒரு வழி செய்து கொண்டு இருக்கிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன் .
அந்தக் காலம் முதலே அவர் சர்ச்சைக்குரியவர் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்
தசாவதாரம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஜாக்கி சானுடன் கலந்து கொண்ட அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி , நிகழ்ச்சி முடிந்ததும் “எங்கய்யா தயாரிப்பாளரை ஆளையே காணோம் ?” என்று கேட்டபோது “அவரு பொது மேடையில் எல்லாம் தலை காட்ட மாட்டாரு ” என்ற பதில் வர , “அப்போ…. அவரு நிகழ்ச்சிக்கு வந்து இவ்வளவு நேரம் இருந்த எங்களுக்கு என்னய்யா மரியாதை ?” என்று சிடுசிடுத்து விட்டு போனார்.
என்னமோ தெரியவில்லை .
எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இவர் கலந்து கொள்ளாமல் மறைந்தே கிடப்பதால் இவர் சம்மந்தமான ஒரு போட்டோ கூட வெளியே இல்லை .
பல வருடங்களுக்கு முன்பு தனது போட்டோவை ஒரு பத்திரிக்கை பிரசுரித்து விட , பதறி அடித்து அந்த பத்திரிக்கை அலுவலகத்துக்கே போன ஆஸ்கார் ரவிச்சந்திரன் போட்டோவை வாங்கிக் கொண்டு வந்த பிறகுதான் நிம்மதியாக தூங்கி இருக்கிறார்.
(ரயிலில் விமானத்தில் பயணம் செய்யும்போது கவனம். உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து இருப்பவர் கூட ஆஸ்கார் ரவிச் சந்திரனாக இருக்கலாம்)
யாருக்கு பயந்து இந்த முகமறைவுப் படலம் என்பது இன்று வரை புரியாத புதிர் !
கமல்ஹாசனின் விஸ்வரூபம் பார்ட் டூ வின் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தின் கிராபிக்ஸ் வேலைகளுக்கு தேவைப்படும் பணத்தை கொடுக்காததால், அந்தப் படத்தை தூக்கி ஓரம் வைத்து விட்டு ,
உத்தம வில்லன், பாபநாசம் என்று அடுத்தடுத்த படங்களுக்கு போய் விட்டார் கமல்ஹாசன்.
நஸ்ரியா நடிக்க வந்த போது இவர் படமாக்க ஆரம்பித்த திருமணம் எனும் நிக்காஹ் படம் நஸ்ரியாவின் திருமணம் உறுதியாகும்வரை வெளிவரவில்லை .
அப்புறம் ரிலீஸ் ஆனாலும் நிச்சயதார்த்தம் நடப்பதற்குள் பெட்டியில் சுருண்டது.
இவரது தயாரிப்பில் மூணு ஜென்மத்துக்கு முன்பு ஜெயம் ரவி நடிக்க ஆரம்பித்த பூலோகம் என்ற படம், ஜெயம் ரவி இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும் வெளிவராது போல!
ஆனாலும் சற்றும் அசராமல், ஐ படத்திலும் இவர் செய்யும் அஜால் குஜால் வேலைகள் தொடர்கின்றன.
இந்தப் படத்துக்காக தங்களது கேரியரில் மூன்று வருடத்தை பயன்படுத்தி இருக்கும் ஷங்கர் , விக்ரம் இருவருக்குமே சம்பளம் சரியாக தரப்படவில்லையாம்.
இவர்கள் படைப்புக்காக உழைப்பார்கள். ஆனால் நடிகைகள் அப்படி இருப்பார்களா?
படத்தில் நடிக்கும் வெள்ளைக்கார நடிகை எமி ஜாக்சனுக்கு தரவேண்டிய சம்பளத்தை சொன்னபடி தராமல் இழுத்தடிக்க , சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார் எமி .
படத்தில் விக்ரமும் எமியும் நடிக்கும் ஒரு பாடலுக்காக பிரம்மாண்டமான செட் ஒன்றை போட்டு விட்டு படப்பிடிப்புக்கு எமியை அழைக்க ,
வருவது போல வந்த அவர், சம்பளம் சொன்னபடி தராததைக் காரணம் காட்டி டாட்டா காட்டி விட்டு பறந்து விட்டார் .
பல நாள் காத்திருந்தும் பலன் இல்லாததால் வெளுத்து வீணாகியது அந்த அரங்கு .
இப்போது அந்தப் பாடல் காட்சியையே எடுக்கப்போவதில்லை என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது .
ஷங்கர் இயக்கும் படத்தில் பணப் பிரச்னையால் ஒரு பாடல் காட்சி எடுக்கப்படவில்லை என்ற அவமான வரலாறும் இதனால் எழுதப்பட்டு விட்டது.
இன்னொரு பக்கம் செப்டம்பர் பதினைந்தாம் தேதி நடக்க இருக்கும் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு பெரும் செலவு செய்து ஹாலிவுட் நடிகர் ஆர்னால்டு சுவாஷ்நெகரை அழைத்து வருகிறார்கள் .
ஆனால் படத்தில் சோறுபோட்ட ஊழியர்கள் பாத்திரம் கழுவும் பஞ்சைகள் எல்லோருக்கும் சம்பளப் பாக்கி .
”ஆர்னால்டை அழைச்சுட்டு வர காசு இருக்கு . ஜாக்கி சானை அழைச்சுட்டு வர காசு இருக்கு . ஆனா எங்களுக்கு சில ஆயிரம் ரூபாய்களை கொடுத்து சம்பள பாக்கியை செட்டில் பண்ண காசு இல்லையா?” என்று அப்பாவித் தொழிலாளர்கள் புலம்பித் தள்ளுகிறார்கள்.
“ஐ படத்தைப் பொறுத்தவரை எனக்கு தமிழ்நாடு முக்கியமில்லை. ஆந்திராதான் முக்கியம் ” என்று பிரகடனம் செய்திருக்கும் ஆஸ்கார் ரவிச் சந்திரன் , படத்தின் விளம்பரம் மற்றும் புரமோஷன் விசயத்தில் ஆந்திராவுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறாராம்.
இது ஒரு பக்கம் இருக்க எந்திரன் படத்தின் பட்ஜெட்டே 132 கோடி ரூபாய்தான் .
ஆனால் ஐ படத்துக்கு 180 கோடி ரூபாய் பட்ஜெட் என்று ஆஸ்கார் ரவிச்சந்திரன் சொல்லும் பொய் பலரையும் எள்ளி நகையாட வைக்கிறது.
இது படத்துக்கு தேவையில்லாத நெகட்டிவ் பப்ளிசிட்டியையே தரும் என்று ஷங்கரும் டென்ஷனில் இருக்கிறாராம் .
இது போக ஐ படத்தை உலகம் முழுக்க 20000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப் போகிறேன் .
சீனாவில் மட்டும் 5000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்வோம்
என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி ஆஸ்கார் ரவிச்சந்திரன் அள்ளி விடுவது ஏளனமாகப் பார்க்கப்படுகிறது.
“விட்டால் சந்திர மண்டலத்தில் 15000 தியேட்டரிலும் செவ்வாய் கிரகத்தில் 10000 தியேட்டரிலும் ரிலீஸ் செய்கிறேன் .
மங்கள்யான் விண்கலம் மூலம் எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டு விட்டது என்று சொன்னாலும் சொல்வார் போலிருக்கிறது .
அவர் முட்டாளா ? இல்லை மற்றவர்கள் எல்லோரையும் முட்டாள் என்று நினைத்துக் கொண்டு பேசுகிறாரா? என்பதே தெரியவில்லை ” என்கிறார் ஒரு சக தயாரிப்பாளர் .
ஆனால் படப்பிடிப்பு வேலைகளுக்கே காசு இல்லாமல் சேலத்திலும் காட்பாடியிலும் வேலூரிலும் தனக்கு சொந்தமான ஹிஎட்டர்களை எல்லாம் ஆஸ்கார் ரவிச்சந்திரன் விற்றுவிட்டார் என்பதுதான் உண்மை நிலவரம் .
ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம் . உள்ளார இருக்குமாம் ஈறும் பேனும் என்று .
ஆனால் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் ஒய்யாரக் கொண்டையில் புழுவும் பூச்சியும் கூட இருக்குப்போவ் !